Ad

செவ்வாய், 11 அக்டோபர், 2022

பிக் பாஸ் 6, நாள் 1: ஜி.பி.முத்து வெள்ளந்தியா, நடிக்கிறாரா? முதல் நாளே வாங்கிக் கட்டிக்கொண்ட அஸீம்!

யெஸ்... இதை... இதை... இதைத்தான் எதிர்பார்த்தோம். கடந்த இரண்டு சீசன்களில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு சுவாரஸ்யமான டாஸ்குகள் அதிகம் தரப்படவில்லை. இறுதிக்கட்டத்தில் கூட விறுவிறுப்பான போட்டிகள் இல்லை. எனவே வட்டியும் முதலுமாக இந்த சீசனில் முதல் நாளிலிருந்தே போட்டியாளர்களை ஓட வைத்திருக்கிறார் பிக் பாஸ். இதற்காகப் பல ஐடியாக்களை ரூம் போட்டு யோசித்திருக்கிறார்கள் போல. இவை கடுமையானதாக அல்லாமல் ஜாலியாக இருப்பது சுவாரஸ்யம் அளிக்கிறது. வெரி குட் பிக் பாஸ். கீப் இட் அப்!

கடந்த சீசன்களில் இல்லாத அளவிற்கு, சில அடிப்படையான விதிகள் கூட இப்போது தலைகீழாக மாறியிருக்கின்றன. அதாவது டீமாக இருந்து கும்பலோடு கும்பலாகக் கோவிந்தா போட முடியாது. ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்களின் திறமையைக் காட்டினால்தான் ஸ்கோர் செய்ய முடியும்.

பிக் பாஸ் 6, நாள் 1 - ரச்சிதா

நாள் 1-ல் நடந்தது என்ன?

‘சக ஹவுஸ்மேட்ஸ்களில் குறைவாகக் கவர்ந்த நான்கு நபர்களை, அனைவரும் செலுத்தும் வாக்குகளின் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நால்வரும் வீட்டிற்கு வெளியே தூங்க நேர்வதோடு, நேரடி நாமிஷேனிலும் இடம் பெறுவார்கள்’. ஆரம்பத்திலேயே அதிரடி காட்டிய இந்த விஷயத்தோடு தொடக்க நாள் எபிஸோடு முடிந்ததல்லவா? இதற்கான விடையை இன்று அறிய முடிந்தது.

‘யார் அந்த நான்கு துரதிர்ஷ்டசாலிகள்?’

“யாரிடம் இன்னமும் தனக்குச் சரியாக கனெக்ட் ஆகவில்லை?" என்பதை அடிப்படையாக வைத்து அனைத்து ஹவுஸ்மேட்ஸ்களும் பெயர்களைச் சொன்னார்கள். முதல் நாள் என்பதால் பலருக்கு சக ஹவுஸ்மேட்ஸ்களின் பெயர் கூட தெரியவில்லை. "எச்சூஸ்மி. உங்க பேரு என்ன?” என்று பரஸ்பரம் கேட்டுக் கொண்டார்கள். இந்தத் தேர்வில் நிவா, விக்ரமன் போன்றவர்களின் பெயர்கள் நிறைய முறை அடிபட்டன.

பிக் பாஸ் 6, நாள் 1 - அமுதவாணன்

“என் கூட எல்லோருமே நல்லாத்தானே பேசினாவ... நான் யாரைச் சொல்ல” என்று முத்து வெள்ளந்தியாக கேட்க, “யாரையாவது நீங்க தேர்ந்தெடுத்துத்தான் ஆவணும்” என்று கட்டாயப்படுத்தப்பட்டது. “நானும் நீங்களும் ஒரே நாட்டுல இருந்து வந்திருக்கிறோம். வாயுள்ள புள்ளதான் பொழைக்கும். பார்த்து விளையாடுங்க” என்று தேசத்தின் பாசத்தை ஜனனியிடம் காட்டினார் ADK.

இறுதியில் தேர்வான அந்த நான்கு துரதிர்ஷ்டசாலிகள் விக்ரமன், நிவா, க்வின்சி மற்றும் ஜனனி. இவர்கள் கார்டன் ஏரியாவில் உள்ள வாழைப்பழ செட்டப்பில்தான் தூங்க வேண்டும். அமர வேண்டும். மேலும் நேரடி நாமினேஷனிலும் இவர்கள் இடம் பெறுவார்கள்.
பிக் பாஸ் 6, நாள் 1

‘சீசன் 6-ன் காமெடி சைட்டிஷ் ஜி.பி.முத்துதான்!’

நேற்றே சொன்னது போல் இந்த சீசனின் காமெடி ஊறுகாய் ஜி.பி.முத்துதான். தனிப்படுக்கையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த முத்துவின் காலை குறும்பாகச் சுரண்டினார் ராபர்ட். “யார்ரா அவன் செத்த பயலே” என்று மைண்ட் வாய்ஸில் அலறினாரோ, என்னமோ... பதறிக் கொண்டு எழுந்த முத்துவைப் பார்த்து அந்த நள்ளிரவிலும் மற்றவர்கள் பேய் போலச் சிரித்துத் தீர்த்தார்கள்.
பிக் பாஸ் 6, நாள் 1

விடிந்தது. இந்த சீசனின் முதல் நாள் வேக்அப் சாங் என்ன என்பதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பத்து மார்க் கேள்விக்குப் பின்னால் உதவும். ‘புதுப்பேட்டை’ படத்திலிருந்து ‘எங்க ஏரியா உள்ள வராத’ என்கிற ரகளையான பாடல் ஒளிபரப்பானது. ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் இஷ்டம் போல ஆடித் தீர்த்தார்கள். பாட்டின் தாளத்திற்கு ஆடாமல் ‘அவர் பாட்டுக்கு’ இஷ்டம் போல் ஆடிக் கொண்டிருந்தார் முத்து. கேமரா விடாமல் இவரை ஃபாலோ செய்தது. அஸீம் இன்னமும் எழாமல் தூங்கிக் கொண்டிருந்தார். விதிகளை மீறி வீட்டின் உள்ளேயே அமர்ந்து பிரேக்பாஸ்ட் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் ஜனனி. ‘நோட் பண்றா... நோட் பண்றா...” என்று பிக் பாஸ் இவற்றையெல்லாம் உன்னிப்பாகக் குறித்து வைத்துக் கொண்டார். (இருக்கு... பஞ்சாயத்து இருக்கு...)

பிக் பாஸ் 6, நாள் 1

காலை பத்து மணி. மழை வந்தது. கூடவே காபியும் டிபனும் வந்தது. தண்டனையுடன் கார்டன் ஏரியாவில் இருந்தவர்களுக்குப் பசிக்க ஆரம்பித்தது. “வெளில இருக்கறது ஒரு மாதிரி அசௌகரியமா இருக்கு” என்று சலித்துக் கொண்டார் விக்ரமன். என்ன சமூகப் போராளியோ?! கூட மூன்று பெண்கள் இருக்கும் போது இதெல்லாம் ஒரு தண்டனையா என்ன?

“அப்ரண்டிஸ்களா... எல்லோரும் உள்ளே வந்து லிவ்விங் ஏரியால உக்காருங்க” என்று கான்ட்ராக்ட்டர் நேசமணி கணக்காகக் கூப்பிட்ட பிக் பாஸ், “தண்டனை பெற்றவர்கள் வாழைப்பழ பெட்ல மட்டும்தான் படுக்கணும். உட்காரணும். ஆனால் சிலர் இதை மீறிட்டிங்க. ஓகே... முதல்நாள்ன்றதால மன்னிக்கறேன். நீங்க ஒழுங்கா நடந்தா இதிலிருந்து தப்பிக்கலாம்” என்று கருணை காட்டினார். அடுத்ததாக, வேக் அப் சாங் போட்டும் எழுந்திருக்காத அஸிமிடம் வண்டியைத் திருப்பினார். “அய்யா... காலைல பாட்டு போட்டது உங்களுக்கு ஏதாச்சும் டிஸ்டர்ப் ஆயிடுச்சுங்களா... சொல்லுங்க... அடுத்த முறை சவுண்டைக் குறைச்சு வெக்கறேன்” என்று பிக் பாஸ் பாவனையாக மன்னிப்பு கேட்கச் சங்கடத்துடன் நெளிந்தார் அஸீம். “அப்ப எழுந்து தொலைங்கடா... இது என் வீடு... இங்க நான் சொல்றதுதான் ரூல்ஸ்” என்று டெரரான குரலில் பிக் பாஸ் கெத்து காட்ட, மன்னிப்பு கேட்டு அப்படியே பம்மி அமர்ந்தார் அஸீம்.

பிக் பாஸ் 6, நாள் 1 - அஸீம்

‘பஸ்ஸர் அடிக்கும்... குப்பை கொட்டும்... ஜாலியான முதல் டாஸ்க்!’

இந்த சீசனின் முதல் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் பற்றிய விதிகள் சொல்லப்பட்டன. கடந்த சீசன்களின் போட்டியாளர்களான பிரியங்கா, ரியோ, சுரேஷ், ஜூலி போன்றோர் வீடியோவில் காட்சியளித்து “இந்த முறை லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்லாம் வித்தியாசமா இருக்கும். தனித்தனியா ஜெயிச்சுதான் பாயிண்ட் எடுக்கணும். பாவம்... நீங்கள்லாம் என்ன பண்ணப் போறீங்களோ?” என்பது போல் பேசி ஒழுங்குக் காட்டி வெறுப்பேற்றி விட்டுச் சென்றார்கள்.
பிக் பாஸ் 6, நாள் 1

லக்ஸரி பட்ஜெட்டின் முதல் டாஸ்க் ஆரம்பித்தது. இதைத் தனித்தனியாகத்தான் விளையாட வேண்டும். ஜெயிப்பவர்களுக்கு 200 பாயிண்ட்ஸ் கிடைக்கும். வீட்டின் பல இடங்களில் இருக்கும் பஸ்ஸர்களில் ஏதாவதொன்று திடீரென்று அடிக்க ஆரம்பிக்கும். அதே சமயத்தில் வீட்டின் மேலே இருந்து பல்வேறு ஏரியாக்களில் குப்பைக் கொட்டும். அடிக்கும் பஸ்ஸரை முதலில் நிறுத்துபவர்களுக்கு 200 பாயிண்ட்ஸ். பஸ்ஸர் நிறுத்தப்படும் வரை குப்பை கொட்டுவது நிற்காது. பின்னர் அந்தக் குப்பையை அள்ளி வாரியாக வேண்டும். (‘பிக் பாஸ்ல போய் என்னத்த குப்பை கொட்டினீங்க?’ என்று யாரும் இனி கேட்க முடியாது).

முதல் பஸ்ஸரை வெற்றிகரமாக அடித்து 200 மதிப்பெண்களை அள்ளினார் மகேஸ்வரி. அடுத்த முறை, ஆறடி உயர ராமிற்கும் அமுதவாணனுக்கும் இடையில் தள்ளுமுள்ளு நடந்தது. ஒரே சமயத்தில் இருவரும் பஸ்ஸர் மீது பாய்ந்து அதன் கன்ட்ரோல் பேனலை உடைத்து விட்டார்கள். “அய்யய்யோ... சோத்துல வெஷத்தை வெச்சுடுவாங்களோ” என்கிற ரேஞ்சிற்குப் பயந்த ராமிற்கு ஆறுதல் சொன்னார் அமுதவாணன். இந்த முறை பாயின்ட் எடுத்தவர் அமுதவாணன்.

பிக் பாஸ் 6, நாள் 1 - மகேஸ்வரி

பகல் நேரத்தில் ஜாலியாகத் தூங்கிக் கொண்டிருந்த முத்து, நாய் குரைக்கும் சத்தம் கேட்டதும் அலறியடித்துக் கொண்டு கதறி எழுந்தார். ஒட்டுமொத்த வீடே அவரைக் கண்டு சிரித்தது. (ஆளு நடிக்கறாரா... உண்மையாவே வெள்ளந்தியா?!). மழை பெய்ய ஆரம்பித்தது. மற்றவர்கள் ஒதுங்கி நிற்க முத்து மட்டும் கார்டன் பெட்டில் ஜாலியாக படுத்து ‘ரெயின் பாத்’ எடுக்க ஆரம்பித்தார். (திருநவேலிக்காரங்களையும் தண்ணியையும் பிரிக்க முடியாதுன்னு சொல்லுவாஹ!).

மழைக்கு ஒதுங்கி நின்றவர்கள் பாட்டுப் பாட, “மேகம் கருக்குது... தக்கஜூம்... தக்கஜூம்...” என்று ஜோதிகாவே வெட்கப்படும் படி நனைந்து வளைந்து ஆடினார் முத்து. தனலஷ்மியும் இவருக்குக் கூடவே கம்பெனி கொடுத்தார். ‘அடச்சை... பெரிய விஜய், ஜோதிகா...’ என்று இவர்களைக் கிண்டலடித்துக் கொண்டிருந்தார் அமுதவாணன்.

பிக் பாஸ் 6, நாள் 1 - ஜி.பி.முத்து

‘யார் அந்த கிளப் உரிமையாளர்கள்?’

“வாங்க அப்ரண்டிஸ்களா...” என்று மீண்டும் இவர்களை ஒன்று திரட்டிய பிக் பாஸ், வீட்டுப் பணிகளுக்கான அணிகளைப் பிரிக்கும் டாஸ்க்கை ஒப்படைத்தார். இதற்கு ‘பிக் பாஸ் க்ளப் ஹவுஸ்’ என்று புதிய பெயர் சூட்டப்பட்டது. அதாவது முன்பு ‘டீம்’ என்று சொன்னதை இப்போது ‘கிளப்’ என்று மாற்றியிருக்கிறார்கள், அவ்வளவே! அதே கூட்டிப் பெருக்கும் வேலைதான். ஆனால் "நான் க்ளீனிங் கிளப்ல இருக்கேன்” என்று சொன்னால் ஒரு கெத்தாக இருக்கும் அல்லவா?

ஒவ்வொரு க்ளப்பிற்கும் ஒரு உரிமையாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். யார் எந்த அணியில் சேர விரும்புகிறார்கள் என்பதைத் தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு கிளப்பிற்கும் ஒரு டெமொ டெஸ்ட் நடக்கும். இதில் சிறப்பாகச் செயல்படுபவர்தான் கிளப்பின் உரிமையாளர். போட்டியில் இல்லாத மற்ற ஹவுஸ்மேட்ஸ் ஒன்று கூடிப் பேசி ‘யார் அந்த கிளப் உரிமையாளர்?’ என்பதை முடிவு செய்வார்கள். இதுதான் விதிமுறை.

பிக் பாஸ் 6, நாள் 1

முதலில் கிச்சன் டீமிற்கான தேர்வு நடந்தது. ஒவ்வொருவரிடமும் சமையல் மெனு தொடர்பான எளிய கேள்விகள் கேட்கப்பட்டன. பிறகு வெட்டப்பட்டிருந்த காய்கறி ஒன்றைச் சாப்பிடத் தந்து சரியான விடையைச் சொல்லச் சொன்னார்கள். தனக்குத் தரப்பட்டது ‘முள்ளங்கி’ என்பதைச் சரியாகக் கண்டுபிடித்தார் விக்ரமன். உப்புமாவிற்கான மெனு சாந்தி மாஸ்டரிடம் கேட்கப்பட்டது. பொதுவாக உப்புமா என்பதே ஒரு கொடுங்கனவு. சாந்தி விவரித்த மெனுவைப் பார்த்துப் பலருக்கும் குளிர்சுரமே வந்திருக்கும். இந்தப் போட்டியை பிளாஸ்மா டிவி வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த இதர ஹவுஸ்மேட்ஸ் நமட்டுச்சிரிப்பு சிரித்தார்கள். இறுதியில் ரசத்திற்கான மெனுவைச் சிறப்பாகச் சொல்லி கிச்சன் கிளப்பிற்கு உரிமையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஷிவின்.

அடுத்ததாக பாத்ரூம் க்ளீனிங் தோ்வு. நீர் நிரப்பப்பட்ட ஒரு டப்பை ஐந்து நபர்களும் இணைந்து கீழேயுள்ள கட்டைகளின் மூலம் தூக்கி நகர்த்தி வைக்க வேண்டும். அதிக உயரம் காரணமாக ராம் இருந்த பக்கத்திலிருந்து டப் சரிந்து கீழே விழுந்தது. “ஓகே... வீட்டுக்குள்ளயாவது வேலையை ஒழுங்கா செய்யுங்க...” என்று வழியனுப்பி வைத்தார் பிக் பாஸ். இதன் உரிமையாளராக அமுதவாணன் தேர்வானார்.

பிக் பாஸ் 6, நாள் 1

அடுத்ததாகப் பாத்திரம் கழுவும் கிளப்பிற்கான தோ்வு. தீய்ந்து காய்ந்து வறண்டு போன சில பாத்திரங்களும் ஒரேயொரு பக்கெட் நீரும் தரப்பட்டது. கோயிலில் சுண்டல் வாங்குவது போல "யார் முதலில் கழுவி முடிப்பது?” என்று ஆளாளுக்கு முந்தியதில் தண்ணீர் கணிசமாக வீணானது. இதில் தேர்வானவர் ஜனனி.

வீடு சுத்தம் செய்யும் கிளப்பிற்கான தேர்வும் முடிந்துவிட்டால் இந்தச் சடங்கு முடியும். பிறகுதான் ரணகளமான பஞ்சாயத்துக்கள் ஆரம்பிக்கும். அவற்றையெல்லாம் நாளைய எபிஸோடில் காணலாம்.

‘முதல் வாரமே வெளியேறக்கூடிய ஹவுஸ்மேட்’ என்று நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் வந்து கருத்துகளைச் சொல்லுங்கள்.


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/bigg-boss-tamil-season-6-gp-muthu-atrocities-day-1-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக