Ad

புதன், 5 மே, 2021

செங்கல்பட்டு: ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு?! - உறவினர்கள் சொல்வதென்ன?

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. பல மாநிலங்களில் நிலைமை மோசமாகியுள்ள நிலையில், கடந்த சில வாரங்களாகத் தமிழகத்திலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்தவண்ணமாக இருக்கின்றன. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பு மிகுதியாக உள்ள மாவட்டமாகச் செங்கல்பட்டு காணப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். அதன் காரணமாக, மாவட்டத்திலுள்ள பெரும்பாலான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மட்டும் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த்தொற்றுக்குச் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் நிலவிவரும் உயிர்காக்கும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறிக் கொத்து கொத்தாகச் செத்து மடிந்துகொண்டிருக்கின்றனர். டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹைதராபாத் எனப் பல்வேறு மாநிலங்களில் கடுமையான ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவிவருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்பது இல்லை என்ற அளவுக்குக் கையிருப்பு இருப்பதாகத் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவருகிறது. ஆனால், தமிழகத்தில் சமீபமாக ஆங்காங்கே நடைபெறும் சம்பவங்கள் மக்கள் அனைவரையும் மிகுந்த கலக்கத்தில் ஆழ்த்திவருகின்றன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் இருப்பு போதிய அளவிலிருந்தும், குழாயில் ஏற்பட்ட பழுதின் காரணமாக, சிகிச்சை பெற்றுவந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்தச் சம்பவத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்றிரவு ஒரே நேரத்தில் 11 கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா மரணங்கள்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்றிரவு 10 மணியளவில் திடீரென ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளிகளுக்குத் தீவிர மூச்சுத்திணறல் ஏற்பட்டு அடுத்தடுத்து குறுகியகால இடைவெளியில் 11 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்த 11 கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையில் நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட ஆக்ஸிஜன் பற்றாக்குறையால்தான் நோயாளிகள் அனைவரும் மூச்சுத்திணறி உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தின் மீது குற்றம்சாட்டுகின்றனர்.

நள்ளிரவு நேரத்தில் அரங்கேறிய துயரச் சம்பவத்தால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாகத் தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஆட்சியர், "மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 11 நோயாளிகள் உயிரிழக்கவில்லை. மருத்துவமனையில் போதுமான அளவுக்கு ஆக்ஸிஜன் கையிருப்பு இருந்திருக்கிறது. நோயாளிகள் 11 பேர் அபாயகட்டத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்ததால், எதிர்பாராதவிதமாக உயிரிழந்துவிட்டனர். சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் உரிய விசாரணை நடத்தப்படும்" என்றார்.

ஆட்சியர் ஜான் லூயிஸ்

ஆனால் உயிரிழந்த நோயாளிகளின் உறவினர்கள் சிலரிடம் சம்பவம் தொடர்பாக விசாரித்ததில், "கொரோனா பாதிப்பு உறுதியானதும், வீட்டில் அனைவரையும் தனிமைப்படுத்தி வைத்திருந்தோம். மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் அதிகமானதால்தான் அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தோம். நாங்கள் அபாயகட்டத்தில் நோயாளிகளைச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவில்லை. மருத்துவமனையில் கிட்டத்தட்ட 800-க்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்தநிலையில், நேற்று இரவு ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 11 பேர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறுவது ஏற்புடையதாக இல்லை. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தால் மட்டுமே ஒரே நேரத்தில் இத்தனை உயிரிழப்புகள் நிகழும். ஆனால், மருத்துவமனை நிர்வாகத்தினர் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக உயிரிழக்கவில்லை என்று உறுதியாகக் கூறுகின்றனர். சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் மருத்துவமனையில் அனுமதித்தோம். ஆனால், தற்போது சடலங்களாக எடுத்துச் செல்லப்போகிறோம். எங்களுக்கு முறையான நீதி கிடைக்க வேண்டும்" என்று கண்ணீர்மல்கத் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை தரப்பில் விசாரிக்கப் பலமுறை தொடர்புகொண்டோம். மருத்துவமனை நிர்வாகத்தினர் அழைப்பை ஏற்கவில்லை. நள்ளிரவில் ஒரே நேரத்தில் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/11-covid-patients-died-in-chengalpattu-govt-hospital-due-to-oxygen-shortage

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக