நடிகை ஜோதிகா நடித்து வெளியான `மகளிர் மட்டும்' படத்தின் மினி வெர்ஷனை, கேரளாவில் உள்ள மூவாட்டுபுழா தொகுதி எம்.எல்.ஏ நிஜத்தில் நிகழ்த்தியுள்ளார்.
கேராளாவில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மூவாட்டுபுழா தொகுதியில் 'Girls Night Out' என்ற நான்கு நாள் நிகழ்ச்சியை அந்தத் தொகுதி எம்.எல்.ஏ மேத்யூ குழல்நாதன் நடத்தியுள்ளார்.
பெண்கள் இரவு 8.30 மணிக்கெல்லாம் வீட்டுக்குள் அடைந்து கொள்கிறார்கள். பெண்களுக்கு இரவு வாழ்க்கை குறித்த நம்பிக்கையைக் கொடுக்கவே 'Girls Night Out' என்ற இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகக் கூறுகிறார் மேத்யூ குழல்நாதன்.
இந்த நிகழ்ச்சி, கடந்த வாரம் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மாலை 5.30 மணி முதல், இரவு 11.30 மணி வரை நடந்தது. ஆடல், பாடல் நிகழ்ச்சி, உணவு ஸ்டால்கள், வண்ண வண்ண விளக்குகள், பெண்களுக்கான பயிற்சிகள், மாரத்தான் போட்டி என நிகழ்ச்சி திருவிழாபோல் களைகட்டியது.
எர்ணாகுளம் மாவட்டத்தில் பெரும்பாலும் அனைவரும் இரவு 8-8.30 மணிக்கெல்லாம் தங்களின் வீடுகளை அடைத்துவிடுவர். இந்த நிலைமையை மாற்ற மற்றும் பெண்கள் தங்களது பாதுகாப்பை பற்றி பயப்படாமல் இரவில் வீட்டைவிட்டு நம்பிக்கையுடன் வெளியேற 'Girls Night Out' என்ற நிகழ்ச்சி திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளத்தை இணைக்கும் மாநில நெடுஞ்சாலையான எம்.சி சாலையில் அரை கிலோமீட்டர் தூரத்துக்கு நடத்தப்பட்டது என்று குழல்நாதன் அலுவலக வட்டாரம் கூறியது.
இந்த நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான சிறுமிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி குறித்து பெற்றோர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர் மற்றும் குழந்தைகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டினர்.
நிகழ்ச்சியின் முதல் நாள் (அக்டோபர் 6) அன்று, பெண்கள் கழிவறை வசதிகள், தனியார் பேருந்துகளின் நிறை, குறைகள் என பல முக்கிய தலைப்புகளில் பேசினர்.
குழல்நாதன் தனது முகநூல் பக்கத்தில், 'இரவு வாழ்க்கை என்பது ஆண்களுக்கு மட்டும்தான் என்று நினைக்காதீர்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், பெண்களை கூண்டில் அடைக்கக்கூடாது. நாம் இளைய தலைமுறையினரை இரவு வாழ்க்கைக்குத் தடுக்கும்போது, அவர்கள் மூடிய கதவுகளுக்குப் பின்னால் கிடைக்கும் போதைப்பொருள்களுக்குப் பழக்கப்படுகிறார்கள். மூடிய கதவுகளிலிருந்து வெளியே வந்து அவர்கள் சுதந்திரம் அடைய வேண்டும். மேலும் இந்த நிகழ்வு கேரளா முழுவதிலும் நடக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
என்ன மக்களே, நம்மூரிலும் 'Girls Night Out' வேண்டுமா?
source https://www.vikatan.com/lifestyle/women/girls-night-out-in-ernakulam-to-encourage-women-to-step-out-at-night
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக