Ad

திங்கள், 15 மார்ச், 2021

அ.ம.மு.க - தே.மு.தி.க கூட்டணியால் பாதிப்பு எந்த அணிக்கு? #TNElection2021

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்த தே.மு.தி.க இந்தமுறை அ.ம.மு.க கூட்டணியில் இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. அ.தி.மு.க கூட்டணியில் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காததால் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்தார் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா. தொடர்ந்து அ.ம.மு.கவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகின. இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அ.ம.மு.க - தே.மு.தி.க இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. தே.மு.தி.கவுக்கு அறுபது தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

தே.மு.தி.க. 

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல் வரையிலும்கூட தே.மு.தி.கவுடன் கூட்டணி அமைக்க இருபெரும் திராவிடக் கட்சிகளும் முட்டி மோதின. அதிலும், மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க எப்படியும், தங்களின் கூட்டணிக்குள் வந்துவிடும் என எதிர்பார்த்தார். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து முதல்வர் வேட்பாளரானார் விஜயகாந்த். ஆனால், தேர்தல் முடிவுகள் கசப்பான அனுபவத்தையே தே.மு.தி.கவுக்குக் கொடுத்தன. போட்டியிட்ட 104 தொகுதிகளில், 103 தொகுதிகளில் டெபாஸிட்டே கிடைக்கவில்லை.

தொடர்ந்து, 2019 தேர்தலிலும் தேசிய ஜனநாகக் கூட்டணியில், நான்கு இடங்களைப் பெற்று படுதோல்வியைச் சந்தித்தது தே.மு.தி.க. தொடர்ந்து அ.தி.மு.க கூட்டணியில் நீடித்துவந்தபோதும், அந்தக் கட்சிக்கு போதிய முக்கியத்துவத்தை அளிக்கவில்லை அ.தி.மு.க. ''எங்களைக் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு அழையுங்கள்'' என தே.மு,.தி.க வெளிப்படையாக கோரிக்கை விடுத்தும் அ.தி.மு.க கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து, பா.ம.க, பா.ஜ.கவுடனான தொகுதிப் பங்கீடு முடிந்தபிறகு கடைசியாக தே.மு.தி.கவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது அ.தி.மு.க. கூடவே குறைவான தொகுதிகளை, அதிலும் தே.மு.தி.க விரும்பிய தொகுதிகளை ஒதுக்க மறுத்தது அ.தி.மு.க.

அ.தி.மு.க குறித்து அவதூறாகப் பேசியதாக தே.மு.தி.க கழக துணை செயலாளர் எல்.கே.சுதிஷ் உருவ பொம்மையை எரித்த அ.தி.மு.க-வினர்.

இந்தநிலையில், கடந்த 9 ஆம் தேதி தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், அ.தி.மு.க அணியில் இருந்து விலகுவதாக முடிவெடுக்கப்பட்டது. கூட்டம் முடிந்து வெளியே வந்த தே.மு.தி.க மாநிலத் துணைச் செயலாளர் சுதீஷ், `இன்றைக்குத்தான் எங்களுக்கு தீபாவளி. அ.தி.மு.க அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழக்கும்' எனக் கொதித்தெழுந்தார். விஜயகாந்தின் மகன், விஜய பிரபாகரனும், அ.தி.மு.க அரசையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''பக்குவமில்லாத அரசியலை தே.மு.தி.க முன்னெடுக்கிறது'' என விமர்சித்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக நேற்று பேசிய பிரேமலதா,'' முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருந்த பக்குவம், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை'' என்று பேசினார். ஏற்கெனவே, ''அ.தி.மு.க-வை மீட்டெடுப்பதே எங்கள் நோக்கம். கண்டிப்பாக இந்தத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்களைத் தோற்கடிப்போம்'' என அ.ம.மு.க ஒருபுறம் களம் இறங்க மறுபுறம் தே.மு.தி.கவும் தற்போது அ.தி.மு.கவுக்கு எதிராக வீரியமாக கம்பைச் சுழற்ற ஆரம்பித்திருக்கிறது.

Also Read: `தோப்பூர்' முதல் `தொகுதி இல்லை' வரை - தே.மு.தி.க-வின் 15 ஆண்டுக்கால அரசியல் ரீவைண்ட்!

அ.ம.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு சென்னை, வட தமிழகம் மற்றும் கொங்கு மண்டலத்தை ஒட்டி பெருவாரியான தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. கட்சியின் பொருளாளர், பிரேமலதா, விஜயகாந்த் முதன்முதலில் வெற்றிபெற்ற விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தநிலையில், அ.ம.மு.க- தே.மு.தி.க - எஸ்.டி.பி.ஐ ஆகிய கட்சிகள் இணைந்து அமைத்திருக்கும் இந்தக் கூட்டணியால் பாதிப்பு தி.மு.க அணிக்கா இல்லை அ.தி.மு.க அணிக்கா என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம்:

ப்ரியன்

''நிச்சயமாக அ.தி.மு.க கூட்டணிக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அ.ம.மு.க தனித்துப் போட்டியிட்டாலே அது தென்மாவட்டங்களில் அ.தி.மு.கவுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான். தற்போது தே.மு.தி.கவும் இணைந்திருப்பதால் தென் மாவட்டங்களில் அ.தி.மு.கவுக்கு பாதிப்பு இன்னும் அதிகமாகும். அ.ம.மு.கவுக்கு ஐந்தரை சதவிகித வாக்குகள், தே.மு.தி.கவுக்கு இரண்டரை சதவிகித வாக்குகள், இன்னும் சிறிய கட்சிகளின் வாக்குகள், சசிகலாவை சேர்க்காததால் அ.தி.மு.கவில் அதிருப்தியாக இருக்கும் தொண்டர்களின் வாக்குகள் என அனைத்தையும் சேர்த்தால் பத்து சதவிகித வாக்குகள் வரும்.

இதுவே இந்தக் கூட்டணிக்கு, பலமான அணி என்கிற தோற்றத்தைக் கொடுக்கும். இந்தக் கூட்டணி வெற்றிபெறுகிறதோ இல்லையோ, அ.தி.மு.க கூட்டணியின் வெற்றியை நிச்சயமாகத் தடுக்கும். தென்மாவட்டங்கள் மட்டுமல்ல, தே.மு.தி.க போட்டியிடும் மத்திய மற்றும் வட மாவட்டங்களிலும் அ.தி.மு.கவுக்குப் பின்னடைவே ஏற்படும். குறிப்பாக, தெலுங்கு மைனாரிட்டி மக்கள் வாழும் பகுதிகளில் அ.தி.மு.க அதிக பாதிப்பைச் சந்திக்கும். தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் அ.தி.மு.க மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்படும் வாய்ப்புகளே அதிகம்'' என்கிறார் அவர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/ammk-dmdk-alliance-will-affect-dmk-or-admk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக