ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளராக மீண்டும் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பரமக்குடிக்கு வந்த அவரை வரவேற்கும் விதமாக பரமக்குடி ஐந்தாவது வார்டு தி.மு.க நகர்மன்ற உறுப்பினர் பாக்யராஜ் பேனர் வைத்துள்ளார். அதில் பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசன் படம் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து எம்.எல்.ஏ முருகேசன் உறவினர் விக்கி (எ) விக்னேஷ் என்பவர் பாக்யராஜை திட்டியதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக எம்.எல்.ஏ முருகேசனை தொடர்பு கொண்டு கேட்கும் பாக்யராஜை அவர் மிரட்டியதாக ஆடியோ ஒன்றும் வெளியானது. இந்த ஆடியோவை பாக்யராஜ் தரப்பு வெளியிட்டது.
அதில், `பேனரில் படம் போடாததற்கு நீங்கள் சொல்லியதாக விக்கி என்பவர் தன்னை மிரட்டுகிறார்’ என தெரிவிக்கும் பாக்யராஜிடம், ``தொகுதி எம்.எல்.ஏ படம் போடாததினால் என் மகன் கேட்டிருப்பார்” என முருகேசன் பதில் அளிப்பதாக உள்ளது. மேலும், "என்னுடைய சொந்த பணத்தில் நான் பேனர் வைக்கிறேன். அதில் எதற்காக உங்கள் படத்தை போட வேண்டும்?” என பாக்கியராஜ் பதிலுக்கு கேட்கிறார். அதற்கு எம்.எல்.ஏ முருகேசன், ``ஓ அப்படியா, நீயா நானா பார்போம், உன் பலத்தையும் என் பலத்தையும் பார்ப்போம்” என கூறுகிறார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த ஆடியோ தொடர்பாக எம்.எல்.ஏ முருகேசன் தரப்பினர் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.
இந்நிலையில் பரமக்குடியில் உள்ள பள்ளிகளில் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதில் எம்.எல்.ஏ முருகேசன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர். அப்போது பேனரில் படம் போடாதது தொடர்பாக அங்கிருந்த தி.மு.க கவுன்சிலர் பாக்யராஜிடம் எம்.எல்.ஏ முருகேசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
பின்னர் நிகழ்ச்சி முடிந்து கவுன்சிலர் பாக்யராஜ், பரமக்குடி வடக்கு நகர செயலாளர் ஜீவானந்தம் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். பரமக்குடி ஐந்து முனை சந்திப்பில் சென்ற அவர்களை மூன்று கார்களில் வந்த எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் என சொல்லப்படுபவர்கள் பாக்யராஜை தாக்கி கத்தியால் விலாவில் குத்திவிட்டு தப்பிஒடியுள்ளனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த பரமக்குடி நகர் காவல் நிலைய போலீஸார் படுகாயம் அடைந்த பாக்கியராஜிடம் விசாரணை நடத்திய பிறகு அவரை பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து எம்.எல்.ஏ மகன் துரைமுருகன், அவரது உறவினர் விக்கி உள்ளிட்ட 25 நபர்கள் மீது பாக்கியராஜ் புகார் அளித்துள்ளார். அதேபோல் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாக்கியராஜ், ஜீவானந்தம், மதுசூதனன் ஆகியோர் மீது விக்கி புகார் அளித்துள்ளார்.
இருதரப்பு புகார் தொடர்பாக பரமக்குடி நகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
source https://www.vikatan.com/news/crime/dmk-councilor-complaint-against-dmk-mla-son-in-stabbing-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக