கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பலகட்ட ஆய்வுகளுக்குப் பிறகு தடுப்பூசிகளை கண்டுபிடித்தன. தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசி ஐரோப்பிய நாடுகளில் மக்களின் அவசரக்கால பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் இந்தத் தடுப்பூசி பல்வேறு உலக நாடுகளுக்கும் விநியோகிக்கப்பட்டு மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தத் தடுப்பூசி இந்தியாவில் 'சீரம்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு 'கோவிஷீல்டு' என்ற பெயரில் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வடக்கு ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்களுக்கு ரத்த உறைவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி அந்நாட்டுச் சுகாதாரத்துறை மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணியினை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
டென்மார்க்கில் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒரு சிலருக்கும் ஆஸ்திரியாவில் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட மக்களில் 22 பேருக்கும் என ஏனைய ஐரோப்பிய நாடுகள் மொத்தமாக 30 பேருக்கு ரத்த உறைவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கடந்த வியாழக்கிழமை முதல் அந்நாடுகள் தடுப்பூசி வழங்கும் பணியை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளன.
அதில், தடுப்பூசி செலுத்திக்கொண்ட 49 வயது செவிலியர் ஒருவர் சில தினங்களில் இறந்துள்ளார். அதன் காரணமாக ஆஸ்திரியா அரசும் கடந்த திங்கள் முதல் தடுப்பூசி செலுத்தும் பணியை நிறுத்தி வைத்துள்ளது.
டென்மார்க்கை தொடர்ந்து நார்வே, ஆஸ்திரியா, ஈஸ்டோனியா, லத்வியா, லித்துனியா மற்றும் லக் ஷும்பர்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசிக்குத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், 'ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். இந்தத் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு ஏதுவானதுதான். தடுப்பூசியால் பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக ஒரு சில வழக்குகளே பதிவாகி இருக்கின்றன. அது குறித்து நாங்கள் மிகத் தீவிரமாக விசாரித்து வருகிறோம். ஆனால், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. அனைவரும் நலமாக இருக்கின்றனர். அதனால், இந்த தடுப்பூசியைத் தொடர்ந்து மக்களுக்குச் செலுத்த விரும்புகிறோம்' என்று குறிப்பிட்டுள்ளது.
source https://www.vikatan.com/health/international/european-countries-suspended-astrazenecas-vaccine-after-over-reports-of-blood-clot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக