நாமக்கல் மாவட்டம், முத்துகாப்பட்டி அருகே உள்ளது பிரசித்தி பெற்ற பெரியசாமி கோயில். இக்கோயிலுக்கு, அமாவாசை, பவுர்ணமி நாள்களில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். தமிழகம் முழுக்க இந்த கோயிலுக்கு பக்தர்கள் இருக்கிறார்கள். அதோடு, இந்த கோயில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை தோறும் திரளான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து, ஆடு, கோழி பலி கொடுத்து பூஜை செய்வது வழக்கம்.
இந்நிலையில், நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் லட்சுமிகாந்தன் (51). இவர், நைனாமலை பெருமாள் கோயிலுக்கு மட்டுமின்றி, சேந்தமங்கலம் அருகே உள்ள முத்துகாப்பட்டி பெரியசாமி கோயில் அதிகாரியாகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். முத்துகாபட்டி பெரியசாமி கோயிலில், புதுக்கோம்பையைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரும், அவரின் இரு சகோதரர்களும் பூஜைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், பூசாரிகளுக்கு பூஜை செய்யும் முறையை தொடர்ந்து வழங்குவதற்காக, நாமக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி கமிஷனர் ரமேஷ், நைனாமலை கோயில் செயல் அலுவலர் லட்சுமிகாந்தன் ஆகியோர் பூசாரிகளிடம் லஞ்சம் பெற்று வந்ததாகச் சொல்லப்படுகிறது. அதேபோல், புரட்டாசி மாதம் அதிக அளவில் பக்தர்கள் வருவதால், ரூ. 21,000 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். லஞ்சம் தர மறுத்தால், கோயில் பூஜை பணியை தொடர்ந்து செய்ய முடியாது என்று கூறி, மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால், பூசாரியாக வேலை செய்து வரும் தங்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து லஞ்சம் கேட்கின்றனர் என்று லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் அவர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனையின் பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூ.21,000-த்தை அண்ணாதுரை ஏளூர் அகரம் பகுதியில் வைத்து செயல் அலுவலர் லட்சுமிகாந்தனிடம் கொடுத்து உள்ளார். அப்போது, அங்கு மறைந்து இருந்த இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையிலான லஞ்சம் ஒழிப்புத்துறை போலீஸார், லட்சுமிகாந்தனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர், அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தியபோது, மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ் லஞ்சம் வாங்க சொன்னதால், தான் பூசாரிகளிடம் லஞ்சம் வாங்கினேன் என கூறியதாக தெரிகிறது. அதற்கான ஆடியோவையும் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம், லட்சுமிகாந்தன் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், பூசாரியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் உதவி ஆணையர் ரமேஷ், செயல் அலுவலர் லட்சுமிகாந்தன் ஆகிய இருவரையும், பணி இடை நீக்கம் செய்து, இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/namakkal-anti-corruption-squad-arrested-two-officials-for-bribe
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக