நான் ஒரு ஐ.டி நிறுவனத்துல வேலை பார்க்குறேன். அரேஞ்சுடு மேரேஜ். கணவர் ரொம்ப அன்பானவர். 29 வயசாகும் எனக்கு, ஒரு பெண் குழந்தை இருக்கு. கணவருக்கு வெளிநாட்டுல வேலை. இப்படி எல்லாமே நல்லாதான் போயிட்டிருந்தது... என் கல்லூரித் தோழியை நான் சந்திச்ச ரெண்டு மாசங்களுக்கு முன்புவரை.
கணவர் வெளிநாட்ல இருந்தாலும், என் ஆபீஸ் பஞ்சாயத்துகள்ல இருந்து குடும்ப நிகழ்வுகள் வரை நான் எல்லா விஷயங்களையும் அவர்கிட்ட தினம் தினம் பகிர்ந்துவிடுவேன். பாராட்ட வேண்டிய விஷயங்களுக்குப் பாராட்டுறது, சமாதானம் செய்றது, பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்றதுனு கணவரா மட்டும் இல்லாம அவர் எனக்கு நல்ல நண்பராவும் இருப்பார்.
கொரோனா முடக்கத்தப்போ வெளிநாட்டுல இருந்த என் கணவர், விமான சேவைகள் எல்லாம் ஆரம்பிக்கப்பட்டதும் கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழிச்சு ஒருவழியா வீடு வந்து சேர்ந்தார். வழக்கமா கணவர் விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது நாங்க குடும்பத்தோட டூர் போறது வழக்கம். இந்த முறையும் அந்த மாதிரி ஒரு பிரபல டூரிஸ்ட் ஸ்பாட்டுக்குப் போனோம்.
அந்த ஊர்ல நாங்க எடுத்துக்கிட்ட போட்டோஸை என்னோட இன்ஸ்டால நான் போஸ்ட் பண்ண, அதைப் பார்த்த என்னோட கல்லூரித் தோழி, `ஏய்... எங்க ஊருக்கு வந்திருக்கியா?!'னு எனக்கு மெசேஜ் அனுப்பினா. அவளும் அவ கணவரும் அந்த ஊர்லதான் வசிக்கிறாங்க. அவளோட கணவரும் எங்களோட க்ளாஸ்மேட்தான். அவங்க ரெண்டு பேருக்கும் லவ் மேரேஜ்.
தொடர்ந்து, என் ஃபிரெண்ட் எனக்கு போன் பண்ணி, `வீட்டுக்கு வா, அவனும் உன்னை இன்வைட் பண்ணச் சொன்னான்'னு சொல்லி ரொம்ப வற்புறுத்திக் கூப்பிட்டா. `இரு அவனையே பேசச் சொல்றேன்'னு சொல்லி போனை அவன்கிட்ட கொடுத்துட்டா. அவனும் வீட்டுக்கு வரச் சொல்லி ரொம்ப விரும்பிக் கூப்பிட்டான்.
Also Read: எங்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் கணவரின் முன்னாள் மனைவி... நான் என்ன செய்ய? #PennDiary - 04
இதுக்கு இடையில ஒரு உண்மையச் சொல்லணும். காலேஜ் டேஸ்ல நான், அவன், அவள் மூணு பேரும் ரொம்ப குளோஸ் ஃபிரெண்ட்ஸ். மூணு பேரும் அவ்ளோ ஜாலியா அந்த நாள்களை என்ஜாய் பண்ணினோம். ஒரு கட்டத்துல நானும் அவனும் காதலிக்க ஆரம்பிச்சோம். எங்களோட குளோஸ் பெஸ்டி என்பதால, எங்க காதல் கதையோட எல்லா அத்தியாயங்களும் எங்க தோழிக்கும் தெரியும்.
அப்புறம் ஒரு கட்டத்துல எனக்கும் அவனுக்கும் பிரேக் அப் ஆகிடுச்சு. டீசன்ட்டா ஒரு பை சொல்லிட்டு விலகிட்டோம். அதுக்கு அப்புறம், என்னோட பெஸ்டியும் அவனும் காதலிக்க ஆரம்பிச்சு, ரெண்டு பேரும் வெற்றிகரமா திருமணமும் செஞ்சுக்கிட்டாங்க. அப்புறம் அதிகம் டச் இல்ல. சோஷியல் மீடியாவில் ஃபிரெண்ட் லிஸ்ட்டில் இருப்பதோடு சரி.
என் கணவர்கிட்ட, `என்னோட காலேஜ் ஃபிரெண்ட்ஸ் ரெண்டு பேர்... லவ் மேரேஜ்... இந்த ஊர்லதான் இருக்காங்க. வீட்டுக்குக் கூப்பிடுறாங்க'னு நான் சொல்ல, `உனக்கு ஓ.கேனா நாம போகலாம்ப்பா'னு சொன்னார். எனக்கு மனசுல ஒரு பக்கம் உறுத்தல் இருந்தாலும், `சரி என்ன இப்போ? கல்யாணம் ஆகி அவங்களும் செட்டில் ஆகிட்டாங்க, நாமளும் செட்டில் ஆகிட்டோம். மனசுல எந்தச் சலனமும் குழப்பமும் இல்ல. ஜஸ்ட் ஃபிரெண்ட்ஸா அவங்களை மீட் பண்ணுவோம்'னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு, அவங்க வீட்டுக்கு நான், என் கணவர், குழந்தைனு கிளம்பினோம்.
என் தோழியும் அவ கணவரும் எங்களை நல்லாவே வரவேற்றாங்க. அவங்களுக்கு ஒரு குட்டிப் பையன் இருந்தான். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நல்லா பேசிட்டிருந்தோம். சொல்லப்போனா, காலேஜ்ல நாங்க மூணு பேரும் ஃபிரெண்ட்ஸா என்ஜாய் பண்ணின அந்த நாள்களுக்குக் கொஞ்சம் திரும்பிப் போன மாதிரி இருந்துச்சு.
Also Read: ``வீடு, கார் இருந்தாலும் அமெரிக்க வாழ்க்கை அடிமைதான்!" - தமிழ்ப் பெண்ணின் கண்ணீர் #PennDiary - 01
பேச்சு சுவாரஸ்யமா போயிட்டிருந்தப்போ தோழியின் கணவர், `லைட்டா டிரிங்க்ஸ்..? ஜஸ்ட் வெல்கம் டிரிங்கிங்தான்...'னு என் கணவர்கிட்ட கேட்க, அவரும் ஓ.கேனு சொன்னார். குழந்தைகளை சாப்பிட வெச்சிட்டு ரூம்ல விளையாடவிட்டுட்டு, நாங்க நாலு பேரும் மொட்டை மாடிக்கு சாப்பிடப் போனோம்.
தோழியின் கணவரும், என் கணவரும் கொஞ்சமா குடிச்சிருந்தாங்க. நல்லா பேசிட்டு இருந்த தோழியின் கணவர், `ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு'னு சொல்லிட்டு, கொஞ்ச நேரத்துல நான் காலேஜ் டேஸ்ல அவனுக்குக் கட்டின ஃபிரெண்ட்ஷிப் பேண்டை எடுத்துட்டு வந்து என்கிட்ட காட்டி, `எவ்ளோ பத்திரமா வெச்சிருக்கேன் பாரு'னு சொன்னான். குடியில அவன் அடுத்து எதுவும் உளற ஆரம்பிச்சுடக் கூடாதேனு எனக்குக் கொஞ்சம் அடிவயிற்றைக் கலக்க ஆரம்பிச்சிடுச்சு. ஆனா, நான் எதிர்பார்க்காத இன்னொரு விஷயம் நடந்துடுச்சு.
அவன் ஃபிரெண்ட்ஷிப் பேண்டை எடுத்துட்டு வந்து என்கிட்ட கொடுத்ததைப் பார்த்த என் தோழி, `அப்போ... அவ உன் மனசுல இன்னும் அப்படியேதான் இருக்கா இல்ல?'னு தன் கணவர்கிட்ட சண்டைபோட ஆரம்பிச்சுட்டா.
`அப்படியெல்லாம் இல்ல'னு அவன் சொல்ல, `இல்ல... நானும் வந்ததுல இருந்து பார்த்துட்டேதான் இருக்கேன் அவளை நீ எப்படியெல்லாம் கவனிக்கிற, அவகிட்ட நீ எப்படியெல்லாம் பேசுற...'னு சொல்லி அவ விடாமல் குரல் உயர்த்த, அவனும் குடியில திரும்பிப் பேச, என் உயிரே உறைஞ்சுபோச்சு. இன்னொரு பக்கம் அவங்க சண்டை வளர்ந்துட்டே இருந்துச்சு.
என் கணவருக்கு ஆரம்பத்துல புரியலைன்னாலும், அவங்க சண்டை போட்டுக்கிட்ட அடுத்தடுத்த வார்த்தைகள்ல அவருக்குப் பிரச்னை என்னனு புரியாம இல்ல. என்னைத் திட்டிட்டு, `உடனே இங்கயிருந்து கிளம்புவோம்'னு சொல்லிட்டு கூட்டிட்டு வந்துட்டார். டூரையும் அத்தோடு முடிச்சுட்டு வீடு திரும்பிட்டோம்.
என் கணவர், `நான் ஏன் உன் காலேஜ் லைஃப் லவ் பத்தி என்கிட்ட சொல்லலனு கேட்க மாட்டேன். அதைச் சொல்லியே ஆகணும்னு கட்டாயமில்ல. ஆனா, அவங்க வீட்டுக்கு இன்வைட் பண்ணினப்போ, நீ அவாய்டு பண்ணியிருக்கலாம்ல? நீ எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கிற நல்ல ஃபிரெண்டாதானே நான் உனக்கு இருந்திருக்கேன்? அப்போ அவங்க வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடியாச்சும் நீ இதையெல்லாம் என்கிட்ட சொல்லியிருக்கலாம்ல? அந்த இடத்துல எனக்கு எவ்வளவு அவமானமா இருந்திருக்கும்னு நினைச்சுப் பாரு...'னு என்னை திட்டிட்டு, அதுக்கு அப்புறம் என்கிட்ட ஒரு வார்த்தை பேசல. ஒரு மாசமாச்சு.
இப்பவும் என் மேல என் கணவருக்கு சந்தேகம் இல்லைனு நான் நம்புறேன். ஆனா, காயப்பட்டிருக்குற அவரோட மனசை எப்படி சரிபண்றதுனு எனக்குத் தெரியல. இன்னும் ஒரு மாசம்தான் அவருக்கு லீவ். அப்புறம் வெளிநாட்டுக்குக் கிளம்பிடுவார். அவரோட ஹாலிடேஸ் சந்தோஷம், நிம்மதினு எல்லாத்தையும் நான் சிதைச்சுட்டேனேனு நினைச்சு நினைச்சு நான் தினமும் அழுதிட்டிருக்கேன். கொஞ்சம் கொஞ்சமா அவர் கோபம் தணிஞ்சு பழைய மாதிரி என்கிட்ட பேசுவாரா அல்லது இது ஆறாத ரணமா அவர் மனசுல பதிஞ்சுபோயிடுமானு பயமா இருக்கு.
இதுக்கு இடையில, எங்களை வீட்டுக்கு வரச் சொல்லி எங்க வாழ்க்கையில தேவையில்லாத விரிசலை ஏற்படுத்தின என் தோழிகிட்ட இருந்து, `ஸாரி'னு ஒரு மெசேஜ்கூட வரல. அவ எவ்ளோ பொசசிவ்னெஸ்காரினு கல்லூரி நாள்கள்லேயே எனக்குத் தெரியும்னாலும், இன்னும் அவ அப்படியேதான் இருப்பானு நான் நினைக்கல. அப்புறம் ஏன் அவ எனக்கு போன் பண்ணி வீட்டுக்குக் கூப்பிடணும்னு கோபமா வருது.
அவளோட கணவர் மறுநாள் காலை, `இதெல்லாம் எதிர்பார்க்காம நடந்துடுச்சு... ரியலி ஸாரி'னு மெசேஜ் அனுப்ப, அதோடு என் சோஷியல் மீடியா பக்கங்களில் அவரை நான் பிளாக் பண்ணிட்டேன். அவங்க ரெண்டு பேரும் எப்பவும்போல சண்டைபோட்டுக்கிட்டோ, எப்பவும்போல ஜாலியாவோதான் இருப்பாங்க; இப்பவும். ஆனா, இவங்களால என் வாழ்க்கையில நடந்த விபத்தை சரிசெய்ய வழியில்லாம நான்தான் அழுது கரைஞ்சிட்டு இருக்கேன்.
கணவரின் அன்பை பழைய மாதிரி பெற வழி என்ன?
வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.
source https://www.vikatan.com/lifestyle/women/a-woman-shares-her-family-issue-caused-by-her-college-besties-penn-diary
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக