Ad

சனி, 10 செப்டம்பர், 2022

இனவெறி: ``இந்தியாவுக்கு திரும்பி சென்றுவிடு..." - மிரட்டப்பட்ட அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க காங்கிரஸ் பெண் உறுப்பினர் பிரமிளா ஜெயபால் (53), இந்தியாவுக்கு திரும்ப செல்ல வேண்டும் என தொலைபேசியில் மிரட்டப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் அமெரிக்க காங்கிரஸ்பெண் உறுப்பினர் பிரமிளா ஜெயபால். இவர் சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர். சமீபத்தில் அமெரிக்காவின் சியாட்டிலில் உள்ள இவரின் வீட்டுக்கு வெளியே ஒரு நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார். அதன் பிறகே அவர் பிரட் ஃபோர்செல் (49) என்பவர் என காவல்துறையால் அடையாளம் காணப்பட்டார். இந்த நிலையில், அவரை இந்தியாவுக்குத் திரும்பச் செல்லுமாறு கூறிய ஒரு ஆண் தொலைபேசியில் தவறான மற்றும் வெறுப்பு செய்திகளைப் அனுப்பியிருக்கிறார்.

இதுபோன்ற ஐந்து ஆடியோ செய்திகளின் தொகுப்பையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக பிரமிளா ஜெயபால், “பொதுவாக, அரசியல் பிரமுகர்கள் இது போன்ற தங்கள் பாதிப்பைக் காட்ட மாட்டார்கள். வன்முறையை எங்களின் புதிய நெறிமுறையாக ஏற்க முடியாது என்பதால் நான் இங்கு அதை வெளிப்படுத்த முடிவெடுத்தேன். இது போன்ற வன்முறைக்கு அடித்தளமாக இருக்கும், இனவெறி மற்றும் பாலின வெறியை தூண்டும் இதுபோன்ற செய்திகளை ஏற்க முடியாது”என்றும் பதிவிட்டிருக்கிறார்.

அந்த ஆடியோக்களில், ஆபாசமான மற்றும் தவறான உள்ளடக்கம் காரணமாக சில பகுதிகள் திருத்தப்பட்டுள்ளன. மிரட்டும் தொணியில் பேசும் அந்த நபர் பிரமிளா ஜெயபாலுக்கு பெரும் விளைவுகளை ஏற்படுத்துவதாக அச்சுறுத்துகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றுவிடும்படி மிரட்டுகிறார்.

போலந்தில் அவமானப்படுத்தப்பட்ட இந்தியர்

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி , போலந்து நாட்டில் ஒரு இந்திய-அமெரிக்கர் இனரீதியாக துன்புறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டர்.

அதற்கு முன் ஆகஸ்ட் 26-ம் தேதி, நான்கு இந்திய-அமெரிக்க பெண்களை டெக்சாஸில் ஒரு மெக்சிகன்-அமெரிக்க பெண் "இந்தியாவுக்கு திரும்பிச் செல்லுங்கள். அமெரிக்காவை அழிக்காதீர்கள்" எனப் பேசினார். இது போன்ற சம்பவங்கள் தற்போது தொடர்கதையாகிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/international/go-back-to-india-indian-origin-us-lawmaker-gets-threat-messages

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக