Ad

சனி, 13 மார்ச், 2021

விழுப்புரம்: முன்னாள் அதிமுக மா.செ vs இன்னாள் அதிமுக மா.செ ... முந்துவது யார்?

விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோயிவிலூர் உட்பட 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நேற்று (12.03.2021) திமுக தலைமை, தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் வானூர்(தனி) தொகுதியை தன் கூட்டணி கட்சியான விசிகவுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது திமுக. மீதமுள்ள 6 தொகுதிகளிலும் தன் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களே போட்டியிடுவார்கள் என அறிவித்துள்ளது. விழுப்புரம் சட்டமன்ற தொகுதியை தவிர மீதமுள்ள 5 தொகுதிகளிலும் புதிய நபர் யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. சிறிதும் மாற்றம் இன்றி கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதே வேட்பாளர்களை மீண்டும் அறிவித்துள்ளது.

திமுக Vs அதிமுக

2016 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களான, செஞ்சி தொகுதியின் கே.எஸ்.மஸ்தான், மயிலம் தொகுதியின் Dr.ரா.மாசிலாமணி, திண்டிவனம் (தனி) தொகுதியின் பி.சீத்தாபதி சொக்கலிங்கம், திருக்கோவிலூர் தொகுதியில் க.பொன்முடி ஆகியோருக்கும் மீண்டும் அதே தொகுதிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2019ல் நடைபெற்ற விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவி நா.புகழேந்திக்கும் அதே தொகுதியில் மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. அந்த இடைத்தேர்தலில் இவருக்கு போட்டியாக களம் கண்ட அதிமுக வேட்பாளர் R.முத்தமிழ்செல்வன் இந்த தேர்தலிலும் அதிமுக வேட்பாளராக அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். மயிலத்தில் ரா.மாசிலாமணிக்கு போட்டியாக பாமக வேட்பாளர் சி.சிவக்குமார், செஞ்சியில் கே.எஸ்.மஸ்தானுக்கு போட்டியாக பாமக வேட்பாளர் MPS.ராஜேந்திரன், திண்டிவனத்தில் பி.சீத்தாபதி சொக்கலிங்கத்திற்கு போட்டியாக அதிமுக வேட்பாளர் P.அர்ஜீனன் ஆகியோர் களம் காண்கின்றனர். திருக்கோவிலூரில் க.பொன்முடிக்கு போட்டியாக பாஜக வேட்பாளர் VAT.கலிவரதன் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் மட்டுமே புதிய வேட்பாளரை அறிமுகம் செய்துள்ளது திமுக. திமுக-வில் அவர் புதியது என்றாலும் அதிமுக- வின் முன்னாள் எம்.பி- யாக இருந்துள்ளார். 2011 சட்டமன்ற தேர்தலில் சி.வி.சண்முகத்தை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியுற்ற க.பொன்முடி, 2016 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியை விழுப்புரத்தில் போட்டியிட பரிந்துரை செய்துவிட்டு திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் ஐக்கியமானார். 2016 சட்டமன்ற தேர்தலிலும் விழுப்புரத்தில் தோல்வியை தழுவியது திமுக கூட்டணி. இதனால் விழுப்புரத்தில் சி.வி.சண்முகத்தின் கை ஓங்கியிருந்தது.

இந்நிலையில் தான் அதிமுக-வில் விழுப்புரம் மாவட்ட செயலாளராக வகித்து வந்த மருத்துவர் ஆர்.லட்சுமணன் தடாலடியாக திமுக -வில் இணைந்தார். ஜெயலலிதா மரணத்திற்கு முன் விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தவர் ஆர்.லட்சுமணன். ஜெ. மறைவிற்கு பின் அவரிடமிருந்து மாவட்ட செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டு சி.வி.சண்முகத்திடம் கொடுக்கப்பட்டது. சி.வி.சண்முகம் வகித்து வந்த அமைப்புச் செயலாளர் பொறுப்பு ஆர்.லட்சுமணனிடம் கொடுக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் பொறுப்பு பறிபோன விரக்தியில் இருந்த லட்சுமணன் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் திமுக-வில் இணைந்தார். அவருடன் சேர்ந்து அவருக்கு இணக்கமாக அதிமுகவின் 14 மாவட்ட பொறுப்பாளர்களும் திமுக-வில் இணைந்தனர்.

ஆர்.லட்சுமணன், சி.வி.சண்முகம்

திமுக- வில் இணைந்த அவருக்கு மாநில மருத்துவர் அணி இணை செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது. விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் சி.வி.சண்முகத்திற்கு எதிராக நிற்கும் வெற்றி வேட்பாளருக்காக தவித்து வந்த திமுக, விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளராக இருந்து, தற்போது திமுக-வில் பொறுப்பில் இருக்கும் Dr.ஆர்.லட்சுமணனை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

இப்போது, முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளருக்கும் Vs இப்போதைய அதிமுக மாவட்ட செயலாளருக்கும் போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக வேட்பாளரான ஆர்.லட்சுமணன், திமுக மற்றும் கூட்டணி வாக்குகளை பெறுவார் என்றாலும், தனக்கு இணக்கமாகவர்கள் மூலம் அதிமுகவின் குறிப்பிட்ட வாக்குகளை பெறுவார் எனவும் கூறப்படுகிறது. அதிமுக மற்றும் திமுக கூட்டணி மட்டுமின்றி இன்னும் சில கூட்டணி கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் களம் காண்பார்கள் என்பதினால் வாக்குகள் சிதறும் சூழலும் உள்ளது. விறுவிறுப்பான இந்த தேர்தல் களத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தமிழகத்தில் திமுக 9 மருத்துவர்களை வேட்பாளர்களாக அளித்துள்ளது. அதில் இரண்டு நபர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட உள்ளனர் என்பதும் குறிப்பிட்ட தக்கது.



source https://www.vikatan.com/news/politics/ground-report-of-viluppuram-constituency-election-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக