Ad

திங்கள், 5 செப்டம்பர், 2022

`காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் இருந்தாலும் இல்லையென்றாலும்...’ - எதிர்கால சவாலும் பதிலும்

75 வருட சுதந்திர இந்தியாவில் முக்கால்வாசி வருடங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலை சற்று மோசதான். தற்காலிகத் தலைவராக சோனியா காந்தி இருக்கும் நிலையில், புதிய தலைவரைத் தேர்வுசெய்ய அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதிலாவது ஸ்திரமிக்கத் தலைவர் உருவாரா? என்கிற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

பாஜக - காங்கிரஸ்

நம்மிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தொண்டர் ஒருவர், ``பா.ஜ.க எப்படி மெல்ல மெல்ல வளர்ந்ததோ, அதேகாலகட்டத்தில் காங்கிரஸ் மெல்ல மெல்லத் தேய்ந்துவிட்டது. தற்சமயம் 10 எம்.பி-க்கள், 18 எம்.எல்.ஏ-க்களைக் கொடுத்து தமிழ்நாடுதான் காங்கிரஸ் கட்சியை ஓரளவுக்குத் தாங்கிக்கொண்டிருக்கிறது. ராகுல்காந்தி பாத யாத்திரையை குமரியிலிருந்து தொடங்குவதற்கும் இதுதான் காரணம்.

தேசிய அளவிலான காங்கிரஸின் சரிவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைக்கூட உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இங்கு ஒவ்வொரு தலைவர்களுக்கு தனித்தனி கோஷ்டிகள் உள்ளன, ஆதரவாளர்கள் உள்ளனர். ஒரு மாநிலத்திலேயே இப்படியென்றால், தேசிய அளவில் மட்டும் ஒற்றுமை இருக்குமா என்ன? தலைமைக்கே சவால்விடும் வகையில் 23 தலைவர்கள் இணைந்து ஒரு குழுவை அமைத்து விவாதிக்கின்றனர். அவர்களுக்குள்ளும் ஒற்றுமையில்லாமல் கபில் சிபல், குலாம் நபி ஆசாத் போன்றோர் கட்சியைவிட்டே வெளியேறிவிட்டனர்.

குலாம் நபி ஆசாத்

தலைவராக இருப்பவர்களை மூத்த தலைவர்கள் மதிப்பதில்லை என்பதால்தான் தலைவர் பதவியை ஏற்பதற்கே சோனியாவும், ராகுலும் அஞ்சுகின்றனர். பெயருக்குத் தலைவர் என்று இல்லாமல், தடாலடியாக சில வேலைகளைப் பார்த்தால்தான் மூத்த நிர்வாகிகளை சமாளித்து, அடக்கிவைக்க முடியும்” என்றார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் இதாயதுல்லாவிடம் பேசியபோது, ``காங்கிரஸ் கட்சியில் தலைவர் இருந்தாலும் இல்லையென்றாலும் தானாக இயங்கும் இயக்கம் இது. விடுதலை போராட்டத்தின்போது, 1942-ல் இருந்து 1947 வரையிலும் அபுல்கலாம் ஆசாத் தான் தலைவராக இருந்தார். அபுல்கலாம் தலைவராக இருந்தபோதும் வெகுகாலம் சிறைச்சாலையில்தான் கழித்தார். அச்சமயம் காந்தியும் தலைமை தாங்கவில்லை. அப்படியிருந்தும் சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் வெற்றியடைந்தது. ஆங்கிலேயர்கள் காங்கிரஸ் தலைவர் அபுல்கலாம் ஆசாத், முஸ்லிம் லீக் தலைவர் ஜின்னா, சமஸ்தானங்களின் கூட்டமைப்புத் தலைவரான ஜுனாகெட் நவாப் ஆகியோரிடம்தான் விடுதலைக் குறிப்பையே கொடுத்தனர்.

இதாயதுல்லா

இந்திரா காந்தி பலமிக்கத் தலைவராக இருந்தபோதும்கூட காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்திருக்கிறது. ராஜீவ் காந்தி காலத்திலும் தோல்வி அடைந்திருக்கிறது. அதேவேளை, 2004 காலகட்டத்தில் வெகுஜன அறிமுகமில்லாத நிலையில் சோனியாகாந்தி தலைவராக பொறுப்பேற்றபோதுதான், பல மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியைப் பறிகொடுத்தது, மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதும் நடந்தது. இதனடிப்படையில் பார்த்தால் கட்சியில் தலைமை என்பது ஒரு பிரச்னையே அல்ல, இதை பூதாகரமாக்குவது பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ்-ஸும் தான்.

இந்திரா காந்தி

உட்கட்சி தேர்தல் நடைபெற்றுவருகிறது. அகில இந்தியத் தலைவர் தேர்தல் வரும் அக்டோபரில் நடக்கிறது. ராகுல் காந்தி தலைமையைப் பொறுப்பை ஏற்கலாம். கட்சியை மீண்டும் மக்கள் ஏற்கும் வகையில், பாதயாத்திரை நடத்துகிறார் ராகுல். நாசகார சூழலில் இருக்கிற இந்தியாவை மக்கள் துணையுடன் மீட்க வேண்டும் என்பதற்காகவே அப்பயணத்தை மேற்கொள்கிறார் ராகுல்.

ராகுல் காந்தி

காங்கிரஸ் மட்டுமின்றி, எல்லாத் தரப்பையும் ஈர்க்கும் பயணம் அது. தலைமைப் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும். நன்மையும் தீமையும் காங்கிரஸைச் சார்ந்தது என்பதால் மற்றவர்கள் கவலைப்படத் தேவையில்லை. காங்கிரஸ் இல்லாத பாரதம் என்று சொல்லிவரும் பா.ஜ.க., ராகுல் காந்தியை வாரிசு அரசியல் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு, மறுபுறம் ஏன் தலைவராக மறுக்கிறார்? என்றும் கேட்கிறது. இது ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க-வின் திசைதிருப்பும் முயற்சி!” என்று முடித்தார்.



source https://www.vikatan.com/news/politics/leadership-for-congress-party-future-challenges-and-response

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக