ஊரடங்கின் காரணமாக வீடடங்கிக் கிடப்போர் இரண்டு வகை. பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த நாள்வரை நின்று நிதானமாக, விருப்பமானதைச் சமைத்துச் சாப்பிட முடியாமல் தவித்தவர்கள், இந்த நாள்களில் தினம் ஒரு விருந்து சமைத்து வெறியைத் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
கையேந்தி பவன்களை நம்பி வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த பேச்சிலர்களுக்கோ, வெந்நீர் வைப்பதே விருந்து சமைப்பதற்கு இணையாக மாறியிருக்கிறது. இவர்கள் நிலைதான் ரொம்பவே பரிதாபமானது. அதிகம் மெனக்கெடாமல், அதே நேரம் வாய்க்கு ருசியாக என்ன சமைக்கலாம் என யூடியூபை தேடிக் கொண்டிருக்கும் சிங்கிள் பசங்களுக்கான சிம்பிள் வீக் எண்ட் மெனு இங்கே...
தேவையானவை:
பிரெட் - 10
நீளமாக நறுக்கிய
பெரிய வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 3
துண்டுகளாக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
பிரெட்டை நீங்கள் விரும்பும் வடிவில் துண்டுகளாக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயைக் கீறிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்துத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். பிறகு பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, பிரெட் துண்டுகள் சேர்த்துக் கிளறவும். இறுதியாக எலுமிச்சைச்சாறு ஊற்றிக் கிளறி கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
தேவையானவை:
கடலை மாவு - 150 கிராம்
அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஊறுகாய் - 15 கிராம் (காரத்துக்காக)
பிரெட் - 10 (விருப்பமான வடிவில் துண்டுகளாக்கவும்)
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, ஊறுகாய் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து சிறிது தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்துக்குக் கலந்து கொள்ளவும். இதில் பிரெட் துண்டுகளை முக்கி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து சாஸுடன் பரிமாறவும்.
தேவையானவை:
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று
குடமிளகாய் - ஒன்று
பாஸ்தா (விருப்பமான வடிவம்) - கால் கிலோ
சீஸ் - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த ரோஸ்மெரி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
வெங்காயத்தாள் - சிறிதளவு
தக்காளி சாஸ் செய்ய:
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
பூண்டு - 4 பல்
தக்காளி - 5
பச்சைமிளகாய் - 2
பேசில் இலைகள் - சிறிதளவு
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
பாஸ்தாவை வேகவைத்து தண்ணீர் வடித்து சிறிது எண்ணெய் விட்டுக் கிளறி வைக்கவும். குடமிளகாயை கியூப் வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.
சாஸ் செய்ய கொடுத்த பச்சைமிளகாய் மற்றும் தக்காளியைச் சேர்த்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து சாஸ் செய்ய கொடுத்த எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டு, தக்காளி விழுது சேர்த்துக் கிளறவும். தக்காளி விழுது சுருண்டு வந்ததும் பேசில் இலைகள், மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கினால் தக்காளி சாஸ் ரெடி.
அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கி, தக்காளி சாஸை ஊற்றி வேக விடவும். பிறகு உப்பு, ரோஸ்மெரி சேர்த்துக் கிளறி பாஸ்தா சேர்த்துக் கிளறவும். பாஸ்தா கலவையில் நன்கு மிக்ஸ் ஆனதும் சீஸ் மற்றும் வெங்காயத்தாள் தூவி இறக்கிப் பரிமாறவும்.
தேவையானவை:
புளிக்கரைசல் - 15 கிராம்
சங்கரா மீன் - அரை கிலோ
அரைக்க:
தேங்காய் - அரை முடி
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய
சின்ன வெங்காயம் - 6
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
மீனைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை எண்ணெய் இல்லாமல் வெறும் வாணலியில் வறுத்து சூடு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து கரைத்து வைத்துள்ள கலவையில் ஊற்றவும். அத்துடன் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்கவிட்டு சுத்தம் செய்த மீனை அதில் சேர்த்து வேகவைத்துப் பரிமாறவும்.
source https://www.vikatan.com/food/recipes/bread-onion-podimas-bread-pakoda-pasta-verdure-bachelors-special-weekend-recipes
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக