புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. இவர் நெடுஞ்சாலை துறை அரசு ஒப்பந்ததாரராக இருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அவரின் தந்தை மாணிக்கம் நெடுஞ்சாலை துறையில் பணியாற்றிய நிலையில், அப்பா உயிரிழந்ததையடுத்து வாரிசு அடிப்படையில் பாண்டித்துரை நெடுஞ்சாலை துறையில் இளநிலை உதவியாளராக தனது பணியைத் தொடங்கியவர். பின்னர் புதுக்கோட்டையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட அலுவலகத்தில் உதவியாளராக பணி உயர்வு பெற்று பணியாற்றி வந்தார்.
பின்னர், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரராக மாறிய இவர் குறிப்பாக, ஒளிரும் மின்விளக்குகளில் தொடங்கி, பேரிகார்டு வரை நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் மூலம் பெருமளவில் பொருளாதாரம் ஈட்டி மிகப்பெரிய அளவில் சொத்துக்களை இவர் குவித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள ஹரிவே லயன்ஸ் என்ற பெயரில் இயங்கும் அவரின் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியிருக்கின்றனர். 3 கார்களில் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் 10 பேர் காலை 10 மணி முதலே சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், அதே பகுதியில் உள்ள அவரின் வீடு, மேலாளர் பீட்டர் என்பவரின் வீடு, திருவப்பூர் அருகே இருக்கும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட 5 இடங்களில் இந்தச் சோதனையானது நடைபெற்றது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றிருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது. வருமானத்திற்கு அதிகமாக முறைகேடு செய்து சொத்து சேர்த்ததன் அடிப்படையிலேயே இந்தச் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த ரெய்டு அடுத்தடுத்த நாள்கள் தொடரலாம் என்று வருமானவரித்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. உதவி கோட்ட அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றியவர், அதிமுக ஆட்சிக்காலத்தில் சில முக்கியமானவர்களுடன் நெருக்கம் ஏற்பட்ட நிலையில், தனது பணியை விட்டுவிட்டு நெடுஞ்சாலைத் துறையில் அரசு ஒப்பந்ததாரராக பணி தொடங்கியிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் பாண்டித்துரை, முதலில் ஓ.பன்னீர்செல்வம் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த போதும், பின்னர் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த காலகட்டத்திலும் நெடுஞ்சாலைதுறையில் சாலையில் பதிக்கக்கூடிய ஒளி பிரதிபலிப்பான், சாலையில் வைக்கக்கூடிய பிரதிபலிப்பு பலகைகள் உள்ளிட்டவைகளை ஒப்பந்தம் எடுத்து வந்துள்ளார்.
தற்போதும், தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் இந்த ஒப்பந்தத்தை இவரே எடுத்து செய்து வருகிறார். இவர் பெயரில் மட்டுமின்றி இவரின் ஆதரவாளர்கள் பெயரிலும் அதிக அளவில் ஒப்பந்தங்களை எடுத்து செய்து வருவதாக தகவல். புதுக்கோட்டையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் என கூறப்படும் அரசு ஒப்பந்ததார் தொடர்புடைய இடங்களில் நடந்த ரெய்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/tamilnadu/income-raid-in-highway-contractor-houses-office-in-puthukottai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக