Ad

ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

IND v PAK: உதிரிகள், கேட்ச் டிராப், பௌலிங் ஸ்பெல் குளறுபடிகள் - எங்கெல்லாம் இந்தியா தவறவிட்டது?

முந்தைய தோல்விக்கு ஏழே நாள்களில் பாகிஸ்தான் பழிதீர்க்க, சூப்பர் 4-ல் முதல் போட்டியை தோல்வியோடு தொடங்கியுள்ளது இந்தியா. ஓப்பனிங் பேட்ஸ்மேன்களின் அதிரடி, கோலியின் சரவெடி என முதல் பாதி முடிந்தாலும், புவனேஷ்வரின் மோசமான லைன் அண்ட் லெந்த்தும், மற்ற பௌலர்களின் அதிகப்படியான வொய்டுகளும், அர்ஷ்தீப்பின் கேட்ச் டிராப்பும் இரண்டாவது பாதியை பாகிஸ்தானிற்குத் தாரை வார்க்க வைத்தன. கடந்த சில தொடர்களாக இந்தியா கண்டறிந்த சில பலவீனங்கள் இப்போட்டியில் நேர் செய்யப்பட்டிருக்க, புதிதாகச் சிலவற்றை இந்தத் தோல்வி அடையாளம் காட்டியுள்ளது.

ஒருநாள் மற்றும் டி20-க்குமான முக்கிய வேறுபாடு, ஒருநாள் போட்டிகளைப் போல் டி20-ல் கடைசி சுற்றில் மட்டும் வேகம் எடுப்பது போதாது, குண்டு முழக்கத்தை கேட்ட நொடியிலிருந்து ஓட்டத்தில் அதிவேகம் வேண்டும். இந்த அணுகுமுறையைதான் பவர்பிளேயில் ஓப்பனர்களிடம் இந்தியா தவறவிட்டு வந்தது. அந்த அழுத்தம்தான் மத்திய வரிசை முதல் ஃபினிஷர்கள் வரை கடத்தப்பட்டும் வந்தது. அதனை உடைத்து மாற்றி, ரோஹித் - ராகுல் கூட்டணி இப்போட்டியில் ஆட்டத்தின் போக்கை தங்கள் கைபிடிக்குள் கொண்டு வந்தது.

கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா | IND v PAK

பந்து ஸ்விங் ஆகவில்லை என்றாலும் சீம் மூவ்மெண்டும் எக்ஸ்ட்ரா பவுன்ஸும் பௌலர்களுக்கு ஓரளவு கை கொடுக்கவே செய்தது. ஆனாலும் போன சந்திப்பைப் போல் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சில் அத்தனை அச்சுறுத்தலில்லை. அதேநேரம், பேட்ஸ்மேன்களுக்கும் பிட்ச் நேசக்கரமே நீட்டியது. அதை ஓப்பனர்கள் 100 சதவிகிதம் பயன்படுத்தினர். முதல் ஓவரிலேயே ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸரோடு ரோஹித் காட்டிய முன்னோட்டம், பவர்பிளே முழுவதிலும் தொடர்ந்தது. மறுமுனையில் ராகுலும் அதே அலைவரிசையில் இருந்ததால்தான் டி20-ல் பாகிஸ்தானுக்கு எதிரான தங்களது அதிகபட்ச பவர்பிளே ஸ்கோரை (62) இந்தியாவால் பதிவு செய்ய முடிந்தது.

சமீபகாலத்தில் இந்தியாவின் டாப் 3 மீதான விமர்சனங்கள் வலுத்திருந்தன. ஆனால், இப்போட்டியில் அந்த மூவரின் பேட்களில் இருந்து வந்திருந்த ரன்களால் மட்டுமே இந்தியா ஓரளவேனும் சவாலான ஸ்கோரை எட்டியது. 6.1 ஓவரிலேயே தலா 28 ரன்களோடு ஓப்பனர்கள் இருவருமே கிளம்பி இருந்தாலும், அவர்களது 140 மற்றும் 175 ஸ்ட்ரைக் ரேட்கள் தேவைப்பட்ட சேதாரத்தைச் செய்துவிட்டன.

10-ஐ சுற்றியே வட்டமிட்ட ரன்ரேட்டைக் கட்டுப்படுத்த, வேகப்பந்து வீச்சை விட்டு ஸ்பின் பௌலர்களிடம் பாகிஸ்தான் கவனத்தைத் திருப்ப, போட்டிக்குள் அவர்களைத் திரும்பக் கொண்டு வந்தனர் நவாஸ் மற்றும் ஷதாப். கடந்த இரு போட்டிகளின் ஆட்ட நாயகர்களான ஹர்திக் மற்றும் சூர்யா இருவரையும்கூட, சுலபமாக ஒற்றை இலக்கத்தில் பாகிஸ்தான் அனுப்பியது. ரிஷப் பண்ட் தனது விக்கெட்டை தாரை வார்க்கும் வழமை மாறாமல் ஷதாப் வீசிய கூக்ளியைக் கணிக்காமல் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று பேக்வர்ட் பாயின்ட்டில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஹூடாவோ ஒரு ராம்ப் ஷாட்டை மட்டுமே ஆறுதல் பரிசாக அளித்தார். இப்படி மற்ற ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் ஒட்டுமொத்தமாக 38 பந்துகளில் 43 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தாலும் 180-ஐ இந்தியாவைத் தாண்ட வைத்தது ஆரம்பகட்ட அதிரடி மட்டுமல்ல, கோலியின் பழைய விண்டேஜ் இன்னிங்ஸும்தான்.

விராட் கோலி | IND v PAK

கோலியின் ஆட்டமுறையின் ப்ளூ ப்ரின்ட்டின் கூறுகளை ஆராய்ந்தால் அதில் எப்போதும் ஒரு பேட்டர்ன் பின்பற்றப்பட்டிருக்கும். அவர் அச்சாக மாறி இருந்த இடத்திலிருந்தே இயங்க, அவரைச் சுற்றித்தான் மற்றவர்களின் ஆட்டம் சுழலும்; பிணைக்கப்பட்டிருக்கும். ஏரியல் ஷாட்களில் அண்ணாந்து பார்க்க வைக்காவிட்டாலும் 140+ ஸ்ட்ரைக் ரேட்டோடு ரன்கள் எப்படியும் வந்துவிடும். காரணம், விக்கெட்டுகளுக்கு இடையே அதிவேகமாக ஓடி ரன்களைக் களவாடிக் கொள்ளும் சாமர்த்தியம் அவரிடம் நிறையவே உண்டு. டாட் பால்களினால் காற்றில் பரவும் அழுத்தப் புகையை அது கலைத்துவிடும். இதனை மறந்து பல மாதங்களாக அவர் தடுமாறி வந்தார் என்பதே உண்மை. தனது இயல்பை மாற்றி வெவ்வேறு பாணியை முயன்று, அதில் மோசமாக தோற்றும் போய் தற்சமயம் தனது பழைய ஆடும் விதத்தையும் ரிதத்தினையும் கண்டெடுத்திருக்கிறார். கோலி அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதைச் சொல்லியுள்ள இன்னொரு போட்டி இது. அணியின் ஸ்கோரில் மூன்றில் ஒரு பங்கு அவருடையது என்பது மட்டுமல்ல விஷயம், இறுதிவரை நின்று ஆடியதும்தான் அவரால் ஏற்படும் தாக்கத்திற்கான சான்று.

பாகிஸ்தானின் பக்கமோ சபாஷ் போட வைத்தது அவர்களது ஸ்பின் பௌலிங்கும், அதனை அவர்கள் பயன்படுத்திய விதமும்! பவர்பிளே முதல் டெத் ஓவர்கள் வரை, அந்த 8 ஓவர்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டு அதில் வெற்றியும் கண்டனர். 181 என்பது நல்ல ஸ்கோராகத் தெரிந்தாலும், முன்வரிசை வீரர்கள் விளையாடியதையும் பாகிஸ்தான் பேட்டிங்கின் வலுவையும் கொண்டு ஒப்பிட்டால் 15 -20 ரன்கள் குறைவாகவே இருந்தது எனலாம்.

பாகிஸ்தானின் தொடக்கம் இந்தியா விரும்பிய ட்ரீம் ஸ்டார்டாக இல்லை. முன்னதாக இந்தியாவின் அணித் தேர்வுக்கு எதிராகவே நிறைய மாற்றுக் கருத்துக்கள் எழுந்தன. அவேஷ்கானுக்குப் பதிலாக ஒரு ஸ்பின்னரைக் கொண்டு வர முடிவு எடுத்திருந்த இந்தியா, அக்ஸர் மற்றும் அஷ்வினை புறந்தள்ளி ரவி பிஷ்னாயின் பக்கம் சாய்ந்திருந்தது. பாகிஸ்தானின் இடக்கை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரவும், ஜடேஜாவின் இடத்தை நிரப்பவும் ஹூடாவைத் தேர்ந்தெடுத்திருந்தது.

முகமது ரிஸ்வான், முகமது நவாஸ் | IND v PAK

இந்நிலையில், ஜடேஜா இல்லாததால் இடக்கை ஆட்டக்காரர் என்ற தகுதி ஒன்றே பண்ட்டா, தினேஷ் கார்த்திக்கா என்ற கேள்விக்குப் பதிலாகி பண்ட்டை பிளேயிங் லெவனில் கொண்டு வந்திருந்தது. புவனேஷ்வர், அர்ஷ்தீப் ஆகியோரோடு கடந்த போட்டியில் பாகிஸ்தானை ஷார்ட் பால்களால் சுருட்டிய பாண்டியாவும் வேகப்பந்து வீச்சைப் பார்த்துக் கொள்வார்கள்; சஹால், ரவி பிஷ்னாய் ஆகிய லெக் ஸ்பின்னர்கள் வலக்கை ஆட்டக்காரர்களுக்குத் திட்டம் வகுத்தால், ஹூடாவை கொண்டு இடக்கை ஆட்டக்காரர்களை சமாளிக்கலாம் என்பதுதான் இந்தியாவின் திட்டமாக இருந்தது. ஆனால், எதிர்பாராத வகையில்தான் இரண்டாம் பாதி பயணித்தது.

ஆரம்பம் சரியாகவே இருந்தது. பாபர் மற்றும் ஃபாகரின் விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இந்தியாவின் இரண்டு லெக் ஸ்பின்னர்களும் சுருட்டிவிட்டனர். ஆனாலும், அவர்களைச் சமாளிக்க முன்கூட்டியே அனுப்பப்பட்ட இடக்கை ஆட்டக்காரரான நவாஸ், ரிஸ்வானுடன் இணைந்து இந்திய பௌலிங் படையின் வியூகங்களை அடித்து நொறுக்கினார். லெக் ஸ்பின்னர்களால் இந்தியா பின்னிய வலையை நவாஸைக் கொண்டு அழகாகக் கத்தரித்துவிட்டது பாகிஸ்தான். போட்டியை மாற்றிய தருணம் அதுதான். இதில் இந்தியா சறுகிய இன்னொரு புள்ளி, ஆஃப் ஸ்பின்னர் என்ற தகுதிக்காகவாவது நவாஸுக்கு எதிராக ஒரு ஓவராவது ஹூடாவை போட வைத்திருக்கலாம். இறுதி வரை அவருக்கான ஓவர் தரப்படவேயில்லை.

வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமே அவரை ஆட வைப்பதுதான் நோக்கம் என்றால், இடக்கை ஆட்டக்காரர்களுக்கான திட்டம் என்ன என்பது மட்டுமல்ல, அவருக்குப் பதிலாக அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக்கிற்காவது அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கலாமே என்பதுதான் இறுதியில் கேள்வியாக எழுகிறது. தினேஷ் கார்த்திக்கின் ஃபார்ம் பேருதவியாக இருந்து, இந்தியாவின் ஸ்கோரில் இன்னமும் இருபது ரன்களை கூட வைத்திருக்கும்.
IND v PAK

தொடக்கத்தில் புவனேஷ்வருக்கு லைன் மற்றும் லெந்த் செட் ஆகவில்லை. பாண்டியாவின் ஓவர்களும் பந்தாடப்பட்டன. ஆஃப் கட்டர்கள், ஷார்ட் பால்கள், யார்க்கர்கள் என எப்போதும் ஏதோ ஒன்றை ஆயுதமாக இந்தியா கையிலெடுக்கும். ஆனால், இந்தப் போட்டியில் திட்டமே இல்லாதது போல் ஸ்பின் பௌலிங்கை மட்டுமே நம்பிச் சரணடைந்திருந்தது. ஆசிஃப் மற்றும் குஷ்தீல் இருவரும் யார்க்கர்களுக்குத் திணறக் கூடியவர்கள். ஆனாலும், புவனேஷ்வர் அவர்களுக்கும் அவர்களது பலங்களான ஸ்லோ பால்களையும், ஷார்ட் பால்களையும்தான் வீசினார். புவனேஷ்வர் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் காஸ்ட்லி ஓவர்கள்தான், இந்தியாவை இக்கட்டில் தள்ளின. குறிப்பாக, டெத் ஓவர்களில் பாண்டியா, புவனேஷ்வர் மற்றும் ரவி பிஷ்னாய் வீசிய வொய்டுகள் கணக்கிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலே, இந்தியாவுக்கு வெற்றி சுலபமாகி இருக்கும்.

எதிரிகளானது உதிரிகள் மட்டுமல்ல, கேட்ச் டிராப்களும்தான். 18-வது ஓவரில் ஆசிஃப் அலி தந்த கேட்ச் வாய்ப்பை அர்ஷ்தீப் தவறவிட்டது, போட்டியின் முடிவையே மாற்றிவிட்டது. கடந்த போட்டியில் ஃபீல்ட் செட் அப்பில் பாபர் நிறையவே தவறவிட்டார். ஸ்லிப் கூட இல்லாமல் தொடக்க ஓவர்களைச் சந்தித்ததற்காக விமர்சிக்கப்பட்டார். இப்போட்டியில் இந்தியாவின் பௌலிங் மாற்றங்களும், ஃபீல்ட் செட்டிங்கும் அதைத்தான் நினைவூட்டின.

அணித்தேர்வு, 200 ரன்களைத் தாண்டத் தவறியது, ஃபீல்டிங் தடுமாற்றங்கள், பௌலிங் ஸ்பெல் குளறுபடிகள் என வரிசையாக எல்லாத் தவறுகளுக்குமான தண்டனையாக இப்போட்டியையே இந்தியா இழந்துள்ளது. வெற்றியின் விலாசம் விசாரணை கமிஷன் வைக்காது‌. ஆனால், தோல்விகள்தான் சுயப் பரிசீலனைக்கும் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும். இந்தியா தற்போது செய்ய வேண்டியதும் அதைத்தான்.
IND v PAK
நாக் அவுட் போட்டி அல்ல இது என்றாலும், இறுதிப் போட்டிக்கான இந்தியாவின் பாதையில் இந்தத் தோல்வி மிகப்பெரிய இடையூராக எழுந்துள்ளது. இதிலிருந்து மீண்டு வந்து, குறைபாடுகளையும் களைந்து, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் உடனான போட்டிகளில் மிகப்பெரிய வெற்றியைக் கண்டிப்பாகப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. ரசிகர்களுக்கு இந்தத் தோல்வி தந்த வலிக்கான மருந்தாக அதுவே இருக்கும்.


source https://sports.vikatan.com/cricket/india-vs-pakistan-the-men-in-green-clinched-a-five-wicket-victory-against-india-in-the-super-four-match

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக