Ad

வியாழன், 13 அக்டோபர், 2022

Doctor Vikatan: புற்றுநோய் பாதிப்பைக் கண்டுபிடிக்க என்ன வழி?

Doctor Vikatan: ஒருவருக்கு உடலில் எங்காவது புற்றுநோய் இருக்கிறதா என கண்டுபிடிக்க வசதி உள்ளதா? நாமே கண்டுபிடிக்க முடிந்தால், என் போன்ற முதியவர்கள் அலர்ட் ஆக முடியுமே?

லட்சுமி ஆறுமுகம், விகடன் இணையதளத்தில் இருந்து.

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்.

புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்

அறிகுறிகளை வைத்ததான் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருக்கிறதா என்பதை யூகித்து, டெஸ்ட் செய்து அதை உறுதி செய்ய முடியும். புற்றுநோய்க்கான டெஸ்ட்டை பொதுவாக 'கேன்சர் ஸ்கிரீனிங்' என்று சொல்கிறோம். ஒவ்வோர் உறுப்புக்கும் இப்படித் தனித்தனியே 'கேன்சர் ஸ்கிரீனிங்' செய்ய முடியும்.

உதாரணத்துக்கு, மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய `மேமோகிராம்' சோதனை அவசியம். அதையும் ஒரே ஒருமுறை மட்டும் செய்து பார்த்தால் போதாது. இரண்டு வருடங்களுக்கொரு முறையாவது செய்து பார்க்க வேண்டும். அதுவே குடும்பப் பின்னணியில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் பாதிப்பு இருந்தால் அந்தக் குடும்பத்துப் பெண்கள் ஒவ்வொரு வருடமும் அந்த டெஸ்ட்டை அவசியம் செய்து பார்க்க வேண்டும்.

அடுத்தபடியாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டுபிடிக்க 'பாப் ஸ்மியர்' என்றொரு டெஸ்ட் இருக்கிறது. இதை மூன்று வருடங்களுக்கொரு முறை செய்ய வேண்டும். ஹியூமன் பேப்பிலோமா வைரஸுக்கான டெஸ்ட்டையும் செய்து பார்க்கலாம்.

மார்பகப் புற்றுநோய்

எனவே இப்படித்தான் ஒவ்வோர் உறுப்புக்குமான புற்றுநோய் பாதிப்பை உறுதி செய்ய முடியுமே தவிர, புற்றுநோய் பாதிப்புக்கான பொதுவான டெஸ்ட் என எதுவும் இதுவரை இல்லை. அது இன்னும் ஆராய்ச்சி நிலையில்தான் இருக்கிறது. அது முழுமையடைய சில வருடங்கள் ஆகலாம்.

ஒரு செ.மீ கட்டியில் கிட்டத்தட்ட 100 கோடி புற்றுநோய் செல்கள் இருக்கலாம். எனவே இந்த செல்கள் பெரிதானால்தான் டெஸ்ட்டில் கண்டுபிடிக்க முடியும். அதாவது அவை செ.மீ அளவுக்கு மாறினால்தான் நமக்கு அறிகுறிகளே தெரிய ஆரம்பிக்கும். மி.மீ அளவில் இருக்கும்போது தெரியாது.

அதுவே மேமோகிராம் சோதனையில் புற்றுநோய் செல்கள் மி.மீ அளவில் இருக்கும்போதே கண்டுபிடித்துவிட முடியும். அதனால்தான் குடும்பப் பின்னணியில் புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் இந்தச் சோதனையைத் தவறாமல் செய்து பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புராஸ்டேட் சுரப்பியை பாதிக்கும் புற்றுநோய்க்கு பிஎஸ்ஏ (Prostate-Specific Antigen (PSA) Test) என்றொரு ரத்தப் பரிசோதனை இருக்கிறது. பிஎஸ்ஏ அதிகமான எல்லோருக்கும் புராஸ்டேட் புற்றுநோய் வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் அந்த அளவுகள் அதிகமாக இருப்பவர்கள், மேற்கொண்டு சோதனை செய்துபார்த்து மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

நுரையீரல் புற்றுநோய்

இப்படி நுரையீரல் புற்றுநோய் உட்பட ஒவ்வொன்றுக்கும் பிரத்யேக டெஸ்ட் உண்டு. மலக்குடலில் புற்றுநோய் அறிகுறிகள் தென்பட்டால் அது அவர்களுக்கு பரம்பரையாகத் தொடர்கிறதா என்று பார்க்க வேண்டும். அவர்கள் கொலோனோஸ்கோப்பி (Colonoscopy) என்ற டெஸ்ட் செய்துபார்த்து புற்றுநோயை உறுதி செய்யலாம். அறிகுறிகளோ, சந்தேகங்களோ இருந்தால் இப்படி அந்தந்த உறுப்புக்கான பிரத்யேக டெஸ்ட் மூலம்தான் புற்றுநோயை உறுதி செய்ய முடியுமே தவிர, பொதுவாக எந்த முடிவுக்கும் வர முடியாது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-what-is-the-way-to-detect-cancer

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக