Ad

சனி, 10 செப்டம்பர், 2022

``எனக்கு மட்டும் சினிமா சான்ஸ் கிடைச்சிருந்தா..?’’ - சாலமன் பாப்பையாவை சிரிக்க வைத்த துரைமுருகன்

வேலூர், காட்பாடி சன்பீம் பள்ளியில், பத்மஸ்ரீ விருதுபெற்ற தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் ‘அகநானூறு’ உரை நூலின் அறிமுக விழா நேற்று மாலை நடைபெற்றது. தமிழறிஞர்களால், ‘தமிழ் வேந்தர்’ என்று அழைக்கப்படும், தமிழகத்தின் மூத்த அமைச்சர் துரைமுருகன் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மதிப்புரை வழங்கினார்.

துரைமுருகன் பேசுகையில், ‘‘இந்த விழாவில் வி.ஐ.டி வேந்தர் ஜி.விசுவநாதன் கலந்துகொண்டிருக்க வேண்டும். அவர் போபால் சென்றிருக்கிறார். நானும் இந்த நேரம் டென்மார்க்கில் இருந்திருக்க வேண்டியது. காரணம், ‘டென்மார்க்கில் நடக்கும் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக தமிழக அரசிலிருந்து யாராவது வர வேண்டும்’ என அந்நாட்டு அரசாங்கம் கேட்டுக்கொண்டது. நம் முதலமைச்சரும், என் பெயரை முன்மொழிந்து போகச்சொன்னார். எனக்குத் துணையாக 2 செயலாளர்களும் தயாராக இருந்தார்கள். ஆனால், இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம். டென்மார்க்குக்கு எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். நான் ஏற்கெனவே 2 முறை அந்த ஊருக்குச் சென்றிருக்கிறேன்.

அகநானூறு உரை நூலின் அறிமுக விழா

ஒருவேளை, நான் இந்த விழாவுக்கு வராமல் போயிருந்தால், தமிழ் மொழியை மட்டுமின்றி ஒருமாபெரும் தமிழறிஞரைப் புறக்கணித்ததாகிவிடும் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாகியிருப்பேன். அதனால்தான் கடைசி நேரத்தில் டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு காட்பாடிக்கு வந்துசேர்ந்தேன். சாலமன் பாப்பையா அவர்கள் ஒரு பேராசிரியர். பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். அகில உலகம் முழுவதும் அறியப்பட்ட பட்டிமன்றத் தலைவர். தமிழ் அறிந்தவர்; தமிழின் ஆழம் அறிந்தவர்; தமிழின் நிறம் அறிந்தவர்; தமிழின் நோக்கம் அறிந்தவர்; வகை அறிந்தவர்; தமிழ் குறித்து எல்லாமே அறிந்த ஒரு பெரும் தமிழறிஞர் அவர். அப்படிப்பட்ட தமிழறிஞர் என்னைப் பார்த்து, இந்த நூல் வெளியீட்டு விழாவில் பேச வேண்டும் என்று சொன்னபோது, தூக்கி வாரிப்போட்டது. காரணம் நான் தமிழ் படித்தவன் அல்ல. நான் பி.ஏ எக்னாமிக்ஸ். எம்.ஏ பாலிடிக்ஸ். லா காலேஜில் லா படித்தவன். எனவே எனக்குத் தமிழ் தெரியாது.

(மாணவர்களைப் பார்த்து) உங்களைப்போல ஒரு தமிழ் பாடத்துக்கு கோனார் நோட்ஸ் வைத்து படித்தவன் நான். அடடா, ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், இரண்டு சினிமாகாரர்கள் மத்தியில் இங்கு மாட்டிக்கொண்டேன். சாலமன் பாப்பையா ஒரு சினிமா நடிகர். அதேபோல, பட்டிமன்றம் ராஜாவும் ஒரு சினிமா நடிகர். இவர்களுக்கு மத்தியில் நான் வந்திருக்கிறேன். எனக்கொரு சினிமா சான்ஸ் கிடைக்கவில்லை. கிடைச்சிருந்தால்...’’

(இப்படி சொல்லிவிட்டு துரைமுருகன் மழலை முகம் கொண்டு சிரித்தபோது, மேடையில் அமர்ந்திருந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையாவும் மனம் விட்டு சிரித்தார்.)

மீண்டும் பேச்சைத் தொடர்ந்தவர், ‘‘ `அகநானூறு விழானு ஆங்காங்கே போஸ்டர் ஒட்டியிருக்கிறாங்களே... என்ன விழாவாக இருக்கும். மந்திரியும் போகிறாரே’னு நம்ம ஆட்கள் பலப்பேர் யோசிப்பாங்க. நல்ல காலம் ‘500 நூறு’னு படிக்காம விட்டுட்டாங்களே. ‘அப்படினா ரேஷன்ல 500 ரூபாய் கொடுப்பாங்களோ’ நெனச்சிருப்பாங்க. பேராசிரியர் சாலமன் பாப்பையா ஏற்கெனவே எழுதிய புறநானூறு, திருக்குறளுக்கான உரைகளைப் படித்திருக்கிறேன்.

துரைமுருகன்

இந்த அகநானூறு உரையின் முதல் பாகத்தையும் படித்துவிட்டேன். உலகில் வேறுஎந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு, நம் சங்க இலக்கியங்களுக்கு உண்டு. பழங்காலப் புலவர்கள் தங்கள் கவிதையை, அந்த காலத்துடைய நடைக்கு ஏற்ப எழுதிவிட்டுப் போய்விட்டார்கள். அடுத்து வந்தவர்களுக்கு உரை எழுதத் தெரியவில்லை. ஒருவன் படிக்கப் பலர் கேட்பார்கள். அதைத்தான் ‘கற்றலிலும் கேட்டல் நன்று’ என்று சொன்னார்கள். இதை மற்றவர்கள் கேட்டார்கள். ஆகையால், சங்க இலக்கியங்கள் எளிமைப் படுத்தப்பட வேண்டும். ஏற்கெனவே இருக்கும் உரையை நம்மால் படிக்க முடியாது. அதை கொஞ்சம் மென்மையாக்கியிருக்கிறார் நம் பேராசிரியர் சாலமன் பாப்பையா. நான் மாதத்துக்கு ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்குகிறேன். என்னுடைய நூலகத்தில் மட்டும் 50,000 புத்தகங்கள் இருக்கின்றன. அதுதான் மன மகிழ்ச்சி. படிக்கின்றாயோ இல்லையோ! பார்த்தாலே படிக்க வேண்டும் என்று தூண்டும். எனவே, படியுங்கள். படிப்பு ஒன்று மட்டுமே உங்களை முன்னேற்றும்’’ என்றார்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா ஏற்புரை வழங்கி பேசுகையில், ‘‘எனக்கும் வேலூர் மாநகரத்துக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது. நான் எம்.ஏ முடித்த உடன் முதலில் பணியாற்ற வந்த இடம், இந்த ஊரிலுள்ள ஊரீசு கல்லூரிதான். அங்கு 6 திங்கள்கள் சாதாரண ஆசிரியராகப் பணியாற்றினேன். அதன் பிறகு இந்த ஊரில் 2 நூல்களை வெளியிடுவதற்கான வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. என்னுடைய ஆசை எல்லாம் ஒன்றுதான். பெரியவர் கலைஞர் உயிரோடு இருந்திருக்க வேண்டும். அவர் இருந்து புறநானூற்றையோ, அகநானூற்றையோ வெளியிட்டிருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. ஆனால், இயற்கை அதற்கு இடம் கொடுக்கவில்லை. என்னுடைய திருக்குறளுக்கு அவர் முன்னுறை எழுதினார். அது கோடி பெருமை. துரைமுருகன் என்னைப் பாராட்டி பேசியது, கலைஞரே பாராட்டியதைப்போல உணர்கிறேன்.

சாலமன் பாப்பையா - துரைமுருகன்

தமிழ் இனிய மொழி. உங்கள் மொழி. நம் மொழி. அதை நேசிக்க வேண்டும். அதைப் படிக்க வேண்டும். நம் வீடுகளில் தமிழிலே பேச வேண்டும். இங்கிருந்து அயல்நாட்டுக்குச் சென்ற தமிழ் மக்கள் இப்போது உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வீடுகளில் தமிழ் இப்போது முழங்கிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் வாழ்கிற பிள்ளைகள் தமிழில் பேசுகிறார்கள். ஒருகாலம் வரும். அவர்களிடத்தில் தமிழ் கற்க வேண்டும் என்ற நிலைமை வரப்போகிறது. உங்களிடம் பணிவாக கேட்டுக்கொள்கிறேன். நம்முடைய மொழியைப் படியுங்கள். தெரிந்துகொள்ளுங்கள். நாம் எப்படி வாழ வேண்டும் என்ற அடையாளம் அங்கு இருக்கின்றன. அதை முழுக்க புரிந்துகொள்வதற்கு இதுதான் காலம். ஒரு சின்ன விளக்கம் சொல்ல விரும்புகிறேன். ‘இந்த சன்பீம் பள்ளி எனக்குச் சொந்தமானது’ என்று நண்பர் ஒருவர் பேட்டியில் தெரியாமல் குறிப்பிட்டிருக்கிறார். அதற்குக் கீழ் பதிலிட்டிருக்கும் சகோதரி ஒருவர், ‘இது வேண்டாத வேலை. ஆதாரம் இருக்கிறதா?’ என்று கேட்டதற்கு, வேண்டுமென்றே அவ்வாறு அந்த நபர் சொல்லியிருக்கிறார். இதன் பின்னணியிலும் ஏதோ அரசியல் சூழ்ச்சி இருப்பதாகக் கருதுகிறேன்’’ என்றார்.

இந்த விழாவில், பட்டிமன்றம் ராஜா, வி.ஐ.டி பல்கலைக்கழக துணைத்தலைவர் ஜி.வி.செல்வம், சன்பீம் பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



source https://www.vikatan.com/government-and-politics/literature/minister-duraimurugan-speech-at-the-introductory-ceremony-of-akananuru-literature-text-book

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக