Ad

திங்கள், 15 மார்ச், 2021

`கரூரில் திமுக-வை செந்தில் பாலாஜி ஒழித்துக்கட்டிவிட்டார்!' - தம்பிதுரை

"செந்தில் பாலாஜிக்கு கட்சி மாறுவது சாதாரண விசயம். ம.தி,மு.க, தி.மு.க, அ.தி.மு.க, அ.ம.மு.க, இப்போ தி.மு.கனு பல கட்சிகளுக்கு தாவியவர் அவர். அடுத்து, எந்த கட்சிக்குப் போவார்னு தெரியலை. இப்போ, கரூர் மாவட்டத்தில் தி.மு.கவை ஒழித்துகட்டிவிட்டார்" என்று தம்பிதுரை அதிரடியாக பேசியுள்ளார்.

வாக்கு சேகரிக்கும் தம்பிதுரை

அ.தி.மு.கவின் கொள்கைப் பரப்பு செயலாளரான தம்பிதுரை, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியைத் தழுவினார். அதன்பிறகு, சொந்த ஊருக்கு சென்றவர், இரண்டு வருடங்கள் கழித்து, கரூர் வருகை தந்தார். தனது சிஷ்யயரான எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதால், அவருக்காக வாக்குகள் சேகரிக்க வருகை தந்தார். கோடங்கிப்பட்டி முத்தாளம்மன் கோயிலில் சாமி கும்பிட்டு, எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது, தம்பிதுரையும் அங்கே இருந்தார். அதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சாமி கும்பிடும் தம்பிதுரை

``அம்மாவின் ஆட்சியை, எடப்பாடி பழனிசாமி சிறப்பாக நடத்தி, முடித்திருக்கிறார். பல நல்ல திட்டங்களை அறிவித்திருக்கிறார். அதோடு, இ.பி.எஸ்ஸூம், ஓ.பி.எஸ்ஸூம் சேர்ந்து, கட்சியை சிறப்பாக வழிநடத்துகிறார்கள். அதனால், மக்கள் அ.தி.மு.கவை மறுபடியும் அரியணையில் ஏற்ற தயாராகிவிட்டார்கள். அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க வெளியேறியது அவர்களின் சொந்த விருப்பம். நாங்க அவங்களை கூட்டணியைவிட்டு வெளியில் அனுப்பவில்லை. அவங்களுக்கு எங்க கூட்டணியில் தொடர விருப்பம் இல்லாதபோது, நாங்க என்ன பண்ண முடியும்?. அவங்க போனா என்ன, அ.தி.மு.க அரசின் சாதனைகளைப் பார்த்து, மக்கள் அ.தி.மு.க கூட்டணியை ஜெயிக்க வைக்க முடிவு செய்துவிட்டார்கள். எம்.ஆர்.விஜயபாஸ்கரை எதிர்த்து, செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். அவர், அங்க போய், தி.மு.கவை காணாமல் பண்ணிவிட்டார். உங்களுக்கு தெரியுமில்ல. அ.தி.மு.கவில் இருந்து போனவர். 5 வருடத்தில், ஒரு தொகுதியில் இரண்டு கட்சிகளில் போட்டியிட்ட ஒரே ஆள் இவராகத்தான் இருக்கும். அரவக்குறிச்சியில் தி.மு.க சார்பில் ஜெயிச்சப்ப, பொய் வாக்குறுதிகளை கொடுத்து, மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றார். ஆனால், அவர் ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்பதை மக்கள் இப்போது புரிந்துகொண்டார்கள்.

Also Read: கரூர்: 'இது, காமராஜ் எக்ஸ்சேஞ்ச் மேளா!' - கிருஷ்ணராயபுரம் தொகுதி விநோதம்

அதனால், அவரைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. அவர் எங்ககூட இருந்தவர். அதனால், அவர் எப்படி செயல்படுவார், எப்படியெல்லாம் பேசுவார் என்பது எங்களுக்குத் தெரியும். மக்களுக்கும் அது தெரியும். அதனால், உண்மையாக தி.மு.கவினரெல்லாம், அ.தி.மு.கவுக்குதான் வாக்களிப்பார்களே தவிர, செந்தில் பாலாஜிக்கு ஓட்டுப் போடமாட்டாங்க. ஏன்னா, தி.மு.கவினர்களை அவர் ஒழித்துகட்டிவிட்டார். தி.மு.க முக்கியப் புள்ளியாக இருந்த கே.சி.பியை இருக்கிற இடம் தெரியாமல் செய்துவிட்டார். அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளராக இருந்த கருணாநிதி என்பவரின் நிலைமை என்னனு தெரியலை. நன்னியூர் ராஜேந்திரன் எங்கே இருக்கார்னே தெரியலை. அ.தி.மு.கவில் செந்தில் பாலாஜி இருந்தப்ப, இவர்மீது கோச்சுக்கிட்டு தி.மு.க போனார் சின்னசாமி. ஆனால், தி.மு.க போன செந்தில் பாலாஜி, சின்னசாமியை காலி பண்ணிட்டார். அதனால், செந்தில் பாலாஜியோட வேலையே, போன இடத்தில் எல்லோரையும் காலி பண்ணுவது தான். அதோடு, கட்சிமேல் கட்சியாக மாறிகொண்டிருக்கும் அவரை, மக்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள். ம.தி.மு.க, தி.மு.க, அ.தி.மு.க, அ.ம.மு.க, இப்போ தி.மு.கனு அவர் மாறாத கட்சியில்லை. அடுத்து, அவர் எந்த கட்சிக்குப் போவார்னு தெரியலை.

வாக்கு சேகரிக்கும் தம்பிதுரை

இவரால், தி.மு.கவினர் வெந்துபோயிருக்கிறார்கள். அதனால், அ.தி.மு.க அனைத்து தொகுதிகளிலும் வெற்றிப் பெறும். அதோடு, அ.தி.மு.கவில் இருந்து தி.மு.கவுக்கு போனவர்களின் நிலைமை என்ன?. தண்டராம்பட்டு வேலாக இருக்கட்டும், ரகுபதியாக இருக்கட்டும், சேகர்பாபுவாக இருக்கட்டும், முத்துசாமியாக இருக்கட்டும், செந்தில் பாலாஜியாக இருக்கட்டும், எல்லோரும் இங்கிருந்து ஓடுனவங்க. அவர்களை மக்கள் விரும்பமாட்டார்கள். நிலையில்லாமல் கட்சிமேல் கட்சியாக மாறிகொண்டிருப்பவர்களை மக்கள் விரும்பமாட்டார்கள். அதனால், நிலையான கருத்துடன், நிலையான கொள்கைப் பிடிப்புடன் ஒரே கட்சியில் இருப்பவர்களையே மக்கள் ஆதரிப்பார்கள். அப்படிப்பட்ட மக்கள் வாக்கானது இரட்டை இலைக்கு தான் விழப்போகிறது. அதனால், கரூர் அ.தி.மு.க வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெற்றிபெறப் போவது உறுதி. எழுதி வைத்துக்கொள்ளுங்கள், குறைந்தது 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றிப்பெறுவார்" என்றார்.



source https://www.vikatan.com/news/election/thambidurai-speech-against-senthil-balaji

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக