Ad

வெள்ளி, 24 மார்ச், 2023

``யாருக்கும் அடிமையா இல்லாம ஆத்ம திருப்தியோட வாழ்றோம்!"

மனிதனின் வாழ்க்கைக்கு உணவு, இருப்பிடம், சுகாதாரம் ஆகியவை  அடிப்படையான தேவைகள். அடிப்படையான தேவைகள் கூட கிடைக்காமல்  எண்ணற்ற மக்கள் கொத்தடிமைகளாக இன்றும் சிக்கித்தவிக்கின்றனர். அரிசி ஆலைகளிலும், செங்கச்சூளைகளிலும், தேங்காய்ப்பட்டறைகளிலும் எண்ணற்ற  உழைக்கும் மக்கள் முதலாளியின் ஆதிக்கத்திற்கு  பலியாகிக் கொண்டிருக்கின்றனர். மனிதாபிமானமற்ற உழைப்பு  சுரண்டலை தடுப்பதற்கு 1976- ம் ஆண்டு கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தை  அரசு அமல்படுத்தியது. இச்சட்டத்தின் கீழ்  கொத்தடிமைகளாக இருந்த  எண்ணற்ற மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இப்படி மீட்கப்படும் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் கொத்தடிமைகள் முறையிலிருந்து மீட்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கு உரிய ஏற்பாட்டை செய்து அசத்தியுள்ளார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்.

மீன் பிடி வலை

இதுகுறித்து அறிந்துகொள்ள திருவள்ளூர் மாவட்டம், அதிகத்தூர் என்னும்  சிறு கிராமத்துக்குச் சென்றோம். அங்கு கொத்தடிமை முறையிலிருந்து மக்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு செங்கல் சூளை அமைத்துக் கொடுத்துள்ளார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்.

இதற்காக 'சிறகுகள்' என்ற திட்டத்தை தொடங்கி, கொத்தடிமைகளாக இருந்த மக்களுக்கு  பிஞ்சிவாக்கத்தில்   செங்கச்சூளை அமைக்கப்பட்டுள்ளது. செங்கச்சூளையினால் சுமார் 20 குடும்பங்கள் பயன்பெறுகின்றனர். இதனால், அதிகத்தூர் கிராம மக்கள், முதலாளிகள் ஆன மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

மல்லிகா

மல்லிகா  என்ற பெண்ணிடம் பேசினோம். அவர், "நாங்க மூணு தலைமுறையா  அரிசி ஆலையில கொத்தடிமையா இருந்தோம். அங்க வேலை செய்யும்போது  வீட்டுல நல்லது கெட்டதுனா கூட போக முடியாது.. என் தம்பி குழந்தை ஆலைக்குள்ளேயே செத்துருச்சு. அத அடக்கம் பண்ண கூட எங்களுக்கு லீவு கிடைக்கல. அப்ப கூட முதலாளி நெல்லு அவிக்க சொன்னாரு. கிடைச்ச  கொஞ்ச நேரத்துல  நாங்க பிள்ளைய அடக்கம் பண்ணோம். அவ்வளவு  கஷ்டமான வாழ்க்கை.

அப்ப தான்  அரசாங்கத்தின் உதவியால நாங்க வெளில  வந்தோம். வெளில வந்தப்பயும் எங்களுக்கு வாழ்வாதாரம் ஒரு கேள்விக்குறியா  இருந்துச்சு.  நாங்களும் எங்க குடும்பத்துல உள்ளவங்களும் படிப்படியா ஏதாவது ஒரு வேலையை  கத்துகிட்டு  எங்க சாப்பாட்டு செலவ பாத்துக்கிட்டோம்.ஆனாலுமே பொருளாதரத்துக்கு பிரச்சனை இருந்துச்சு. ஆனா இப்ப  கலெக்டர் உதவியால எங்களுக்குனு சொந்தமா செங்க சூலை இருக்கு. நாங்களும் சம்பாதிக்கிறோம், யாருக்கும் அடிமையா இல்லாம வாழ்க்கையை ஆத்ம திருப்தியோட வாழ்றோம்" என்றார்.

சின்னராசு

 அரிசி ஆலைகளில் தன்  குழந்தைப்பருவத்தில் வேலை செய்தவர் சின்னராசு, இவர் தற்போது கொத்தனார் வேலை செய்கிறார். இவர், " அரிசி ஆலை முதலாளி குழந்தையா இருக்கிற எங்களயும் விட்டுவைக்கல, நாங்களும் எங்க அம்மா அப்பாவுடன் வேலை செய்ய வற்புறுத்துனாரு. ஆனா எங்களுக்குனு தனி  கூலி எல்லாம் கிடையாது. மூட்ட தூக்கும் போது விழுந்து மூட்டுல ஏற்பட்ட காயத்தின் தழும்பு இப்பவும் இருக்கு. கொத்தடிமையாவே இருந்தா  நிம்மதியான வாழ்க்கைய  நான் பாத்துருக்கவே முடியாது. ஆனா அங்க இருந்து வெளிவந்ததால இப்ப சௌகரியமான வாழ்க்கைய நானும் என் குடும்பத்தாரும் வாழ்றோம். இப்ப நான் கொத்தடிமை இல்ல; பைக்குக்கும் நிலத்துக்கும் சொந்தக்காரன்" என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.

சூளையில் கல் அறுத்துக்கொண்டிருந்த குப்பம்மாள் நம்மிடத்தில் பேசினார். அவர், " என் கணவரு வீட்டுல உள்ளவங்க எல்லாரும் அரிசி ஆலையில வேலை செஞ்சாங்க, அவருடன் கல்யாணம் ஆன பிறகு நானும் அரிசி ஆலையில வேலை செய்தேன். சுமார் பத்து வருஷத்துக்கு மேலா வேலை செஞ்சேன். ஆனாலும் வறுமை என் குடும்பத்த வாட்டுச்சு. ஒரு முறை என் குழந்தை தண்ணீத்தொட்டில விழுந்து இறந்துடுச்சு. பிள்ளைய கவனிக்க கூட நேரம் கிடைக்காத எங்களுக்கு இந்த சம்பவம் இடிவிழுந்த மாறி எங்க வாழ்க்கைய உருக்குலைச்சுருச்சு. இந்த சூழ்நிலையில வாழ்ந்துட்டு இருந்த எங்கள விடுவிச்சாங்க, விடுவிச்சாலும் கஷ்டம் போகல. ஆனா இப்ப கலெக்டர் உதவில நாங்க நல்லா இருக்கோம். விஷயம் புரியாதவங்க இப்பயும் செங்கச்சூளையில அடிமை மாறிதானே வேலை செய்றீங்கனு பேசுக்கிறாங்க. உண்மையில எங்க விருப்பப்பட்ட நேரத்துல வேலை செய்றோம், முடியலனா ஓய்வு எடுக்குறோம். எங்களுக்கு கட்டளையிட யாருமில்ல, முழு ஈடுபாடோடு இந்த வேலைய செய்றோம் என்று பேசினார்.

குப்பம்மாள்

செல்வி என்னும் பெண், நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது, பள்ளிக்கூடத்துக்கு போனா ஆலை முதலாளி திட்டுவார், வேலை செய்ய கட்டாயப்படுத்துவார் ஆனா இப்ப என் குழந்தைகள் எல்லாம் எந்த தொந்தரவும் இல்லாம பள்ளிக்கூடத்துக்கு போறது எனக்கு சந்தோசமா இருக்கு, ஆலைகளில் வேலை பாத்தப்ப எங்களுக்கு குளிக்க மறைவான இடம் கூட இல்ல. ஆனா இப்ப மறைவான இடம் கிடைச்சதே எங்களுக்கு பெரிய சாதனை பண்ண மாறி இருக்கு என்று சொல்லிய வண்ணம் கண் கலங்கினார்.

கொத்தடிமை  முறையிலிருந்து விடுபட்டவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்த மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் பேசினோம்.  அவர். "அரிசி ஆலைகளில், செங்கச்சூலைகளில் கொத்தடிமைகளாக கஷ்டப்பட்ட மக்கள் விடுதலை ஆனாலும் அவர்களின் வாழ்க்கை நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. என்னை சந்தித்த ஒருவர் எங்கள் வாழ்வாதரத்தை உறுதி செய்து தருமாறு மனு அளித்தார். விசாரிக்கும் போது அவர் கொத்தடிமையாக இருந்தவர் என்பதும், விடுதலையாகி சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் இருப்பதும் தெரியவந்தது. இது என்னை ஆச்சரியப்படுத்தியது.இவர்களின் வாழ்க்கை தரத்தை  முன்னேற்ற வேண்டும் என்று எண்ணினேன்.

மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், சிறகுகள் என்ற திட்டத்தின் மூலம்  இதுவரை இரண்டு இடங்களில் செங்கச்சூலைகள் அமைத்து தந்துள்ளோம். திருத்தணியில்  உள்ள வீரகநல்லூர் கிராமத்திலும், பிஞ்சிவாக்கம் கிராமத்திலும் அமைத்து தந்துள்ளோம்.  இது மட்டுமல்லாமல் மீனவர்களுக்கு வலை தந்துள்ளோம். பெண்களுக்கு எம்பிராய்டிங் பயிற்சி அளிக்கிறோம். இதனால் அவர்களின்  வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்துள்ளோம், என்றார்.



source https://www.vikatan.com/features/human-stories/bonded-labourers-are-empowered-by-district-administration

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக