ரெட் பால் கிரிக்கெட்டிற்கு அடுத்த சர்ப்ரைஸ் தயாராகிறது என ரெட் அலர்ட் தந்திருக்கிறது சர்ஃபராஸ் கானின் சமீபத்திய டொமெஸ்டிக் கிரிக்கெட் செயல்பாடுகள்.
சர்ஃபராஸ் கான் - இந்தியக் கிரிக்கெட்டிற்கு இந்தப் பெயர் புதியதல்ல; வெறும் 12 வயதில, ஹாரீஸ் ஷீல்ட் தொடரில் 45 ஆண்டுகளாக நீடித்த சச்சினின் சாதனையை முறியடித்தது, 2014 மற்றும் 2016 அண்டர் 19 உலகக் கோப்பைகளில் முறையே 70 மற்றும் 71 சராசரிகளில் ரன்களைக் குவித்தது, வெறும் 17 வயதில் கோலி, ஏபிடி, கெய்ல் உள்ளிட்ட ஆளுமைகள் நிரம்பிய ஆர்.சி.பி-க்காக ஆடும் வாய்ப்புப் பெற்றது என எல்லாமே அவருக்குக் கனவுப் பயணம் போலவே அமைந்திருந்தது. ஆனால், வாயிலை ஊடுருவி வந்த வெற்றி வெளிச்சம், சாளரத்தின் வழியாக விரைவாக வெளியேறி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
இங்கொன்றும் அங்கொன்றுமாக ஆர்சிபி, பஞ்சாப், டெல்லி அணிகளுக்காக ஐபிஎல்லில் ஒருசில சிறந்த இன்னிங்ஸ்களை ஆடியிருந்தாலும் அவரால் பெரிதாகப் பிரகாசிக்க முடியவில்லை. போதாக்குறைக்கு பிரமாண்ட கிரிக்கெட் அரங்கில் தனக்கான இடம் தேடி மும்பையிலிருந்து உத்தரப் பிரதேசத்திற்கு மாறிச் சென்று திரும்பவும் மும்பைக்கே திரும்பியது என ஆங்காங்கே மறுபடியும் காலூன்றவே அவருக்கு அதிகக் காலம் பிடித்தது.
இந்தக் காலகட்டத்தில் கிரிக்கெட் உலகம், கிட்டத்தட்ட அவரை மறந்தே விட்டது. இருப்பினும், இந்திய டொமெஸ்டிக் கிரிக்கெட்டின் ரன் மெஷினாக அல்ல, டன் மெஷினாக உருவெடுத்து அசாத்தியமாக சதங்களை விளாசி, மறுபடியும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளதுடன் தேர்வாளர்களின் வட்டத்திற்குள்ளும் வந்து விழுத்துள்ளார் சர்ஃபராஸ்.
2019/20 ரஞ்சிக் கோப்பைக்கான தொடரில் மற்ற முக்கிய மும்பை வீரர்கள் இந்திய ஏ அணிக்காக ஆடச் சென்றதால் தவிர்க்க முடியாத காரணங்களால் சர்ஃபராஸிற்கு இறுதி நேரத்தில் ஆடும் வாய்ப்புக் கிடைத்தது. அத்தொடரில் 9 போட்டிகளில், 928 ரன்கள் என அத்தனை போட்டிகளிலும் அடித்து நொறுக்கி ரீ-என்ட்ரி கொடுத்தார் சர்ஃபராஸ். அந்தப் புள்ளியிலிருந்து கொஞ்சமும் தளராமல் அவரது பேட் ரன்களை வாரிக் குவித்து வருகிறது.
அந்தத் தொடருக்கு பின்னதாக ஆடியுள்ள 24 இன்னிங்ஸ்களில், கிட்டத்தட்ட 2275 ரன்களை வஞ்சனையேயில்லாமல் வாரிக் குவித்துள்ளார். அதுவும் நம்பவே முடியாத 126.38 சராசிரியோடு!
இதையும் தாண்டி, எல்லோரையும் தற்சமயம் பிரமிக்க வைத்திருப்பது ஜாம்பவான் டான் பிராட்மேனுடைய ஒரு மைல்கல்லை சர்ஃபராஸ் கான் ஓவர்டேக் செய்திருப்பதுதான். 43 ஃபர்ஸ்ட் கிளாஸ் இன்னிங்ஸ்களுக்குப் பிறகு பிராட்மேன் 2927 ரன்களை எடுத்திருக்க, அதே கணக்கிலான இன்னிங்ஸில் சர்ஃபராஸ் 2928 ரன்களை எடுத்திருக்கிறார். சச்சினின் சாதனையை 12 வயதில் முறியடித்த அதே சர்ஃபராஸ், இப்பொழுது பிராட்மேனின் இடத்திலும் கூடாரமிட்டிருக்கிறார்.
2022-ல் இதுவரை ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்திருக்கும் இந்திய வீரர்கள் வரிசையில், சர்வதேச அனுபவமிக்க புஜாரா (1472 ரன்கள்) முதலிடத்திலும், சர்ஃபராஸ் (1242) இரண்டாவது இடத்திலும் உள்ளனர். ஆனாலும் இதில் சராசரியினைக் கொண்டு கணக்கிட்டால் சர்ஃபராஸே 103.50 ஆவரேஜோடு அதகளம் காட்டுகிறார். சமகால இந்திய வீரர்களை மட்டுமல்ல, ஆல்டைம் கிரேட் இந்தியர்களின் இடங்களைக்கூட சர்ஃபராஸ் சற்றே ஆட்டிப் பார்க்கின்றார்.
இந்தியா வார்த்தெடுத்த தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விஜய் மெர்சண்டின் 71.64 என்னும் சராசரியை பின்னுக்குத் தள்ளி 80-க்கும் மேலாக, சர்ஃபராஸ் கானின் சராசரி தற்போது உயர்ந்து நிற்பதுதான் அவரைத் தனித்துவமாக்கி உள்ளது. அதிலும் வரிசைகட்டி வரும் சதங்களும் அந்த நிலைத்தன்மையும்தான் அவர் அடுத்தடுத்த மேடைகளுக்கு ஆயத்தமாகி விட்டார் என்பதனையும் அடையாளம் காட்டுகிறது. அவரது ஃபர்ஸ்ட் கிளாஸ் கரியரில் அடித்துள்ள பத்து சதங்களில் ஆறு சதங்கள் இந்த வருடம் மட்டுமே வந்து சேர்ந்திருக்கின்றன. அதிலும் எல்லாமே டாடி சதங்கள் எனப்படும் பெரிய சதங்கள். பெரும்பாலானவை 150-ஐ எட்டி நிற்கின்றன. சௌராஷ்டிரா அணிக்கு எதிராக இந்த ஆண்டு வந்து சேர்ந்த 275 ரன்கள் இன்னிங்ஸ்தான் இதில் மாஸ்டர் கிளாஸ் என்றாலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவரது சதங்கள் சிறப்பானதாகவே இருந்திருக்கின்றன.
காரணம், அவர் இறங்கும் இடம். பேட்டிங்கில் டாப் ஆர்டர்கள் கிளம்பிய பின் டெய்ல் எண்டர்கள் அடுத்து வரவிருக்கும் 5-ம் நிலையில் களமிறங்கி, கத்திமேல் பயணம் செய்து ரன்களை அணியின் கணக்கில் சேர்ப்பது அவ்வளவு சுலபமில்லை. அதையும் மிக எளிதாக அவர் செய்து வருகிறார். தற்சமயம் நடந்து வரும் இரானி கோப்பைக்கான தொடரில் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவுக்காக சர்ஃபராஸ் ஆடிவருகிறார். முதல்நாள் ஆட்டத்தில், 13 விக்கெட்டுகள் ஒட்டுமொத்தமாகச் சரிந்திருந்தன. பந்துகள் தாறுமாறாக பவுன்ஸ் ஆகிய கடினமான பிட்சில்கூட அதைச் சமாளித்து சர்ஃபராஸ் சிறப்பாகவே ஆடினார். அன்றைய நாளில் 124 பந்துகளில், 125 ரன்களை சிரமமேயின்றி சேர்த்தார். 18/3 எனத் தள்ளாடிய அணியை 374-ல் கொண்டு போய் நிறுத்தியது சர்ஃபராஸின் இந்த இன்னிங்ஸ்.
பொதுவாகவே டொமெஸ்டிக் அரினாவில் பலமுனைப் போட்டி நிலவும். ஃபார்மேட், பிட்ச், எதிரணி என சிலநாள் இடைவெளிக்குள் பல சவால்களை மாறிமாறி எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதிலும் இறுதிப் போட்டிகள் இன்னமும் அழுத்தமேற்றும். அங்கேயும் சர்ஃபராஸ் சாதிக்கிறார். இந்த சீசனின் ரஞ்சி தொடர் ஃபைனல் (124 ரன்கள்), துலீப் டிராபிக்கான தொடரின் இறுதிப்போட்டி (127 ரன்கள்) தற்போது இரானி கோப்பையில் வந்துள்ள சதம் என அடுத்தடுத்து பெரிய அளவிலான போட்டிகளில் அவரது ஆதிக்கம் தொடர்கிறது. அட்டாக்கிங் பாணியில் மட்டுமின்றி, நிலைமைக்குத் தகுந்தவாறு டிஃபென்சிவ் மோடிலும் பொறுப்புணர்ந்து செயலாற்றுகிறார்.
சரி, எந்த இடத்தில் சர்ஃபராஸ் முன்னிலும் மெருகேறியிருக்கிறார் என்று பார்த்தால் முன்பை விட அவரது பாசறையில் உள்ள ஷாட்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. முன்னதாக அவரிடம் வகைக்கொன்றாக இத்தனை ஷாட்கள் வராது. பிஹைண்ட் த ஸ்கோரில் ஸ்கோர் செய்வார், கவர் டிரைவ்கள் கண்ணைக் கவரும் அவ்வளவுதான். ஆனால், இப்போது, ரெட்பால் கிரிக்கெட்டின் சூர்யக்குமார் யாதவாக, 360 டிகிரி கோணத்திற்கும் பந்துகளைப் பறக்க விடுகிறார். ராம்ப் ஷாட், ஸ்ட்ரெய்ட் டிரைவ், கட் ஷாட் என வரிசைகட்டுவதோடு, ஸ்பின்னர்களுக்கு எதிராக அற்புதமாக ஸ்வீப் ஷாட்டும் ஆடுகிறார். ரிவர்ஸ் ஸ்வீப் ஆடவும் தயங்குவதில்லை.
உத்தரகாண்டுக்கு எதிராக சமீபத்தில் சதத்தை எட்டிய போது அடித்த அப்பர் கட் அத்தனை நேர்த்தியாக இருந்தது. ஃபுட் மூவ்மெண்டில் அவ்வளவு தேர்ச்சி இல்லை என்பதால் ஸ்விங்க் ஆகும் பந்துகளை எதிர்கொள்ள திணறுகிறார் என முன்னதாகக் கிளம்பிய தியரியை எல்லாம் இப்பொழுது ப்ராக்டிகலாக அவரது பேட் மாற்றி எழுதிவிட்டது. அந்தப் பலவீனமே வெளியே தெரியாத அளவு அதனையும் ஈடுகட்டி விடுகிறார். இதுதான் அவரது ரன் மீட்டரை முன்னைவிட முடுக்கியுள்ளது. ஒருவேளை இந்திய அணிக்காக டெஸ்டில் ஆடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தால் பண்டும் இவரும் இணைந்து ஆடுவது எதிரணியை தடுமாறச் செய்யும்.
இந்திய தேர்வாளர்களின் பார்வையில் அவரது இந்த இன்னிங்ஸுகள் பட்டாலும், அணிக்குள் இடம்பெற ஏற்கெனவே கடுமையான போட்டியும் நிலவுவதால் சர்ஃபராஸுக்கு உடனடியாக வாய்ப்புக் கிடைப்பது கடினமென்பதே களநிலவரம். எனினும், சந்தேகமேயின்றி புஜாரா போன்ற டெஸ்ட் ஸ்பெஷலிட்டுகளுக்கான அடுத்த தலைமுறை வீரராக கண்டிப்பாக சர்ஃபராஸ் இருப்பார். அதற்கு இன்னமும் சிலகாலம் அவர் பொறுத்திருக்க வேண்டுமென்பதையே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவரது பெயர் சேர்க்கப்படாமல் விடுபட்டிருப்பது காட்டுகிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை என்னதான் உள்ளூர் போட்டிகளில் கோலோச்சினாலும் சர்வதேச அணிக்குத் தேர்வாக இந்திய ஏ அணிக்கான போட்டிகளிலோ ஐபிஎல்லிலோ சாதிப்பதுதான் அதற்கடுத்த முக்கிய படி.
சமீபத்தில் நடந்து முடிந்த 'நியூசிலாந்து ஏ'க்கு எதிரான தொடரில், 3 போட்டிகளில் 99 ரன்களை மட்டுமே சர்ஃபராஸ் சேர்த்திருந்தார். ஐபிஎல்லிற்கும் இன்னமும் மாதக்கணக்கில் இடைவெளியிருக்கிறது. எனவே இந்த ஃபார்மில் இப்படியே தொடர்ந்து வர இருக்கும் உள்ளூர் போட்டிகளினால் தன்னைக் கூர்மையாக்கிக் கொள்வது சர்ஃபராஸுக்கு மிக மிக அவசியமான ஒன்றாகிறது. இது இந்தியாவிற்காக ஆடுவதற்கான வாய்ப்புகளுக்கும் அவருக்குமான இடைவெளியைக் குறைக்கும்.
விஜய் மெர்சண்ட், 1940-களில் உலக யுத்தத்தினால் சர்வதேச போட்டிகள் நடைபெறாத சமயத்தில் தனது பேட்டினை உயிர்ப்போடு வைத்துக் கொள்ள இடைவெளியே இன்றி டொமெஸ்டிக் கிரிக்கெட் முழுவதிலும் ஆதிக்கம் செலுத்தி ரன்களைக் குவித்திருந்தார். இந்திய கிரிக்கெட்டில் அவருக்கான தனி இடத்தை இந்தக் காலகட்டத்தில் கிடைத்த பயிற்சி அவருக்குப் பெற்றுத் தந்தது. அடுத்து வந்த இங்கிலாந்து தொடரில் அவர் கோலோச்சியதற்கும் இதுவே உதவியது. சர்ஃபராஸ் செய்ய வேண்டியதும் இதையேதான்.
"வாய்ப்புகளுக்கான கதவுகளைத் தட்டாதீர்கள், உடைத்து எறிந்து உங்களை நீங்களே அதனிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்" என மல்யுத்த வீரர் ராக் கூறுவார். சர்ஃபராஸுக்கும் இது பொருந்தும். அவருக்கு வழியை மறைக்கும் கதவின் தாழ்ப்பாள் தற்போது தளரத் தொடங்கியிருக்கிறது. வரவிருக்கும் தொடர்களில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடினால் மீதமிருக்கும் கதவுகளின் பாகங்களும் உடைந்து நொறுங்கும். அப்போது அவருக்கான இடமும் அணியில் கண்டிப்பாக நிரந்தரமாகும்.
source https://sports.vikatan.com/cricket/the-rise-of-sarfaraz-khan-in-the-domestic-arena
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக