Ad

திங்கள், 15 மார்ச், 2021

கோலியை கண்காணிக்கும் இயான் மார்கன்... மூன்றாவது டி20... வெற்றி வியூகங்கள் என்ன?! #INDvENG

உலகின் மிக பலம்வாய்ந்த இரண்டு அணிகளின் டி20 தொடர் 1-1 என சமநிலையில் இருக்க, அடுத்த மூன்று போட்டிகளுக்கான பரபரப்பு அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. டி20 உலகக்கோப்பையை மனதில்வைத்து கோலி- சாஸ்திரி கூட்டணி பல்வேறு பரிசோதனை முயற்சிகளை எடுக்க, இங்கிலாந்தோ இந்தத்தொடரை வென்றே ஆகவேண்டும் என்கிற வெறியோடு தனது முழுபலத்தோடு மோதுகிறது. மூன்றாவது டி20 போட்டி இன்று இரவு நடைபெற இருக்கும் நிலையில் சூழல் யாருக்கு சாதகமாக இருக்கிறது?!

ரசிகர்களுக்குத் தடை!

கடந்த டெஸ்ட் தொடரின், இரண்டாவது போட்டி முதல், மைதானத்தில் சில கட்டுப்பாடுகளுடன், ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது குஜராத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அடுத்த மூன்று போட்டிகளிலும், ரசிகர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டதுடன், முன்பதிவு செய்தவர்களுக்கான டிக்கெட் தொகையும் திரும்ப அளிக்கப்படும் என அறிவித்துள்ளது குஜராத் கிரிக்கெட் அமைப்பு. கடந்த இரண்டு போட்டிகளாக 60 ஆயிரம் ரசிகர்கள் ஸ்டேடியத்துக்கு வந்து இந்திய வீரர்களுக்கு ஆதரவளித்த நிலையில் ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடப்பது வீரர்களின் மனநிலையை சற்றே மந்தமாக்கலாம்.

மைதானம் எப்படி?!

கடந்த இரண்டு போட்டிகளும், Black Soil-ல் நடந்து வந்த நிலையில், மூன்றாவது போட்டி, Red Soil-ல் நடக்க இருக்கிறது. இது பொதுவாக, சுழல் பந்து வீச்சுக்குக் கை கொடுக்கும் எனவும், பந்து நன்றாகவே டர்ன் ஆகும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில், இருபக்கமும் விழுந்திருந்த, 18 விக்கெட்டுகளில், 7 விக்கெட்டுகளை சுழல் பந்து வீச்சாளர்களும், மீதம் 11 விக்கெட்டுகளை, வேகப்பந்து வீச்சாளர்களும் வீழ்த்தி இருந்தனர். இந்த விக்கெட்டுகளின் விகிதம், தலைகீழ் விகிதமாக, மூன்றாவது போட்டியில் மாற்றம் காணலாம். நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் கண்ட சுழல் மாயா ஜாலம் மீண்டுமொரு முறை காணக் கிடைக்கலாம்.

டாஸேதான் கடவுளடா!

கடந்த இரண்டு போட்டிகளிலும், டாஸ் வென்ற அணி, சேஸிங்கைத் தேர்ந்தெடுத்து, வெற்றியோடு முடித்திருக்கிறது. எனவே, நாளைய போட்டியிலும் டாஸை வெல்லும் கேப்டன், பனிப்பொழிவையும் மனதில் நிறுத்தி, பௌலிங்கைத் தேர்ந்தெடுக்கலாம். இதுவரை டாஸ் வென்ற டி20 போட்டிகளில், 80 சதவிகிதம் போட்டிகளில், கோலி வென்றிருக்கிறார். மேலும், அணி வென்ற போட்டிகளில், சேஸிங்கின் மூலம், 1,000 ரன்களைக் கடந்த ஒரே வீரராகத் திகழும், ரன் சேஸிங் கிங் கோலி, இதே பாதையில் பயணிக்கவே வாய்ப்புகள் அதிகம்.

இயான் மார்கன்

வருவாரா ரோஹித்?

இந்தியாவின் ஓப்பனர்கள் குழப்பம், மூன்றாவது போட்டியிலும் நீடிக்கிறது. இதுவரை ஓய்வளிக்கப்பட்ட வொயிட் பால் கிரிக்கெட்டின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, இரண்டு போட்டிகளுக்குப் பின் அணிக்குத் திரும்புவார் என கோலி அறிவித்திருந்த நிலையில், அவருக்குத் தனது இடத்தை, இரண்டு போட்டிகளில், இரண்டே ரன்கள் எடுத்து வெளியேறிய ராகுல்தான் விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. எனினும், கடந்த ஆண்டு டி20 போட்டிகளில், 44.88 பேட்டிங் சராசரியோடு, 140.76 ஸ்ட்ரைக் ரேட்டோடு மிரட்டியது மட்டுமின்றி, ஐபிஎல்-ல் ஆரஞ்சு கேப்பையும் தட்டிச் சென்ற ராகுலுக்கு இன்னுமொரு வாய்ப்புக் கொடுப்பது தவறில்லை என்பது அணி நிர்வாகத்தின் எண்ணமாக இருந்தால், ரோஹித்தின் வருகை யாருக்கு எதிராக முடியும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இஷான் கிஷன் ஓப்பனிங்?!

இந்தியாவின் மத்திய பின்வரிசை பேட்டிங், பன்ட், பாண்டியா, சூர்யக்குமாரால் வலுவுடன் காணப்படுகிறது. எனினும், பவர்ப்ளேயில் ரன்களை அதிரடியாகக் குவிப்பது அவசியமாகிறது. அறிமுக டி20 போட்டியிலேயே, அரைசதமடித்த, நான்காவது இந்திய வீரர் எனும் சாதனையையும், அணியில் ஒரு இடத்தையும் தனதாக்கிக் கொண்ட இஷான், ஓப்பனிங்கை வலுவாக்க, ஓப்பனராக இறக்கப்படலாமே என்ற கருத்து நிலவுகிறது. போன போட்டிக்கு முன்னரே ''எந்தப் பொசிஷனில் இறங்கி விளையாடவும் தயார்'' என இஷான் சொல்லியிருந்தார். பிரஷரைத் தாக்குப் பிடித்து, புதுப்பந்தைச் சந்திக்க, இந்தியாவின் இன்னொரு ஓப்பனருடன், இஷான் களமிறக்கப்படலாம்.

கோலாகலக் கோலி!

கடந்த போட்டியில், டி20 ஃபார்மேட்டில் 3000 ரன்களைக் குவித்த முதல் வீரர் என்ற பெருமையுடன், 12,000 சர்வதேச ரன்களைக் கடந்த முதல் இந்தியக் கேப்டன் எனும் சாதனையையும் கோலி நிகழ்த்தியிருக்கிறார். பேக் டு பேக் டக் அவுட்டான கோலி, ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டுவந்து களத்தில் கனலேற்றி, தனது 26-வது அரைச்சதத்தைப் பதிவு செய்திருந்தார். டி20 அரங்கில், அதிக அரைச்சதங்களை அடித்த வீரரும் கோலியே. மேலும், உபரிச் சாதனையாக, இந்தியா இங்கிலாந்து மோதிக் கொண்ட டி20 போட்டிகளில், 400 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்‌. இழந்த ஃபார்மை கோலி மீட்டெடுத்திருப்பது, இந்திய அணியின் பலத்தை பல மடங்கு கூட்டியிருக்கிறது!

#INDvENG

மொயின் அலியும், மார்க் உட்டும்!

பெரும் நம்பிக்கையுடன் கடந்த போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்ட டாம் கரண், இரண்டு ஓவர்களில், 26 ரன்களைக் கொடுத்து ஏமாற்றத்தையே பரிசளித்தார். பிட்ச்சின் தன்மையும், இன்னொரு சுழல்பந்து வீச்சாளரின் தேவையை உணர்த்துவதால், டெஸ்ட்டில் ரூட் செய்த தவறை டி20-ல் மார்கன் செய்யாமல், மொயின் அலியை உள்ளே கொண்டு வருவார் என எதிர்பார்க்கலாம். முதல் போட்டியில், சராசரியாக 148 கிமீ வேகத்தில் பந்து வீசி அரளவைத்த உட்டுக்கு, காயம் காரணமாக, இரண்டாவது போட்டியில் ஓய்வளிக்கப்பட்டது. அவர் அணிக்குத் திரும்ப, தகுதி பெறும் கட்டத்தில், கடந்த போட்டியில், 2.5 ஓவர்களில், 38 ரன்களை, அள்ளிக் கொடுத்த, ஜோர்டனின் இடம் கேள்விக்குறியாகலாம்.

வானவேடிக்கை காணக் கிடைக்காதா?

பொதுவாக டி20 ஃபார்மேட் என்றாலே, அது பேட்ஸ்மேன்கள் ஆட்சி நடத்தும் இடமாகவே இருக்கும். ஆனால், இந்தத் தொடரில், இருபக்கத்திற்கும் சேர்த்து, ராய் மட்டுமே, 95 ரன்களுடன் லீடிங் ரன் ஸ்கோரராக இருக்கிறார். 22 சிக்ஸர்களும், 48 பவுண்டரிகளும் மட்டுமே இரண்டு போட்டிகளிலும் சேர்த்து இருபக்கமும் இருந்து வந்துள்ளன. இனி வரும் போட்டிகளாவது, அப்படி வானவேடிக்கை காட்டும் போட்டிகளாக அமையுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது என்றாலும், மீதமுள்ள மூன்று போட்டிகளுமே, அகமதாபாத்திலேயே நடைபெறுவதால், அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே!

மலான் எனும் மாயக்காரன்!

டெஸ்ட் தொடரில், போட்டிகள் தொடங்கும் முன் ரூட்டின் ஃபார்ம், இந்திய ரசிகர்கள் வயிற்றில் அமிலத்தைக் கரைத்தது. எனினும் முதல் போட்டிக்குப்பின், அவரது ஆட்டத்தை, ஆட்டம்காண வைத்தனர் இந்திய பௌலர்கள். நடப்பு டி20 தொடரிலும், தொடர் தொடங்குவதற்கு முன், டி20-ல் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் எனும் மலானுக்கான அந்த அடைமொழி கொஞ்சம் அச்சமூட்டுவதாகவே இருந்தது. ஆனால், இதுவரை அவரிடமிருந்து அப்படி ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படவில்லை. ஸ்பின் பௌலிங்கையும் எதிர்கொள்ளத் திணறுகிறார் மலான்‌. எனினும், ஒரு போட்டி போதும், அவரை பேக் டு த டிராக் கொண்டு வர என்பதால், இந்தியா அவரை கவனத்துடனேயே அணுக வேண்டும்.

#INDvENG

கோலி வெர்ஸஸ் மார்கன்!

வீரர்கள் தேர்வு, பௌலர்களைச் சரியான முறையில் கையாளாமல் போனது போன்ற முதல் போட்டியில் செய்த தவறுகளை இரண்டாவது போட்டியில் சரி செய்தது கோலிக்கு வெற்றியைப் பரிசளித்தது. மார்கனின் பக்கமோ, இங்கிலாந்து, இந்தியா தனது தவறுகளைத் திருத்திக் கொண்டதால் வீழ்ந்தது எனச் சொல்லலாம். இவர்களில் யார் சிறந்த கேப்டன் என்பதனை, இந்தத் தொடர் இறுதி செய்து விடும்.

எந்த அணி 2/1 என்ற முன்னிலையுடன் கோப்பையை நோக்கி ஒரு அடி முன்னாள் எடுத்து வைக்கும் என்பது, மூன்றாவது போட்டியில் தெரிந்து விடும் என்றாலும், அது டி20-கே உரிய கடைசிப் பந்து பரபரப்பு, த்ரில், திகிலோடு நடக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்!



source https://sports.vikatan.com/cricket/india-vs-england-third-t20-match-preview

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக