தேசிய ஒற்றுமை நடைபயணத்தை ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரியில் தொடங்குகிறார். இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடன் பேசிய அண்ணாமலை, ``காங்கிரஸினுடைய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேசிய ஒற்றுமை பயணத்தை மேற்கொள்ள உள்ளார். 1947-ல் இருந்து இந்தியா எப்படிப்பட்ட பாதையை கடந்து வந்திருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். நேரு, இந்திரா காந்தி, ராகுலின் தந்தை ராஜீவ் காந்தி ஆகியோர் பிரதமராக இருந்திருக்கிறார்கள். சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளில் பெரும்பாலும் அவர்களின் குடும்பத்தினர்தான் பாரதத்தின் பிரதமராக இருந்திருக்கிறார்கள். அப்போது இந்தியா என்னவெல்லாம் இழந்திருக்கிறது என பார்க்கலாம்.
ஒற்றுமை என்பது முதலில் நிலப்பரப்பு. ஜம்மு காஷ்மீர் பகுதியை இந்தியாவில் பெயருக்கு மட்டும்தான் வைத்திருந்தார்கள். ஒரே நாட்டுக்குள் இரண்டு நாடாக ஜம்மு காஷ்மீரை காங்கிரஸ் பாவித்து வந்தது. ஏழு சகோதரிகள் மாநிலங்களான வடகிழக்கு மாநிலங்கள் ஒதுங்கிதான் இருந்தது. எட்டு ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் 370, ஆர்டிக்கிள் 35 ஏ ஆகியவை நீக்கப்பட்டு ஒரே நாடு ஒரே மக்கள் என சொல்லும் அளவுக்கு இந்தியா வளர்ந்திருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மனிதன் இந்தியன் என பெருமையாக சொல்லும் அளவுக்கு இந்தியா இணைந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி கடைசி பத்து ஆண்டுகள் ஆண்டபோது இந்தியாவுக்குள் நடந்த பாம் அட்டாக், நக்சல் தாக்குதல், இந்து முஸ்லிம் பிரச்னை இப்போது இல்லாமல் இருக்கிறது. அதுதான் மோடியின் சாதனை பயணம். நடைபயணம் செல்லும் ராகுல் அனைத்து இடத்திலும் இதை பார்ப்பார். அவர்களின் கூட்டணி கட்சியினரால் லால் சவுக்கில் தேசிய கொடியை ஏற்ற முடியாமல் இருந்தது. 75 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் லால் சவுக்கில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. ராகுல் நடை பயணத்தின்போது இந்தியாவின் ஒற்றுமை, உள்கட்டமமைப்பை பார்க்க வேண்டும். அவர்கள் ஆண்டபோது ஓட்டு அரசியலுக்காக மக்களை பிரித்திருந்தார்கள். இப்போது நாடு ஒற்றுமையாக இருக்கிறது.
ராகுல் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இந்திய பிரதமர்கள் பிரித்த இந்தியாவை, பிரதமர் மோடி இணைத்திருக்கிறார். இதையெல்லம் பார்த்து நடைபயணம் முடியும்போது ராகுல் காந்தியின் மனம் மாறும். அரசியல் தலைவராக பயணம் ஆரம்பிக்கிற ராகுல் காந்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மோடியின் உள்கட்டமைப்பை பார்த்து அவரது மனம் முழுவதும் மாறும் என்பது எங்கள் தீர்க்கமான நிலைப்பாடு.
ராகுல் நடை பயணத்தால் ஆட்சி மாற்றம் எதுவும் நடக்கப்போவதில்லை. தமிழ்நாட்டில் தி.மு.க தயவில்தான் அவர்கள் இருக்கிறார்கள். கன்னியாகுமரியில் கூட்டத்தை கூட்ட தி.மு.க கொடுக்கும் பஸ்சும், 'எங்கள் முதல்வர் வருகிறார் நீங்கள் வாங்க' என தி.மு.க தொண்டர்கள் ஒட்டும் போஸ்டரும்தான் இன்று காங்கிரஸுக்கு தேவைப்படுகிறது. நடைபயணம் ஆரம்பிக்கிற இடத்திலேயே சக்தி இல்லை, வலு இல்லை. 'நாம தி.மு.க-வில் கூட்டணி வச்சிருக்கிறதுனால நம்மளால சில கருத்துக்களை சொந்தமா பேச முடியல. ஒரு அடிமைத்தனம் இருக்கு' என கார்த்திக் சிதம்பரம் சொல்கிறார். அதுபோல தி.மு.க அரசுக்கு கனிமவள கொள்ளையை தடுக்கும் அளவுக்கு தெம்பு கிடையாது. அதுக்கு தைரியம் வேண்டும். கேரளாவில் கனிமவள கொள்ளையை தடுக்க தனி துறையே வைத்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் ஆங்காங்கே பார் முளைத்திருக்கிறது. தமிழக மக்களை குடிகார மக்களாக மற்றுவதைத்தான் தி.மு.க லட்சியமாக வைத்துள்ளது" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/annamalai-wishes-rahul-gandhi-ahead-of-jodo-yatra
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக