அதிமுக-வின் ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு இதுவரை எந்த முடிவும் கிடைக்கவில்லை. ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த மாதம் 2,532 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட பிரமான பத்திரத்தையும் எடப்பாடியின் ஆதரவாளர் சி.வி.சண்முகம் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தார். இந்தச்சூழலில், அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து பன்னீர் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு கடந்த வாரம் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கின் மீதான விசாரணையில், `எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பிக்கிறோம், இதுதொடர்பான வழக்கை நவம்பர் மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைக்கிறோம். பொதுக்குழு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு குறித்தும் விவாதிக்கப்படும். இருப்பினும் இந்த வழக்கில் விசாரணை முடிந்து ஒரு உத்தரவு பிறப்பிக்கும் வரையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தக் கூடாது. அதனை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைக்கிறது’ என உத்தரவிடப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை உடனடியாக நடத்த உச்ச நீதிமன்றம் விதித்த தடை எடப்பாடி தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்தச்சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் பொன்னையன், பன்னீர் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பனிடம் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில், ``யாரும் கட்சிக்கு விசுவாசமாக இல்லை. சாதி அடிப்படையில் எம்.எல்.ஏக்கள் பிரிந்து கிடக்கிறார்கள். எடப்பாடிக்கு வேறு வழியில்லை. கே.பி.முனுசாமி கூட ஒற்றைத் தலைமைக்கு வரலாம். எம்.எல்.ஏ ஆதரவு வைத்துதான் எதிர்காலம். கொள்கையை விட்டுவிட்டு பதவியை காப்பாற்றினால் போதும் என எடப்பாடி ஓடுகிறார்" போன்ற கருத்துக்கள் எல்லாம் அந்த ஆடியோவில் பதிவாகியிருந்தது.
இந்த ஆடியோ குறித்து விளக்கமளித்த பொன்னையனோ "அது என்னுடைய குரல் இல்லை. மிமிக்ரி செய்து வெளியிடப்பட்டுள்ளது. என்னை வைத்து அரசியல் செய்கிறார்கள்" என்று விளக்கமளித்தார். ஆனால், இந்த ஆடியோ உண்மை தான் என்று நாஞ்சில் கோலப்பன் உறுதியாக தெரிவித்தார்.
இந்தநிலையில், பொன்னையன் பேசும் மற்றொரு ஆடியோ என்னிடம் இருப்பதாக நாஞ்சில் கோலப்பன் பேசி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக, 3 நிமிடம் இந்த ஆடியோ இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரிடம் பேசினோம், "எடப்பாடி முதல்வராக இருக்கும் போது தொண்டர்களுக்கு என்ன துரோகம் செய்தார் என்பதே அந்த ஆடியோ. அரசு பதவியில் இருந்த போது பொன்னையன் கொடுத்த விளக்கமே இந்த ஆடியோ. குழப்பத்தை உண்டாக்கக்கூடாது என்று தான் நாங்கள் இந்த ஆடியோவை முதலில் வெளியிடவில்லை. பெரிய பிரச்னைகள் ஏற்படும் என்றுதான் தவிர்த்தோம். அவர்கள் மோதி பார்க்க முடிவெடுத்துவிட்டார்கள் என்றால் நாங்களும் மோதி பார்க்கத் தயாராகிவிடுவோம். தொண்டர்கள் எல்லாருக்கும் உண்மைத் தன்மை தெரிய வேண்டும் என நினைக்கிறோம். அதிமுகவை அழிக்க வேண்டுமென யாரெல்லாம் செயல்படுகிறார்களோ அவர்களின் முகத்திரை கிழிக்கப்படும்" என்கிறார்.
source https://www.vikatan.com/news/politics/we-have-another-audio-regarding-edappadi-says-panneerselvam-supporter
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக