Ad

திங்கள், 10 அக்டோபர், 2022

`பாபர் மசூதியைத் தாண்டி ஒரு பறவைகூட பறக்க முடியாது' - அதிரடிகளுக்குப் பெயர்போன முலாயம் சிங்-ன் கதை!

அதிரடி அரசியலுக்குப் பெயர்போன தலைவர்களில் முலாயம் சிங் யாதவ் முக்கியமானவர். அரசியல் முக்கியத்துவங்கள் நிறைந்த உத்தரப்பிரதேசத மாநிலத்தை மூன்று முறை ஆட்சிசெய்த முலாயம், தேசிய அரசியலிலும் பெரும்பங்காற்றியிருக்கிறார். கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்தவர், அக்டோபர் 10-ம் தேதி அன்று காலமானார்.

மல்யுத்த வீரர் டு அரசியல்வாதி!

உத்தரப்பிரதேசத்திலுள்ள எடாவா மாவட்டம் மல்யுத்தச் சண்டைக்குப் பிரபலம். அந்த மாவட்டத்திலுள்ள சைஃபி கிராமத்தில் பிறந்த முலாயம் சிங்கும் மல்யுத்த களத்தில் கெட்டிக்காரர். இளம்வயதில் எக்கச்சக்கமான மல்யுத்தப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றிருக்கிறார். இவர் ஒருமுறை எதிராளியின் இடுப்பைத் தன் கைகளால் சுற்றிவளைத்துவிட்டார் என்றால், அந்தப் பிடியிலிருந்து எதிராளி மீளவே முடியாது என்கின்றனர் அவரின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இப்படி மல்யுத்தப் போட்டிகளில் களமாடிக்கொண்டிருந்தவர், தந்தையின் விருப்பத்திற்கேற்ப ஆசிரியராகவும் பணியாற்றினார்.

முலாயம் சிங் யாதவ்

கல்லூரியில் படிக்கும்போது ராம் மனோகர் லோகிஹா, ராஜ் நாராயண் ஆகிய சோஷியலிச தலைவர்களின் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு அரசியல் பக்கம் திரும்பினார் முலாயம். மாணவத் தலைவராக இருந்தவர், சோஷியலிஸ்ட் போராட்டங்களில் கலந்துகொண்டு, கிட்டதட்ட மூன்று ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். லோஹியா, நாராயண் ஆகியோரின் தளபதியாகச் செயல்பட்டவரை, அப்போது எம்.எல்.ஏ-வாக இருந்த நாத்து சிங்தான் அடையாளம் கண்டார். அவரின் ஆதரவுடன் சன்யுக்தா சோஷியலிசக் கட்சியில் இணைந்த முலாயம், முதன்முதலாக 1967 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 28 வயதில் எம்.எல்.ஏ-வானார். 10 முறை எம்.எல்.ஏ-வாக இருந்த முலாயம், ஏழு முறை மக்களவை எம்.பி-யாகவும் இருந்திருக்கிறார்.

உ.பி முதல்வர், மத்திய அமைச்சர்!

1977-ல், உ.பி-யில் ஜனதா கட்சி ஆட்சியமைந்தபோது, கூட்டுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றார் முலாயம். அந்தச் சமயத்தில், விவசாயிகளுக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் வழங்கும் கடனுக்கான வட்டியை மிகக் குறைவாக மாற்றியமைத்தது இவர்தான். முலாயம் சிங்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார் முன்னாள் பிரதமரான செளத்ரி சரண் சிங். 1987-ல் தனது மறைவுக்கு முன்னர், முலாயம் சிங்-கை தனது அரசியல் வாரிசாக அறிவித்தார் சரண் சிங். 1989-ம் ஆண்டு ஜனதா கட்சி, உ.பி சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெற்றது. அப்போதைய பிரதமர் வி.பி.சிங் பக்கம் நின்ற முலாயம் சிங் யாதவ், முதன்முறையாக உ.பி-யின் முதலமைச்சரானார். 1990-ல் வி.பி சிங் அரசு கவிழ, உ.பி-யில் முலாயம் சிங்கின் ஆட்சியும் ஆட்டம் கண்டது. அதைத் தொடர்ந்து இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற சந்திரசேகரின் சோஷியலிச ஜனதா கட்சியில் இணைந்து ஆட்சியைத் தக்கவைத்தார். ஆனால், 1991-ல் சந்திரசேகர் அரசும் கவிழ்ந்ததால், உ.பி-யிலும் முலாயம் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.

முலாயம் சிங் யாதவ்

உ.பி-யில் அசுர வளர்ச்சி பெற்றுவரும் பா.ஜ.க-வை வலுவாக எதிர்க்க முடிவெடுத்த முலாயம், 1992-ல் சமாஜ்வாடி கட்சியைத் தொடங்கினார். அந்த ஆண்டு நடந்த தேர்தலில், கன்ஷிராமின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சரானார். பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டார்.

1996-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸுக்குப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஐக்கிய முன்னணி கூட்டணி உருவானது. தேவகவுடா தலைமையில் பல மாநிலக் கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்தன. அதில், முலாயம் சிங்கின் பங்கும் முக்கியமானது. தேவகவுடா, ஐ.கே.குஜரால் ஆகிய இரண்டு பேரின் அமைச்சரவையிலும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார் முலாயம். அவர் பிரதமராகும் வாய்ப்புகள் இருந்தும் சில தலைவர்கள் ஏற்படுத்திய இடையூறுகளால், அந்த வாய்ப்பு கைவிட்டுப்போனது.

இஸ்லாமியர்கள் மத்தியில் செல்வாக்கு!

1989-ல் முதன்முறையாக உ.பி-யில் ஆட்சிக்குவந்த முலாயம், பாபர் மசூதியைக் காக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். பாபர் மசூதியை இடிக்கும் நோக்கில், கரசேவகர்கள் பேரணிகள் நடத்தியபோது, அந்த மசூதியைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பை ஏற்படுத்தினார். அப்போது பேசிய முலாயம், ``பாபர் மசூதியைத் தாண்டி ஒரு பறவைகூட பறக்க முடியாது. அந்த அளவுக்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது'' என்றார். இந்தப் பேச்சு, இஸ்லாமியர்கள் மத்தியில் முலாயமுக்கு பேராதரவை ஏற்படுத்தியது. தொடர்ந்து, 1990-ம் ஆண்டு பாபர் மசூதியை நோக்கி கரசேவகர்கள் பேரணி சென்றபோது, அவர்கள்மீது முதலில் தடியடியும், பின்னர் துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. இந்தத் துப்பாக்கிச்சூட்டில் கரசேவகர்கள் சிலர் கொல்லப்பட்டதும் பெரும் விவாதத்தை கிளப்பியது.

பின்னர், உ.பி-யின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவரான கல்யாண் சிங்கை கட்சியில் இணைத்துக்கொண்டதால், இஸ்லாமியர்களின் ஆதரவை இழந்தார் முலாயம். தொடர்ந்து, தனது அடுத்தடுத்த நகர்வுகள் மூலம் இஸ்லாமியர்கள் மத்தியிலான செல்வாக்கை ஓரளவுக்கு மீட்டெடுத்தார். 2007 சட்டமன்றத் தேர்தலில் 97 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது சமாஜ்வாடி. 2012 சட்டமன்றத் தேர்தலுக்கு சில காலம் முன்னர் வரை, சமாஜ்வாடி கட்சி 50 இடங்களைக்கூட வெல்லாது என்ற நிலையே இருந்தது. ஆனால், முலாயமின் திட்டங்கள், வியூகங்களால் அந்தத் தேர்தலில் 224 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியமைத்தது சமாஜ்வாடி. தனது மகன் அகிலேஷ் யாதவை உ.பி-யின் முதலமைச்சராக்கினார் முலாயம்.

அகிலேஷ் யாதவ் - முலாயம் சிங்
கூட்டணி தர்மத்தை மீறுபவர், வாரிசு அரசியலை முன்னெடுப்பவர் என முலாயம் சிங்மீது சில குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும், உ.பி மட்டுமல்ல இந்தியா முழுவதுமிருக்கும் பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையின மக்களுக்காகக் குரல் கொடுத்ததற்காகவே அவர் நிச்சயம் காலம் கடந்தும் நினைவுகூரப்படுவார்.


source https://www.vikatan.com/government-and-politics/politics/article-about-mulayam-singh-yadav-founder-of-sp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக