Ad

செவ்வாய், 6 செப்டம்பர், 2022

Doctor Vikatan: தேவையற்ற ரோம வளர்ச்சியை நிரந்தரமாக நீக்குமா லேசர் சிகிச்சை?

Doctor Vikatan: உடலின் தேவையற்ற ரோமங்களை நீக்கச் செய்யப்படுகிற லேசர் சிகிச்சை பாதுகாப்பானதா? அதை யார், எத்தனை நாள்களுக்கொரு முறை செய்துகொள்ள வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

தேவையற்ற ரோமங்களின் வளர்ச்சியைக் குறைக்கச் செய்யப்படுகிற சிகிச்சை இது. நிரந்தரமாக நீக்குவதற்கான சிகிச்சை அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பெஸ்ட் லேசர் சிகிச்சைகள்கூட மெல்லிய ரோமங்களை நிரந்தரமாகவெல்லாம் நீக்காது. அந்த ரோமங்கள் 6-8 முறை லேசர் சிகிச்சை செய்துகொண்ட பிறகும்கூட இருக்கும்.

ரோமங்களை நீக்கும் இந்தச் சிகிச்சைக்காக பலவிதமான லேசர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் மிகவும் பரவலானது என் டியாக் லேசர் (Nd:YAG laser). இது ஒரு ரோமத்தை மட்டும் குறிவைத்துக் குறைக்காமல், கூந்தல் நுண்ணறைகளைக் குழுவாகக் குறிவைத்துக் குறைக்கும். இதிலுள்ள லைட்டானது ரோமத்தின் வேரைக் குறிவைத்து, அதாவது ஒரு கொத்து ரோமத்தின் வேரைக் குறிவைத்து, அவற்றின் வளர்ச்சியைக் குறைக்கச் செய்யும்.

அதனால் இதைச் செய்யும்போது சற்று வலி இருக்கும். கூலிங் போன்றவற்றின் மூலம் வலியைக் குறைக்கச் செய்தாலும் அதையும் தாண்டி சற்று வலிநிறைந்த சிகிச்சையாகவே இது இருக்கும்.

இன்னொன்று, டயோடு லேசர் (Diode laser) சிகிச்சை முறை. கையில் பிடித்து சருமத்தில் வைத்துச் செய்யப்படும் இந்தக் கருவியில், ஒருவித ஆற்றலானது முடியின் வேர்க்கால்களில் செலுத்தப்பட்டுச் செய்யப்படும். என் டியாக் லேசரைவிட இதில் வலி குறைவாகவே இருக்கும். ஓரளவு அடர்த்தியான ரோமங்களின் வளர்ச்சியைக் குறைக்க இந்த லேசர் உகந்தது.

ரோம வளர்ச்சி என்பது ஒரு சுழற்சியில் அமைவது. அதாவது 28 முதல் 45 நாள்கள் சுழற்சியைக் கொண்டது. வளரும் நிலையில் உள்ள ரோமங்களின் மீதுதான் லேசர் செய்ய முடியும். எனவே வாக்சிங்கோ, திரெடிங்கோ செய்திருந்தால், ரோமங்களின் வேர்கள் இழுத்து அகற்றப்பட்டிருக்கும். அந்த நிலையில் லேசர் சிகிச்சை பலனளிக்காது.

Skin

அதேபோல ரோமங்களை ப்ளீச் செய்திருந்தாலும் லேசர் சிகிச்சை வேலை செய்யாது. ஏனென்றால் லேசரானது கூந்தலின் கறுப்பு நிறமியைக் குறிவைத்துதான் இயங்கும். எனவே லேசரானது வெள்ளை அல்லது பழுப்பு நிற ரோமங்களை நீக்க உதவாது. 16-17 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஹார்மோன்கள் செட்டிலானதும் லேசர் சிகிச்சை செய்து கொள்ளலாம். அதிலிருந்து 80 வயதுவரை கூட இந்தச் சிகிச்சையைச் செய்து கொள்ளலாம்.

முதலில் ரோம வளர்ச்சி உள்ள இடங்கள் வெள்ளை பென்சிலால் குறிக்கப்படும். அதன் பிறகு சென்சிட்டிவ் கிளென்சர் அப்ளை செய்யப்படும். அடுத்து அந்தப் பகுதி ரேஸரால் ஷேவ் செய்யப்படும். சருமம் வறண்டு போகாதபடி பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். அப்படி வறண்டு போனால் மாயிஸ்ச்சரைசர் தடவ வேண்டியிருக்கும். பிறகு லேசர் சிகிச்சை ஆரம்பமாகும். முடி வளர்ச்சி இல்லாத இடங்களில் அதன் எனர்ஜி செல்லாமல் பார்த்துக்கொள்வோம். எனவே அதை ஈரமான காஸ் துணியால் மூடுவோம்.

முதலில் குளிர்ச்சியான லேசர் முனைகள் சருமத்தில் செலுத்தப்படும். பிறகு லேசர் எனர்ஜி செலுத்தப்படும். முதல் முறை சிகிச்சையிலேயே ரோமத்தின் அடர்த்தி குறைந்திருப்பதைப் பார்க்க முடியும். மறுபடி அந்த ரோமம் வளர 30 முதல் 40 நாள்கள் ஆகும். ரோம வளர்ச்சியின் சுழற்சியைப் பொறுத்து மாதம் ஒருமுறையோ, 45 நாள்களுக்கொரு முறையோ இந்தச் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருக்கும். நான்கைந்து முறை செய்தபிறகு ரோம வளர்ச்சி தாமதமாகும்.

கர்ப்ப காலத்தில் இந்தச் சிகிச்சையைச் செய்யக்கூடாது. சில வகை சரும பாதிப்புகள் உள்ளவர்களுக்கும் இந்தச் சிகிச்சையைச் செய்ய முடியாது.

skin

ரோம வளர்ச்சியை எளிதாகக் குறைக்க லேசர் சிகிச்சை மிகச் சிறந்தது. 6 முதல் 8 முறை செய்தாலே நல்ல பலன் தெரியும். பிறகு ரோம வளர்ச்சியைப் பொறுத்து வருடம் ஒருமுறை செய்துகொண்டாலே போதுமானதாக இருக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/women/doctor-vikatan-can-laser-treatment-permanently-remove-unwanted-hair-growth

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக