Ad

புதன், 5 அக்டோபர், 2022

பழைய கணக்கு வழக்குகளை கேட்கும் அறநிலையத்துறை... சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் எதிர்ப்பது ஏன்?!

சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நடராஜர் கோயிலின் கணக்குகளை ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 7-ம் தேதியன்று சென்றனர். அப்போது, அவர்களுக்கு கணக்குகளைக் காட்டுவதற்கு அங்கிருந்த தீட்சிதர்கள் மறுத்துவிட்டனர். இருந்தபோதும், இரண்டாவது நாளாக ஜூன் 8-ம் தேதி விடுபட்ட ஆய்வை தொடர அறநிலையத்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டார்கள். இரண்டாவது நாளாகவும் அதிகாரிகளைத் தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை. கண்டிப்பாக ஆய்வுகளை நடத்தியே தீருவோம் என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள். இதனால், கோயில் தீட்சிதர்களுக்கும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அதிகாரிகள் ஆய்வு

இதைத்தொடர்ந்து, சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தை ஜூன் 20,21 ஆகிய தேதிகளில் இந்து சமய அறநிலையத்துறை நடத்தியது. இதில், தீட்சிதர்கள் மீது ஏராளமான புகார்களைப் பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் அளித்தனர். மொத்தம் 4,100க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் அறநிலையத்துறைக்கு வந்தது. இதுகுறித்து அறநிலையத்துறை தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், எங்கள் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்தனர். ஆனால், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு குறித்து பொதுமக்களிடம் கேட்ட கருத்துகளின் அடிப்படையில் விளக்கம் அளிக்கக்கோரி தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நகை சரிபார்ப்பு ஆய்வுக்கு வரும் அதிகாரிகளுக்குச் சிதம்பரம் நடராஜர் கோயில் சார்பாக முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் பொது தீட்சிதர்கள் சார்பாக இந்து சமய அறநிலையத்துறைக்கு பதில் அனுப்பி இருந்தனர். அந்தவகையில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் 6 பேர் கொண்ட குழு ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் 4 நாள்கள் ஆய்வு செய்தது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அதிகாரிகள் ஆய்வு

அதில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ஆவணங்கள், தங்க நகைகள் மற்றும் கடந்த 2005-2010-ம் ஆண்டுகள் வரையிலான கணக்குகள் விவரங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் சரிபார்த்தனர். இந்தநிலையில், 1955-ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை உள்ள நகைகளை மறு மதிப்பீடு செய்ய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.  

இந்து சமய அறநிலையத்துறை

இதுகுறித்து, சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர் நிருபர்களிடம் கூறுகையில், "சிதம்பரம் நடராஜர் கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் 9 கட்டங்களாக நகைகளை சரி பார்த்து ஆய்வு செய்துள்ளனர். இந்து சமய அறநிலையத்துறைக்கு, நகைகளையோ, கணக்குகளையோ காண்பிக்க வேண்டிய அவசியம் தீட்சிதர்களுக்கு இல்லை.

ஆனால், தீட்சிதர்கள், தங்களது  நம்பகத் தன்மையை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகவே கோயில் நகைகள் சரிபார்ப்பு பணிக்கு ஒத்துழைப்பு அளித்தனர். இனி, சட்ட ஆலோசனை பெற்று பட்டயக் கணக்காளர் மூலம் வெளிப்படையாகக் கணக்குகளைப் பார்த்து, ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில் பொதுவெளியில் கணக்குகள் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை நகைகளைச் சரிபார்த்ததில்  எவ்வித தவறுகளையும் அறநிலையத்துறை கண்டுபிடிக்கவில்லை.

சிதம்பரம் நடராஜர் கோயில்

இந்தநிலையில், 1955-ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை உள்ள நகைகளை மறு மதிப்பீடு செய்யக் கேட்கிறார்கள். இதற்கு அவர்களுக்கு சட்டரீதியாக என்ன அதிகாரம் இருக்கிறது. ஏற்கனவே நகைகள் சரிபார்க்கப்பட்டு முடிவடைந்த நிலையில், மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்று சொல்வது உள்நோக்கம் கொண்டது''என்றார். சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கும், அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் இடையில் கணக்கு, வழக்குகளை பார்ப்பதில் ஏற்பட்ட பிரச்னை இன்னும் சரிசெய்யப்படாத நிலையில், ஓரிரு வாரங்களில் அறநிலையத்துறை அதிகாரிகள் கணக்குகளை ஆய்வு செய்யவும், நகைகளை மறு மதிப்பீடு செய்யவும் செல்வார்கள் என்று கூறப்படுகிறது.



source https://www.vikatan.com/news/tamilnadu/the-re-examination-of-nataraja-temple-is-intentional-said-dikshitars-lawyer

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக