Ad

திங்கள், 10 மே, 2021

கரூர்: முழு ஊரடங்கு; சுவற்றில் துளையிட்டு 142 மதுபாட்டில்கள் கொள்ளை - டாஸ்மாக்கில் கைவரிசை

கொரோனா வைரஸ் பரவல் வேகமாக இருப்பதால், இன்றுமுதல் தமிழக அரசு ஊரடங்குக்கு உத்தரவிட்டுள்ளது. வரும் 14 - ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ள அந்த ஊரடங்கு நாள்களில், டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டது. இதனால், நேற்றோடு டாஸ்மாக் கடை இயங்குவது கடைசி நாள் என்பதால், குடிமகன்கள் மொத்தமாக மதுப்பாட்டில்களை வாங்கச் சென்றனர்.

டாஸ்மாக்கில் திருட்டு

இந்த நிலையில் தான், கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மதுபானக் கடையில், மதுப்பிரியர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மணவாசி பகுதியில் அரசு மதுபானக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று காலை 8 மணியளவில் மதுக்கடை ஊழியர் சுரேஷ் கடையை திறந்து பார்த்தபோது, மதுபான கடையின் பின்பக்க சுவற்றில் பெரிய துளை இருப்பதை பார்த்து அதிர்ந்தார்.

Also Read: கரூர்: தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை! - சுற்றிவளைத்த போலீஸ்

சுவற்றில் துளையிட்ட மர்ம நபர்கள், மதுபாட்டில்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியான சுரேஷ், இதுகுறித்து மாயனூர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாயனூர் காவல் நிலைய போலீஸார், தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர். அவர்களின் முதல்கட்ட விசாரணையில் பல்வேறு மதுபான வகைகளின் சுமார் ரூ. 40,500 மதிப்புள்ள 142 மது பாட்டில்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

டாஸ்மாக்கில் திருட்டு

இன்று முதல் மதுபானக் கடைகள் மூடப்படுவதால், மது கிடைக்காத அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள் யாரோ சிலர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அந்த கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.



source https://www.vikatan.com/news/crime/karur-theft-in-tasmac-142-bottles-stolen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக