Ad

திங்கள், 10 மே, 2021

புத்தம் புது காலை : தந்தை பெரியார் சொன்னதும், மார்ட்டின் கூப்பர் செய்ததும்! #WorldTechnologyDay

"இனி எதிர்காலத்தில், ஒவ்வொருவரின் சட்டைப்பையிலும் ஒரு தந்திக்கருவி இருக்கும்" என்று தந்தை பெரியார் சொன்னது 1930-ம் ஆண்டில். கிட்டத்தட்ட நூறு வருடங்கள் கழித்து இன்று ஒவ்வொருவரின் கையிலும், ஒவ்வொருவரின் சட்டைப்பையிலும் என நம்முடன் எப்போதும் பயணித்துக் கொண்டிருக்கிறது, ஒரு கட்டைவிரல் தொழில்நுட்பம்!

ஆம்...

1973-ல் அறிமுகமாகி ஐம்பதே வருடத்தில், உலகத்தையே சுருக்கி உள்ளங்கைக்கு கொண்டு வந்ததுடன், ஒரு விரல் சொடுக்கில் உள்ளதை எல்லாம் அள்ளித்தரும் சாதனமாக மாறியிருக்கிறது மொபைல் எனும் செல்போன். இது இப்போது அடைந்துள்ள முன்னேற்றம் மிகப்பெரியது என்றாலும், இதன் தொடக்கம் மற்ற தொழில்நுட்பங்களைப் போலவே, பல்வேறு போராட்டங்களுடன் தான் ஆரம்பித்துள்ளது.

இன்று உலகெங்கும் பயன்படுத்தப்படும் இந்த செல்போனைக் கண்டுபிடித்தவர் டாக்டர் மார்ட்டின் கூப்பர். இவர் அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்தவர் என்றாலும், இவரது பெற்றோர்கள் உக்ரைனிய யூதக் குடியேறிகள்.

பள்ளிப்படிப்பின் போதும், கல்லூரி படிப்பின்போதும், எலக்ட்ரானிக்ஸை விரும்பித் தேர்ந்தெடுத்த மார்ட்டின் கூப்பர், பணியில் சேர விரும்பியது அந்நாளின் சிறந்த மின்னியல் நிறுவனமான பெல் ஆய்வகத்தில். ஆனால் அந்த நிறுவனம் இவரைப் புறக்கணித்துவிட, சில காலம் அமெரிக்க கப்பற்படையில் பணியாற்றினார் கூப்பர். கொரியன் போரின்போதுதான் வயர்லெஸ் தொலைத்தொடர்பின் அவசியத்தை கூப்பர் உணர்ந்து அதில் தனது கவனத்தைச் செலுத்தி, ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்.

மார்ட்டின் கூப்பர்

பிறகு, கடற்படையை விட்டு மோட்டரோலா கம்பெனியில் மெக்கானிக் உதவியாளராக பணியில் சேர்ந்த மார்ட்டின் கூப்பர், 1969 வரை செல்வந்தர்களால் கார்களில் மட்டுமே பொறுத்தி உபயோகிக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பத்தை, எல்லோரும் எளிதாக கைகளில் ஏந்திச் செல்லும்படி செய்யமுடியும் என உறுதியாக நம்பினார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் அதற்காக தொடர்ந்து உழைத்து, தனது விடாமுயற்சியால் தந்தி இணைப்பற்ற ஒரு தொலைபேசியை உருவாக்கி, தனக்கும், தனது நிறுவனத்திற்கும் பெரும்புகழை தேடித்தந்தார் கூப்பர்.

ஆம்... 1973-ல் நியூயார்க் நகரில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் எல்லோர் முன்பும் தனது போட்டிக் கம்பெனியான பெல் நிறுவனத்தில் பணிபுரிந்த ஜோயல் எங்கெல் என்பவருக்கு போன் செய்து பேசினார் மார்ட்டின் கூப்பர். "ஜோயல்... நமது கனவு பலித்துவிட்டது. நான் உன்னுடன் பேசிக் கொண்டிருப்பது உண்மையாகவே செல்போனில்தான்..." என்று பேசியதுதான் உலகின் முதல் அதிகாரப்பூர்வ மொபைல் அழைப்பு என்று கருதப்படுகிறது.

முதல் அழைப்பு பேசிவிட்டார் என்றாலும் அந்த மொபைல் நாம் இப்போது உபயோகிப்பது போல் அவ்வளவு சுலபமாக இல்லை. கூப்பர் முதன்முதலாக பயன்படுத்திய டைனா ஏ.டி.சி போன் கிட்டத்தட்ட ஒரு செங்கல்லைப் போலவே இருந்தது. அதன் எடை ஒரு கிலோ, அதன் நீள அகலம் 9x5x1.75 இன்ச் அளவு என பெரியதாக இருந்தது. மேலும் இதன் சார்ஜ் இருபது நிமிடங்கள் மற்றும் டாக் டைம் வெறும் 35 நிமிடங்கள் மட்டுமாகவும் இருந்தது.

மார்ட்டின் கூப்பர்

வயர்லெஸ் இணைப்பின்றி தொலைபேசியில் தொடர்பு கொள்ளமுடியும் என்பதை முதன்முதலில் நிரூபித்த டாக்டர் மார்ட்டின் கூப்பரை மோட்டரோலா நிறுவனம் தனது நிர்வாக இயக்குநர்களில் ஒருவராக பதவி உயர்த்தி அழகுபார்த்தது.

பின்னாளில் மார்ட்டின் கூப்பர், தானே ஒரு செல்போன் நிறுவனத்தைத் தொடங்கி, தன்னை நிராகரித்த பெல் கம்பெனிக்கே தனது சேவையை வழங்கியதெல்லாம் அவரது வெற்றிக்கதையின் இன்னொரு பக்கம்.

அன்று கூப்பர் தொடங்கிய தொழில்நுட்பம் படிப்படியாக வளர்ந்து, இன்று இந்த உலகத்தையே ஒற்றை விரலில் இயக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு மொபைல் போன் எப்படி கம்ப்யூட்டரை, கடிகாரத்தை, இணையத்தை, கேமராவை, தபாலை, தந்தியை, புத்தகப்படிப்பை என அனைத்தையும் தனக்குள் இணைத்திருக்கிறது என்பது ஆச்சர்யமே. என்றாவது ஒருநாள் மனித மூளையையும் இந்த தொழில்நுட்பம் ஜீரணித்து விடுமா என்று கேட்டபோது மார்ட்டின் கூப்பர் இப்படி சொன்னார்...

"உங்களது வாழ்க்கை உங்களது விரல்நுனியில் என்று மாற்றியமைத்துள்ள இந்த தொழில்நுட்பத்தை, நீங்கள்தான் நடத்திச் செல்கிறீர்கள் என்பதை நினைவுகொள்ளுங்கள். AI என்ற ஆர்டிஃபீசியல் இன்டெலிஜென்ஸ் இப்போதுதான் தோன்றியுள்ளது. ஆனால் மனித மூளையோ மிகவும் பழமையானது. இப்போதைய 5ஜி, இனிவரும் பற்பல புதிய தொழில்நுட்பங்கள் அனைத்திற்கும் முன்னோடி மூளை தான் என்பதுடன், புதியன எதுவும் தன்னை வெற்றிகொள்ள விடாமல் அவற்றை வழிநடத்தும் உன்னதப் படைப்பு மனித மூளை என்பதை மறவாதீர்கள்..." என்றார் இந்த 92 வயது படைப்பாளி!

உண்மைதானே?!

#WorldTechnologyDay



source https://www.vikatan.com/technology/tech-news/how-martin-cooper-invented-mobile-phone

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக