Ad

வெள்ளி, 5 மார்ச், 2021

பெண்களுக்குக் கிடைப்பது நீதியா, கலாசார வழிகாட்டலா?! `வைரல்' வழக்குகள் சொல்லும் செய்தி என்ன?

உரிமைக்காக, நீதிக்காகப் போராடுபவர்களை அரசு இயந்திரம் தன் இரும்புக் கரங்களினால் சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் பல முறை ஒடுக்கியிருக்கிறது. அதிகார வர்க்கத்திடமிருந்து கிடைக்கப்பெறும் நீதி, முழுமையானதாக இருந்ததில்லை என்பதையே வரலாறு பலமுறை நமக்குச் சுட்டிக் காட்டியிருக்கிறது. இத்தகைய அநீதிகள் நிகழும்போது எல்லாம் அதை மையமாக வைத்து நீதி அமைப்பையும் காவல்துறையையும் கேள்வி கேட்கும் பல படங்கள் தமிழ் சினிமாவிலேயே வந்திருக்கின்றன.

ஒடுக்கப்பட்டவர்களுக்கான நீதியை வழங்கும் சம்பவங்கள் நிஜத்தில் குறைவு, சினிமாவில் அதிகம் என்பதுவே இங்கே நிதர்சனம். இங்கே 'ஒடுக்குமுறை' சமூகம் சார்ந்தது என்பதைத் தாண்டி, பாலினம் சார்ந்ததாகவும் நீள்வது வேதனையானது. ஆம், இங்கே பெண் என்பவளுக்கான நீதி, காலங்காலமாக ஆண் சமூகம் அவளுக்குப் பார்த்துச் சொல்லும் கருத்தாகவே படுகிறது. அதற்கு ஆண் பயன்படுத்தும் ஆயுதமே கலாசாரம் என்ற பெயரில் விதிக்கப்படும் பாலின சமநிலையற்ற கட்டுப்பாடுகள்.
ஆண் - பெண்

கலாசாரம் என்பது அந்தந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்பட்ட ஒன்று. இந்தக் கலாசாரக் கோட்பாடுகளைக் காலத்துக்கேற்ப மாறும் ஒன்றாகத்தான் நாம் பார்க்கவேண்டும், மாற்றவும் வேண்டும்! ஆனால், அதை இப்படி ஒரு பரந்த நோக்குடன் பார்க்காமல், ஒரு தேக்க நிலையில் என்றுமே மாறாத ஓர் உருவகமாக அணுகும் மனப்பான்மையே இன்று பல சிக்கல்களைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

சமூகப் பிரச்னைகள் தொடங்கி, தனிப்பட்ட குடும்பப் பிரச்னைகள் வரை இன்று நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெறுகின்றன. குற்றம் நிரூபிக்கப்பட்டால், சட்டப் புத்தகத்தைத் தூசு தட்டி புரட்டி இங்கே நீதி நிலைநாட்டப்படுகிறது. இந்தப் பிரச்னைக்கு இதுவே தீர்வு என்று கூறி இங்கே சமூக சமநிலை என்ற ஒன்று நிறுவப்படுகிறது. ஆனால், இங்கே எந்த சிஸ்டமும் நூறு சதவிகிதம் சரியானதும் அல்ல, ஏற்புடையதும் அல்ல. மனிதன் எனும் சமூக விலங்கு, உடல் ரீதியாகப் பரிணாம வளர்ச்சியடைவது என்பது இன்று இல்லாமல் இருக்கலாம். ஆனால், அறிவிலும், கொண்டுள்ள கொள்கைகளிலும் சித்தாந்தங்களிலும் அவன் தினமுமே பரிணாம வளர்ச்சி அடைகிறான், பண்படுகிறான். அது ஒரு சமூக மாற்றமாகப் பின்னாளில் மாறவேண்டும்.

இந்தக் குற்றத்துக்கு இந்தத் தண்டனை, இதற்குத் தண்டனை கிடையாது, ஏன், இது குற்றமே கிடையாது என்பன போன்ற பல தீர்ப்புகளை/வாதங்களை நாம் கேட்டிருக்கிறோம். சில தீர்ப்புகள்/வாதங்கள் தர்க்க ரீதியாகவும், நம்முடைய அரசியல் புரிதல் ரீதியாகவும் ஏற்புடையதாக இல்லாமல் இருந்திருக்கின்றன. இதைக் கண்டறிந்து களைவது, தவறென்பதைத் திருத்துவது காலத்தின் கட்டாயம். அதைத்தான் விவாதமாகிப்போகும் சில விசித்திர வழக்குகள் இன்று நமக்கு உணர்த்துகின்றன. அப்படி இரண்டு வழக்குகள் இன்று சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி இருக்கின்றன.

நீதிபதி எஸ். ஏ. பாப்டே

வழக்கு ஒன்று:

கடந்த திங்களன்று, உச்சநீதிமன்ற நீதிபதியான எஸ். ஏ. பாப்டே எழுப்பிய இந்தக் கேள்வி பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. குற்றம் சாட்டிய பெண்ணும், குற்றம் சாட்டப்பட்ட ஆணும் முன்னர் கோயிலில் திருமணம் செய்துகொண்டு இணைந்து இருந்தனர். அதன் பின்னர் அந்தக் கணவன் அது திருமணமே அல்ல என ஏமாற்றியுள்ளார்... என இந்த வழக்கின் பின்புலம் நீள்கிறது. இந்த வழக்கையும் அதன் பின்கதையையும் தவிர்த்துவிட்டு இது தொடர்பாக நீதிபதி பாப்டே கேட்டவற்றை, பொதுவான கேள்விகளாக அணுகினாலே அதில் ஆயிரம் சிக்கல்கள் எட்டிப் பார்க்கின்றன.

இங்கே பாதிப்பைச் சந்தித்த பெண், சட்டத்தின் பார்வையில் அந்த குற்றம் சாட்டப்பட்ட ஆணின் மனைவி என்றே பார்த்தாலும், அந்தப் பெண் கொடூரமாக நடத்தப்பட்டிருக்கிறார். கணவரின் கொடுமையால் பலமுறை உடல்ரீதியாகப் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தன் அந்தரங்கமான இடங்களிலும் காயம்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். அதேபோல், கடுமையாகத்தாக்கி அந்தப் பெண்ணின் காலையும் உடைத்துள்ளார் அந்தக் கணவன்.

Domestic Violence

"இது ஒருவரை வலிந்து தாக்குதல் (assault) மற்றும் குடும்ப வன்முறையின் (Domestic Violence) கீழ்தானே வரவேண்டும்?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் நீதிபதி பாப்டே.

இங்கே அவளுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையானது அதற்குரிய அழுத்தத்துடன் அணுகப்படவில்லை என்றே இன்று பலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

இதற்குச் சான்றாக, "திருமணப் பந்தத்துக்குள் ஒரு கணவன் மனைவிக்கிடையே நிகழும் தனிப்பட்ட தாம்பத்ய உறவு தொடர்பான அத்துமீறல்களை பாலியல் கொடுமை என்று சொல்ல முடியுமா?" என்று கூடுதல் கேள்வி எழுப்பியுள்ளார் நீதிபதி பாப்டே. மேலும், "திருமணம் செய்து ஏமாற்றுவது தவறுதான். அப்படி ஏமாற்றுவது தண்டனைக்குரிய குற்றமே! ஆனால், கணவன் - மனைவி இடையேயான தனிப்பட்ட தாம்பத்ய ரீதியிலான சிக்கல்களை பாலியல் வன்கொடுமை என அடையாளப்படுத்துவது இந்தப் பிரச்னையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று" என்றும் நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார்.

இந்திய சட்டப்படி, கணவன் மனைவிக்கிடையே நடக்கும் 'Marital Rape' எனப்படுவது குற்றமில்லை. ஆம், நம் சட்டப்படி, 15 வயதுக்குட்பட்ட மனைவியை (!) கட்டாய உறவுக்கு அழைப்பதுதான் இந்திய தண்டனைச் சட்டம் செக்ஷன் 375-படி தவறானது. 'Marital Rape'-ஆல் பாதிக்கப்பட்ட மனைவியர், Protection of Women from Domestic Violence Act 2005 (PWDVA) என்பதன்படிதான் நீதியை இங்கே தேட வேண்டும். இதைத்தான் நீதி வழங்குதலிலும் ஆணாதிக்கம் என்று நமக்குக் கோடிட்டுக் காட்டுகிறது இந்த வழக்குத் தொடர்பான விவாதங்கள்.

வழக்கு இரண்டு:

Abuse

அவர் ஒரு மாநில அரசு ஊழியர். தன் தூரத்து உறவான ஒரு பெண் மைனராக இருந்தபோது அவரை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்துள்ளார். 2014-15 வருடத்தில், அந்தப் பெண்ணுக்கு 16 வயது இருக்கும்போது, வீட்டின் பின்புற கதவு வழியாக நுழைந்து அந்தப் பெண்ணிடம் அத்துமீறி இருக்கிறார். இதை வெளியே கூறினால் ஆசிட் அடித்துவிடுவதாக மிரட்டியிருக்கிறார். இது 10 - 12 முறை நிகழ்ந்திருக்கிறது. இதனால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற அந்தச் சிறுமியின் மூலம் அவளின் தாய்க்கு உண்மைத் தெரிய வந்திருக்கிறது.

போலீஸாரிடம் புகார் அளிக்கச் சென்றவர்களை அந்தக் குற்றம் சாட்டப்பட்டவரின் தாய் தடுத்து நிறுத்தி, பெண்ணுக்கு 18 வயதானதும் தன் மகனுக்கே திருமணம் செய்து வைப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். ஆனால், 18 வயதை அந்தப் பெண் அடைந்தபோது, திருமணத்துக்கு அந்தத் தாய் மறுத்துள்ளார். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரின் தாயாரும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். குற்றம் நடந்தபோது அந்தப் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்பதால், போக்சோ சட்டத்தின் கீழ் இந்த வழக்குப் பதியப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாகக் கடந்த ஆண்டு ஜனவரியில் குற்றம்சாட்டப்பட்ட அந்த ஆணுக்கு முன்ஜாமீன் வழங்கியிருக்கிறது விசாரணை நீதிமன்றம். இதை எதிர்த்து அந்தப் பெண் மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளையில் மேல்முறையீடு செய்ய, 'ஜாமீன் வழங்கியது தவறு' என்று சொல்லி முன்ஜாமீன் உத்தரவைத் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். இதை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கடந்த மார்ச் 1-ம் தேதி, இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

குழந்தைகள் வன்கொடுமை

அப்போது, "பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்கிறீர்களா?'' என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், "திருமணம் செய்துகொள்ள விரும்பினால், ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய முடியும். இல்லையென்றால் சிறைக்குச் செல்ல நேரிடும்" என்று எச்சரித்துள்ளனர். அதே சமயம், "நாங்கள் இது தொடர்பாகக் கட்டாயப்படுத்தவில்லை, விருப்பத்தைத்தான் கேட்கிறோம். ஏனென்றால், பின்னர் நாங்கள் ஏதோ உங்களைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லிக் கட்டாயப்படுத்தியதாகச் சொல்லிவிடுவீர்கள்" என்றும் விளக்கம் அளித்துள்ளது நீதிபதிகள் அமர்வு.

இதிலும் அந்த வழக்கைக் கடந்து, பாலியல் வன்கொடுமை செய்தவரிடமே அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறீர்களா என நீதிபதிகள் கேட்டது விவாதப்பொருளாகி இருக்கிறது. பிரபலங்கள் தொடங்கி நெட்டிசன்கள் வரை பலரும் நீதிபதிகளின் இந்தக் கேள்வியை விமர்சித்து வருகின்றனர். இது அந்தக் கால கட்டப் பஞ்சாயத்துகள்போல உள்ளதாகவும், ஒரு ஜனநாயக நாட்டின் உச்ச நீதிமன்றத்துக்கு இது ஏற்புடையதல்ல என்றும் சாடியுள்ளனர்.

இங்கே நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளிலுள்ள சிக்கல் என்பது இந்த இரண்டு வழக்கையும் தாண்டி நீளும் ஒன்றாகவே தெரிகிறது. இந்த இரண்டு வழக்குகளிலும் தீர்ப்புகள் இன்னும் வரவில்லை. விவாதத்தின்போது நீதிபதி பாப்டே எழுப்பிய இந்தக் கேள்விகளே இங்கே விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. இதை ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாகவே நாம் பார்க்க நேரிடுகிறது. பல நூற்றாண்டுகளாகப் பெண்களை அடிமைப்படுத்திவைக்க, அவர்களை ஆண்களுக்கு நிகராக நிற்கவிடாமல் தடுக்க கையாளப்பட்டவை இரண்டே இரண்டு யுக்திகள்தான்.

ஒன்று, பெண் என்பவள் உடல்ரீதியாக பிரச்னைகளைச் சந்திப்பவள், அதனால் அவள் என்றுமே ஆணுக்கு அடுத்துத்தான் என்ற மனப்பான்மை. மற்றொன்று பெண் என்பவள் புனிதமானவள், அவளின் கற்பு என்ற உருவகமும், அவளின் உடலும் என்றும் காக்கப்படவேண்டும். அவளின் கண்ணியம், அந்தக் குடும்பத்தின் கௌரவம் அவளின் அந்தரங்க உறுப்பில் ஒளிந்திருக்கிறது என்ற மனப்பான்மை. இந்த இரண்டுமே இங்கே ஒதுக்கித் தள்ளவேண்டியவையே!
ஆணாதிக்கம் | Woman Abuse
சரி, ஆணாதிக்கம் என்று எதைச் சொல்கிறீர்கள்? ஒரு பெண் நீதிபதி அங்கே அமர்ந்திருந்தால் இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்டிருக்காது என்று சொல்லிவிட முடியுமா? - இப்படியான கேள்வி எழலாம். நிச்சயம் அதற்கான வாய்ப்புகளும் இங்கே உண்டு. ஏனென்றால், இங்கே 'ஆணாதிக்கம்' என்பது ஏதோ ஆண்களின் சொத்து மட்டுமல்ல. அது பிற்போக்குத் தனமாக யோசிக்கும் பெண்களின் வழியாகவும் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

Also Read: அவள் சினிமா: ரியல் சிங்கப்பெண்!

ஆனால், இங்கே கவனிக்க வேண்டியது, ஆணாதிக்கக் கருத்துகளைப் பெண்களே முன்வைத்தாலும் அதற்குக் காரணம் இந்த ஆண் சமுதாயமே! பல நூறாண்டுகளாகப் பெண் என்பவளை அடிமைப்படுத்தி, திருமணம் என்பதை ஒரு நிறுவனமாக்கி, அதில் ஆணுக்கு அதிக பலம் கொடுத்த கலாசாரம் இன்று மாற்றத்தை அடையவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு வருகிறது. 'தாய்வழிச்சமூகம்' என்று பெயருக்கு மட்டும் சொல்லிவிட்டு, இன்று முழுக்க ஆண்களின் உலகமாகச் சமுதாயம் இருப்பதற்கான பலமான சான்றுகள்தான் அந்த நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள். கற்பு என்ற உருவகம், ஒரு பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இல்லை என்பதைத் தாண்டி, கற்பு என்பதே ஒரு பெண்ணை சிறைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட கோட்பாடு என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் உணர்ந்துவிட்டனர். இந்த வழக்குகள் குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த விவாதங்களே அதற்கான சாட்சியங்கள்.

நீதிமன்றம்

ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய அவளை பாலியல் வன்கொடுமை செய்தால் போதுமானது என்பதும், குற்றவாளியிடமும் பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் ஒரு செட்டில்மென்டைப் போலப் பேசி, நீதியை நிலைநாட்டுகிறேன் என்ற பெயரில், கலாசாரத்தை மட்டுமே தூக்கிப்பிடிப்பதும் ஆபத்தான முன்னுதாரணங்கள். இப்படிப்பட்ட மனப்பான்மையும், பழங்கால சிந்தனையை அடிப்படையாக வைத்து எழுப்பப்படும் கேள்விகளும் பெண் என்ற இனத்துக்கே நாம் செய்யும் துரோகம்!

"என் மனைவிக்கான சுதந்திரத்தை நான் வழங்கிவிட்டேன்" என்று பெருமையாகக் கூறும் கணவன்மார்களே, "அவர்களின் சுதந்திரத்தை நாம் என்ன வழங்குவது? அது அவர்களிடம்தானே முன்பிருந்தே இருந்திருக்கவேண்டும்?" என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும். பெண்களும் ஆணாதிக்கக் கூறுகளைப் பிரதிபலிக்கும் கலாசார விஷயங்களைக் குறைந்தபட்சம் மற்ற பெண்களின்மீது திணிக்காமலேனும் இருத்தல் அவசியம். எத்தனை யோசித்தாலும், மீண்டும் மீண்டும் இந்த மூன்று வார்த்தைகள்தான் மனதுக்குள் ஓடுகின்றன.

"இது காலத்தின் கட்டாயம்!"



source https://www.vikatan.com/social-affairs/women/two-viral-case-discussions-and-its-message-on-justice-for-women

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக