சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியைச் சேர்ந்தவர்கள் வினோத் கண்ணா மற்றும் மைனர் மணி என்ற அருள்நாதன். நெருங்கிய நண்பர்களான இருவரின் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இருவரும் கடந்த ஜனவரி-9ம் தேதி இரவு மானாமதுரை கோர்ட் எதிரே உள்ள கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அங்கு 2 பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வினோத் கண்ணா, அருள்நாதன் ஆகிய இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.
ஆபத்தான நிலையில் இருவரும் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் அருள்நாதன் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக 10 நபர்கள் மீது வழக்குப்பதியப்பட்டு காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் சிறையில் இருந்த தங்கமணி என்பவரின் மகன் அக்னிராஜ், ஜாமீனில் வெளிவந்து கடந்த சில நாட்களாக மானாமதுரை காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.
வழக்கம் போல நேற்று மானாமதுரை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு பைக்கில் திரும்பி வரும்போது, காவல் நிலையம் அருகேயே மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்றது. தேர்தல் சமயத்தில் நடந்த கொலைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி ராஜராஜன் சம்பவ இடத்தை பார்வையிட்டார். போலீஸார் சடலத்தை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற் கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
இது குறித்து காவல்துறையினர் சிலர் நம்மிடம், ``அக்னிராஜின் சொந்த ஊர் ஆவாரங்காடு. மானாமதுரை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததாக சொல்லப்படுகிறது. சட்டக் கல்லூரியில் படிப்பதால் படிப்பு கெடக்கூடாது என்று ஜாமீனில் வெளிவந்துள்ளான். இதனை தெரிந்துகொண்ட மற்றொரு கும்பல் அவனை கொலை செய்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக தர்மர், இருளப்பன், விக்னேஷ்வரன், சக்தி உள்ளிட்டோர் சரண் அடைந்துள்ளனர் விசாரணை நடைபெறுகிறது” என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/man-murdered-by-a-gang-who-came-in-bail
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக