காதல் என்பது எப்போது, யார்மீது, எந்த கணத்தில் வரும் என்பதை காதல்வயப்படும் அந்த கடைசிநொடிவரை யாருக்கும் நிச்சயம் தெரியப்போவதில்லை. அப்படியான காதல் எப்போதுமே, நாம் நினைத்துப்பார்க்கக்கூடிய எதார்த்தத்துக்கு விதிவிலக்கு தான். ஏனெனில் வயதைக் கடந்த காதலையும், தொலைவைத் தொலைத்த காதலையும் இன்னும்கூட நாம் பார்த்துக்கொண்டும், சமூக வலைதளங்களில் அறிந்துகொண்டும்தான் இருக்கிறோம். கடந்த ஆகஸ்டில்கூட, பிலிப்பைன்ஸில் 78 வயது முதியவர் ஒருவர், 18 வயது பெண்ணை 3 வருடங்களாகக் காதலித்து கரம்பிடித்தார்.
ஆனால் இங்கு அதற்கும் ஒரு படி மேலாக, 60 வயது பெண் ஒருவர், தன்னைவிட 30 வயது இளையவரான பழங்குடியின காதலனை, 14,400 கி.மீ கடந்து சென்று கரம் பிடித்திருக்கிறார்.
டெபோரா(Deborah) என்று அறியப்படும் இந்த 60 வயது பெண், அக்டோபர் 2017-ல் தன் மகளுடன் தான்சானியாவில்(Tanzania) பயணம் செய்யும்போதுதான், சைட்டோடி பாபு(Saitoty babu) எனும் பழங்குடியின இளைஞரை நேரில் சந்தித்திருக்கிறார். ஆனால், அப்போது அந்தப் பெண், இந்த இளைஞன் தன்மீது காதல்கொள்வான் என்றும், தானும் அந்த இளைஞனை கரம் பிடிப்போம் என்றும் நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார்.
பின்னர் ஒருநாள் டெபோராவும், அவரின் மகளும் சான்சிபார்(Zanzibar) கடற்கரையில் நடந்து சென்றபோது மீண்டும் சைட்டோடியைச் சந்திக்கும் சூழல் உருவானது. அப்போது, சைட்டோடியும், அவரின் சக பழங்குடியினரும், டெபோராவுக்கு சில நினைவுப் பரிசுகள் வழங்கினர். ஆனால், டெபோரா அதனை ஏற்கமறுத்துவிட்டார், இருப்பினும் `புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா?' என்றுமட்டும் கேட்டிருக்கிறார். அதில் தொடங்கிய நட்பு கொஞ்சம் கொஞ்சமாகக் காதலாக மாறியது. பின்னர் டெபோரா அமெரிக்கா திரும்பியதும், சைட்டோடியிடமிருந்து திருமணம் பற்றிய கேள்வி எழுந்தது.
அதையடுத்து, டெபோரா தன்னுடைய குழந்தைகளின் ஊக்கத்துடன் சைட்டோடியைச் சந்திக்க டிசம்பரில் மீண்டும் தான்சானியா வந்தடைய, சைட்டோட்டியும் திருமணம் குறித்த தன் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தார். பின்னர் கடந்த 2018, ஜூன் மாதத்தில் பாரம்பர்ய மாசாய் பாணியில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனாலும், இவர்களின் திருமணம் இந்தாண்டுதான் சட்டபூர்வமாக்கப்பட்டது.
இது குறித்துப் பேசிய டெபோரா, ``நான் ஒரு கணவனைக் கண்டுபிடித்து, அதிலும் என்னைவிட மிகவும் இளையவர் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வேன் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. அவர் மிகவும் கனிவானவர். அதோடு மிகுந்த அக்கறையுள்ள மனிதரும்கூட. அதேசமயம், நான் அவரை தத்தெடுத்தேனா அல்லது நான் அவருடைய பாட்டியா என்று மக்கள் கேட்கிறார்கள். இது சைட்டோடியை மிகவும் வருத்தமடையச் செய்யும். இருப்பினும் நாங்கள், எங்கள்மீதும் எங்கள் மகிழ்ச்சியின்மீதும் கவனம் செலுத்த விரும்புகிறோம்" எனக் கூறினார்.
source https://www.vikatan.com/news/international/woman-moves-14400-kms-away-from-home-to-marry-a-maasai-tribesman-30-years-younger-than-her
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக