வட்லாப்பம்
தேவையானவை:
நெய் - 50 கிராம்
முட்டை - 10
சர்க்கரை - கால் கிலோ
முந்திரி - 50 கிராம்
பொட்டுக்கடலை - 25 கிராம்
உப்பு - ஒரு சிட்டிகை
தேங்காய்ப்பால் - ஒரு டம்ளர் (கெட்டியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.)
செய்முறை:
முட்டையுடன் சர்க்கரை மற்றும் ஒரு சிட்டிகை உப்பு கலந்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் சிறிதளவு தண்ணீர்விட்டு முந்திரி மற்றும் பொட்டுக்கடலையைத் தனியாக மிக்ஸியில் வெண்ணெய் பதத்துக்குக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்து வைத்திருந்த முட்டை - சர்க்கரை கலவை மற்றும் பொட்டுக்கடலை - முந்திரி கலவையை ஒன்றாகச் சேர்த்து கலந்துகொள்ளவும். அதன் மேலாக, தேங்காய்ப் பால், நெய்யை ஊற்றவும். பின்னர் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளவும்.
இட்லிச் சட்டியில் தனியாக அரை லிட்டர் அளவில் நீரை எடுத்து ஸ்டவ்வில் வைக்கவும். ஏற்கெனவே கலந்து வைத்திருந்த வட்லாப்பம் கலவையை மூடப்பட்ட தனி பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். பின்னர் இட்லி சட்டியில் உள்ளே கொதிக்கும் நீரின் மீது அந்த வட்லாப்பம் கலவை கொண்ட பாத்திரம் படும்படியாக வைத்துக்கொண்டு இட்லி சட்டியை மூடவும். அரை மணி நேரம் நன்றாக வேகவிடவும். பின்னர் வெளியே எடுத்தால் வட்லாப்பம் ரெடி!
சுருட்டைப் பணியாரம்
தேவையானவை:
மைதா - 250 கிராம்
சர்க்கரை - 75 கிராம்
தேங்காய்த் துருவல் - ஒரு கப்
ஏலக்காய் - 3
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு
செய்முறை:
பாத்திரத்தில் தண்ணீர்விட்டு மைதா மற்றும் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். பின் தேங்காய்த் துருவல், சர்க்கரை, ஏலக்காய் மூன்றையும் சேர்த்துக் கலந்து வைத்துக்கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கரைத்து வைத்த மாவை தோசை போல் வார்க்கவும். சுற்றிலும் எண்ணெய்விடவும். தேங்காய்த் துருவல் கலவையை மாவின் மீது வைத்து இரண்டு பக்கமும் மடித்துத் திருப்பிப் போட்டு வேக வைக்கவும். பின் சிவக்க வெந்ததும் எடுத்து வைத்துப் பரிமாறவும்.
இடியாப்பம் - தேங்காய் சுக்குப்பால்
தேவையானவை:
அரிசி மாவு - ஒன்றரை கப்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
தேங்காய் - அரை மூடி
சர்க்கரை / கரும்புச் சர்க்கரை / கருப்பட்டி - தேவையான அளவு
ஏலக்காய் - 2
சுக்குப் பொடி - அரை சிட்டிகை (அ) சிறு சுக்குத் துண்டு
தண்ணீர், உப்பு - தேவையான அளவு
இடியாப்பம் செய்முறை:
அரிசி மாவை எடுத்து வறுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைக்கவும். மாவுக்குத் தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, கொதிக்கவைத்த தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து ஒரு கரண்டியால் கலக்கவும். சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். அந்த மாவில் ஒரு பங்கை இடியாப்பம் பிழியும் இயந்திரத்தில் போட்டுக்கொள்ளவும். பின்னர் இட்லித் தட்டில் ஒட்டாமல் இருப்பதற்காக எண்ணெய் சேர்த்து அதன் மேல் இடியாப்பத்தைப் பிழியவும். வேண்டுமானால் சுவைக்குத் துருவிய தேங்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.
அடுப்பில் வைக்கும் இட்லிப் பாத்திரத்தில் முன்னரே தண்ணீர் சேர்க்க வேண்டும். தண்ணீர் சூடான பின் இட்லித் தட்டுகளை வைத்து இட்லி பாத்திரத்தை மூடவும். ஆறில் இருந்து ஏழு நிமிடங்கள் வேகவைக்கவும். சுடச்சுட இடியாப்பம் தயார்!
தேங்காய் சுக்குப்பால் செய்முறை:
அரை மூடி தேங்காயைச் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அதை மிக்ஸியில் சேர்த்து, ஏலக்காயும் சிறிதளவு தண்ணீரும் சேர்த்து அரைக்கவும். அரைத்த தேங்காயை சுடுநீர் சேர்த்து நன்றாக வடிகட்டவும். ஏலக்காய் சேர்க்கும்போது அரை சிட்டிகை சுக்குப் பொடி அல்லது சிறு சுக்கு துண்டை நசுக்கி சேர்த்தால் சுவையும் மணமும் கூடும். தேவையான அளவு சர்க்கரை அல்லது கரும்புச் சர்க்கரை சேர்த்து சூடான இடியாப்பத்துடன் எடுத்துக் கொள்ளலாம். கருப்பட்டி சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்துக்கு நல்லது.
அரச இலை கடையல்
தேவையானவை:
அரச இலை கொழுந்து - 6 கைப்பிடி அளவு
துவரம்பருப்பு - ஒரு கப்
கடுகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
சாம்பார் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - 15
காய்ந்த மிளகாய் - 5
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 10 பல்
தக்காளி - 4
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரச இலை கொழுந்துகளை நன்கு கழுவி சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
முதலில், தேவையான அளவு நல்லெண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதற்குப் பின், நறுக்கிய வெங்காயத்தையும் பூண்டையும் சேர்த்து வதக்கவும். அவை வெந்தவுடன் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும். தக்காளியும் வெங்காயமும் வெந்தவுடன் அதில் மஞ்சள்தூள், சாம்பார் பொடி சேர்க்கவும். ஊறவைத்த பருப்பு, தண்ணீர் சேர்க்கவும். பருப்பு வேக தேவையான தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு உப்பை சேர்த்துக்கொள்ளவும். பருப்பு பாதி வெந்தவுடன் அதனுடன் அரச இலை கொழுந்துகளைச் சேர்க்கவும். கலவை கொதித்துக்கொண்டிருக்கும்போது பெருங்காயத்தூள் சேர்க்கவும். பின்னர், சீரகத்தை நசுக்கி மேலோட்டமாகப் போடவும். பருப்பும் இலையும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து நன்கு வெந்தவுடன், சூட்டிலேயே அவற்றைக் கடைந்து விட வேண்டும். சுவையான மணமணக்கும் அரச இலைக்கொழுந்து கடையல் தயார்.
நாஞ்சில் நாட்டு இலைக்கறி கஞ்சி
தேவையானவை:
அரிசி - ஒன்றரை கப்
பாசிப்பருப்பு - கால் கப்
முருங்கைக்கீரை இலைகள் - இரண்டரை கைப்பிடி அளவு
சின்ன வெங்காயம் - 6
பூண்டு - 4 பல்
காய்ந்த மிளகாய் - 3
வெந்தயம் - அரை டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 2-3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 6-7 கப்
செய்முறை:
அரிசியுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், வெந்தயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
15 நிமிடங்கள் கழித்து நரம்புகள் நீக்கி கிள்ளி வைத்திருக்கும் முருங்கைக்கீரை இலைகளை அதில் சேர்க்கவும். முருங்கைக்கீரை நன்றாக வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவிட்டு துருவிய தேங்காயைத் தூவவும். மணமணக்கும் இலைக்கறி கஞ்சி தயார்! தேவைக்கேற்றவாறு கஞ்சி ஊற்றி தேவையான உப்பு சேர்த்துப் பரிமாறவும்.
source https://www.vikatan.com/food/food/vadlapam-surutai-paniyaram-weekend-recipes
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக