நெதர்லாந்து நாட்டில், அமெரிக்க நிறுவனமான புளோரிடா டெலிமார்க்கெட்டிங் எனும் மென்பொருள் நிறுவனத்தில் கடந்த 2019 ஜனவரியில் ஒருவர் ஊழியராக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். இவர், சம்பளம், கமிஷன், போனஸ், விடுமுறைக் கொடுப்பனவு என ஆண்டுக்கு 70,000 யூரோவுக்கு மேல் சம்பாதித்து வந்திருக்கிறார். சரியாக வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடம் கழித்து அந்த ஊழியருக்கு, "Corrective Action Program" எனப்படும் ஆன்லைன் வழி மெய்நிகர் பயிற்சி காலத்தில் கலந்துகொள்ளுமாறு நிறுவனம் உத்தரவிட்டிருக்கிறது. ஒரு நாளைக்கு 9 மணிநேரம் அவர் கண்காணிக்கப்படுவார் என்ற அந்த உத்தரவில், ஸ்கிரீன் பகிர்தல் மற்றும் வெப் கேமரா ஸ்ட்ரீமிங் ஆகியவை அடங்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.
ஆனால், இந்த உத்தரவின்படி, ஊழியர் தன்னுடைய வெப் கேமராவை ஆன் செய்யாததற்காக, அந்த நிறுவனம் அவரை வேலையிலிருந்து நீக்கியது. இதுகுறித்து ஊடகத்தில் வெளியான தகவலின்படி, வேலை செய்ய மறுத்ததற்காக அவரை நீக்கியதாகச் சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதற்கு ஊழியர் தரப்பிலிருந்து, ``நான் எனது திரையைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், நீங்கள் ஏற்கனவே எனது மடிக்கணினியில் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்க முடியும்" என்று பதிலும் கூறப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரத்தில், `தான் அமெரிக்க நிறுவனத்தில் வேலை செய்திருந்தாலும், நெதர்லாந்தில் தொழிலாளர் சட்டங்கள் வேறுபட்டவை. எனவே நியாயமற்ற முறையில், தான் பணிநீக்கம் செய்யப்பட்டதற்காக’ அந்த ஊழியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.
மேலும் அந்த ஊழியர், ``ஒரு நாளைக்கு 9 மணிநேரம் கேமராவால் கண்காணிக்கப்படுவது எனக்கு வசதியாக இல்லை. இது என்னுடைய தனியுரிமையின் மீதான ஆக்கிரமிப்பு. மேலும் இது என்னை மிகவும் அசௌகரியமாக உணர வைக்கிறது" என கேமரா ஆன் செய்யாததற்கு நீதிமன்றத்தில் காரணம் தெரிவித்திருக்கிறார். பின்னர் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ``இதில் அவர் வேலை செய்ய மறுத்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. கேமராவை ஆன் செய்வதற்கான அறிவுறுத்தல் என்பது பணியாளரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்கும் உரிமைக்கு எதிரானது. மேலும், ஒரு நாளைக்கு 8 மணிநேரம் கேமரா மூலம் கண்காணிப்பது நியாயமற்றது, நெதர்லாந்தில் இது அனுமதிக்கப்படவில்லை. எனவே பணியாளரை நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்துள்ளீர்கள். இதற்காக அவருக்கு இழப்பீடாக 75,000 யூரோவை(இந்திய மதிப்பில் ரூ.65 லட்சம்) வழங்க வேண்டும்" என சம்பத்தப்பட்ட நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
source https://www.vikatan.com/news/international/man-fired-for-refusing-to-keep-his-webcam-on-while-working-wins-rs-60-lakh-compensation
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக