வி.சி.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் ஒருங்கிணைந்து நேற்று (11.10.2022) தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடத்தின. விழுப்புரத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விழுப்புரம் மக்களவை தொகுதி உறுப்பினர் துரை.ரவிக்குமார், ``’காவி கும்பலுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை' என்று தமிழ்நாடு முழுவதும் இன்று மக்கள் அணிதிரண்டு முழங்குகிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த மனித சங்கிலி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தகு உணர்வைப் புரிந்துகொண்டு, ஆர்.எஸ்.எஸ் காவிக் கும்பல் தமிழகத்தில் தன்னுடைய பிளவு வேலையை காட்ட வேண்டாம். உங்களுக்கான இடம் இது இல்லை என்பதை எச்சரிக்கையாக அறிவுறுத்தி கூறுகிறோம்.
பிளவுவாத சக்திகளுக்கு, பிரிவினை வாதிகளுக்கு... மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் மக்களை கூறுபடுத்தும் சக்திகளுக்கு... தமிழ்நாட்டிலே இடமில்லை என்பதை சொல்வதற்காக தான் இன்றைக்கு இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை காவி கும்பல் கடைசி எச்சரிக்கையாக உணர்வார்கள் என நம்புகிறோம். இந்திய பிரதமர் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதற்கும் உரிமை படைத்தவர். ஆனால், அவர் ஏன் இங்கே வருகிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும். அவர்கள், சாதிய ரீதியிலே தமிழ் மக்களை கூறுபடுத்தி அதில் அரசியல் லாபம் பார்க்க துடிக்கிறார்கள்.
ஏற்கனவே, தேவேந்திரகுல வேளாளர் மக்களை ஒரே பெயரில் அறிவிக்கிறோம் என்று சொல்லி, பட்டியலிலிருந்து உங்களை வெளியேற்ற நாங்கள் சட்டம் இயற்றுகிறோம் என்று சொல்லி, இங்கே அவர்கள் வந்து பேசினார்கள். இப்போது அங்குள்ள முக்குலத்தோர் மக்களின் வாக்குகளை குறிவைத்து, தேவர் குரு பூஜையிலே மோடி அவர்கள் பங்கேற்கிறார்கள். நரேந்திர மோடி அவர்கள் பிரதமராகி 8 ஆண்டுகள் கடந்துவிட்டது. இப்போது தான் பசும்பொன் தேவரின் பெருமை அவருக்கு தெரிந்ததா..? இன்று தான் அங்கு வரவேண்டும் என்று அவருக்கு புரிந்ததா..? இதையெல்லாமே 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலை குறிவைத்து தான் செய்கிறார்கள்.
இந்த நாட்டு மக்கள் இதனை நன்றாக உணர்வார்கள். குறிப்பாக தமிழகத்தில் தென் மாவட்டத்தில் இருப்பவர்கள் பா.ஜ.க-வினுடைய அரசியலை நன்றாக புரிந்தவர்கள். தேவர் திருமகனாரின் கொள்கையிலே நம்பிக்கையுள்ளவர்கள் யாரும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க கும்பலின் பிரிவினைவாத அரசியலுக்கு பலியாக மாட்டார்கள். இங்குள்ள ஜனநாயக சக்திகளின் ஒருமித்த வேண்டுகோள் என்னவென்றால், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழகத்திலே அனுமதி அளிக்கக்கூடாது என்பதுதான்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/mp-ravikumar-spoke-about-prime-minister-modis-visit-to-tamil-nadu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக