Ad

வியாழன், 6 அக்டோபர், 2022

``இது தமிழ் மண்... ஒரு காலமும் இந்தியையும், சம்ஸ்கிருதத்தையும் திணிக்க முடியாது!'' - வைகோ காட்டம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இந்தித் திணிப்பைக் கண்டித்து அறப்போர் ஆர்ப்பாட்டம் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய வைகோ, ``இந்தியை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்ற ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் போராடி வந்திருக்கிறோம். இப்போது நாம் மிக நெருக்கடியான காலக்கட்டத்துக்கு வந்திருக்கிறோம்.

முன்பிருந்த கர்நாடக அரசு இந்தியை எதிர்த்தது. ஆனால் இப்போது இருக்கிற கர்நாடக அரசு இந்தியை ஆதரிக்கிறது. ஆனால் நாம்தான் இன்னும் இந்தியை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தி பேசாத மாநிலங்களும் இந்தியை எதிர்க்கும் என எதிர்பார்க்கிறோம். அமித் ஷா இந்தியை கொண்டு வந்தே தீருவோம் என்று கர்ஜிக்கிறார்.

அவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் நெருப்போடு விளையாடாதீர்கள், இந்தியாவின் ஒற்றுமையோடு விளையாடாதீர்கள், இந்தியாவின் ஒருமைப்பாட்டோடு விளையாடாதீர்கள், ஏனென்றால் இந்திய ஒருமைப்பாடு என்பது பல தேசிய இனங்களைக் கொண்டது. இந்தியா என்பது பல தேசிய இனங்களைக் கொண்ட நாடு.

தமிழ்நாட்டுக்கு இரண்டு மொழிகள்தான். ஒன்று தமிழ் மற்றொன்று ஆங்கிலம் என அறிஞர் அண்ணாவே மசோதாவை கொண்டு வந்திருக்கிறார். அவர் கொண்டு வந்த மூன்று மசோதாக்களை மாற்ற முடியாது என அவர் மரண வாசலில் இருந்தபோது தெரிவித்திருக்கிறார்.

அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணா கொண்டு வந்த இரு மொழிக் கொள்கையை மாற்ற ஆதிக்க சக்திகள், ஏகாதிபத்திய சக்திகள், சனாதன சக்திகள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. அவர்கள் சம்ஸ்கிருதத்தையும், இந்தியையும் கொண்டுவந்து திணித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அது ஒரு காலமும் நடக்காது.

இது தமிழ் மண். சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட மண். ஒரு காலத்திலும், சம்ஸ்கிருதத்தையும், இந்தியையும் திணிக்க முடியாது. அதற்கு இந்த திராவிட மாடல் ஆட்சி இடம் கொடுக்காது. திராவிட மாடல் ஆட்சிக்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம். இந்த ஆட்சிக்கு பக்க துணையாக இருப்போம். இந்தி, சம்ஸ்கிருதம் என்ற கனவை நீங்கள் தயவு செய்து மறந்து விடுங்கள்'' என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/mdmk-vaiko-speech-regarding-hindi-imposition-in-tamilnadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக