அனைவருக்கும் பசுமை வணக்கம்!
``விவசாயிகளே, என் உருவ பொம்மைகளை எரியுங்கள். அப்போதுதான் நீங்கள் என் மீது கோபமாக இருப்பதை அறிந்துகொள்வேன்” என்று மேடையில் கர்ஜித்துவிட்டு, தன் பதவியையும் ராஜினாமா செய்திருக்கிறார் பீகார் மாநில வேளாண்மைத்துறை அமைச்சர் சுதாகர் சிங். இந்தக் காலத்திலும் இப்படி ஓர் அரசியல்வாதியா? என்று ஆச்சர்யம் எட்டிப்பார்க்கவே செய்கிறது.
பீகாரில் பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, ராஷ்ட்டிரிய ஜனதா தளத்துடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளார் முதல்வர் நிதிஷ்குமார். அந்த வகையில் ராஷ்ட்டிரிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்தவர்தான் இந்த சுதாகர் சிங். இவர், இந்தப் பதவிக்கு வந்து சில வாரங்களே ஆகும் நிலையில், மனம்நொந்துபோய்தான் அப்படி பேசியிருக்கிறார்.
‘‘வேளாண் துறையில் ஊழல் செய்யாத ஒரு பிரிவுகூட இல்லை. இத்துறைக்குத் தலைமை வகிப்பதால், நானே ஊழல் பேர்வழிகளுக்குத் தலைவராகவும் உள்ளேன். விதைக் கழகம் வழங்கும் விதைகளை விவசாயிகள் பயன்படுத்த முடியாது. தரமற்ற விதைகளுக்குப் பல நூறு கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது’’ என்றெல்லாம் உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார்.
பீகாரில் மட்டுமல்ல, வேளாண்துறையில் மட்டுமல்ல, நாடு முழுக்கவே மத்திய மற்றும் மாநில அரசுகளின் அத்தனை துறைகளிலும் ஊழலும் லஞ்சமும் பொங்கி வழிகின்றன என்பதுதான் நிதர்சனம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல, ஒரு மாநிலத்தின் அமைச்சரே இப்போது அதை வழிமொழிந்திருக்கிறார்.
ஆக, ‘விவசாயிகளுக்காக அதைச் செய்கிறோம்’, ‘மக்களுக்காக இதைச் செய்கிறோம்’ என்று அரசாங்கங்கள் அறிவிக்கும் திட்டங்களெல்லாம் லஞ்சம் மற்றும் ஊழல் பேர்வழிகளுக்கானது மட்டுமே என்பது மறுபடியும் நிரூபிக்கப்பட்டுள்ளது!
- ஆசிரியர்
source https://www.vikatan.com/government-and-politics/agriculture/bihar-agri-minister-resign-for-bribery-for-department
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக