Doctor Vikatan: எனக்கு வயது 27. ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸ் சுழற்சி ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. சிலமுறை ப்ளீடிங் குறைவாக, 3 நாள்களோடு முடிந்துவிடுகிறது. சிலமுறை ஒரு வாரம் நீடிக்கிறது. எனக்கு ஸ்ட்ரெஸ்ஸும் அதிகம். அதுவும் இந்தப் பிரச்னைக்கு காரணமாக இருக்குமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்
ஒரு பெண் இப்போதுதான் பூப்பெய்தியிருக்கிறார்.... 13-14 வயதிருக்கும் என்ற நிலையில் அவருக்கு ரத்தப்போக்கு குறைவாக இருக்கலாம். அதுவே போகப்போக ப்ளீடிங்கின் அளவு அதிகரிக்கும். 7-8 நாள்கள்வரை நீடிக்கும் ரத்தப்போக்கை நார்மல் என்றே சொல்வோம்.
அதுவே 40 வயதைக் கடந்த பிறகு ப்ளீடிங்கின் அளவு குறையத் தொடங்கும். அதாவது 7-8 நாள்கள் வரை நீடித்த பீரியட்ஸ் சுழற்சியானது 3-4 நாள்களுக்கு மட்டுமே இருக்கும். இதுவும் நார்மலானதே.
அதாவது வயதாக, ஆக பீரியட்ஸ் சுழற்சி நீடிக்கும் நாள்கள் குறையும். சினைப்பையின் செயல்திறன் படிப்படியாகக் குறைவதே இதற்கு காரணம். மெனோபாஸை எட்டும்வரை இப்படி படிப்படியாகக் குறைந்து வந்து, ஒருகட்டத்தில் மாதவிடாய் முழுமையாக நின்றுவிடும்.
உங்களுக்கு வழக்கமாக பீரியட்ஸ் சுழற்சி எப்படியிருக்குமோ, அது உங்களுக்கு நார்மலாக இருக்கலாம். ஆனால் அது இன்னொருவருக்கு அசாதாரண சுழற்சியாகத் தோன்றலாம். 28 நாள்கள் தொடங்கி 35 நாள்கள் வரை ஒரு பெண்ணுக்கு எப்படி வேண்டுமானாலும் பீரியட்ஸ் சுழற்சி அமையலாம்.
பீரியட்ஸ் சுழற்சியைக் கணிக்க இன்று நிறைய ஆப்கள் வந்துவிட்டன. எந்தத் தேதியில் உங்களுக்கு பீரியட்ஸ் வந்தது, அடுத்த பீரியட்ஸ் எப்போது வரலாம், கருத்தரிக்கும் வாய்ப்புள்ள நாள், எத்தனை நாள்கள் பீரியட்ஸ் நீடிக்கிறது என எல்லாவற்றையும் அதில் தெரிந்துகொள்ளலாம்.
முந்தைய பீரியட்ஸில் உங்களுக்கு 3-4 நாள்கள் மட்டுமே நீடித்த ப்ளீடிங், அடுத்த பீரியட்ஸின்போது 7-8 நாள்கள் வரை நீடித்தால் அது சாதாரணமானதல்ல. அப்படி அளவுக்கதிகமாக ப்ளீடிங் ஆக உங்கள் உடலுக்குள் ஏதோ ஹார்மோன் மாற்றம் காரணமாக இருக்கலாம். அப்படியிருந்தால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
ஸ்ட்ரெஸ்ஸுக்கும் பீரியட்ஸுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உதாரணத்துக்கு ஒரு பெண், தேர்வுக்குத் தயாராகிறார். படிப்பு குறித்த ஸ்ட்ரெஸ் அவருக்கு அதிகம் இருக்கும் நிலையில் அவருக்கு வழக்கத்தைவிட பீரியட்ஸ் முன்னதாகவே வரலாம். ஸ்ட்ரெஸ் என்பது ஹார்மோன்களின் அளவுகளை பாதிக்கும். அப்படித்தான் சில பெண்களுக்கு `ப்ரீமென்ஸ்ட்ருவல் சிண்ட்ரோம்' என்ற பாதிப்பும் வருகிறது. பீரியட்ஸ் வருவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே அவர்களது உடலில், மனதில் வித்தியாசமான அறிகுறிகளை உணர்வார்கள்.
ஸ்ட்ரெஸ்ஸை கட்டுப்படுத்தப் பழகிக் கொண்டால் இந்தப் பிரச்னைகளை எளிதாகக் கடக்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
source https://www.vikatan.com/health/women/doctor-vikatan-periods-change-every-month-is-it-because-of-stress
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக