மாசி மாதத்தின் மகத்துவங்களில் ஒன்று மகாசிவராத்திரி. பிரம்மாவும் மஹாவிஷ்ணுவும், சிவபெருமானின் முடி - அடி தேடிய நிகழ்வு நிகழ்ந்தது ஒரு மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி தினம் என்கிறது புராணம். அந்த நாளே மகாசிவராத்திரி எனக் கொண்டாடப்படுகிறது.
பொதுவாக, ராத்திரி என்பது, எந்தவொரு வேலையும் செய்யாமல் இருள் சூழ்ந்திருக்க உயிர்கள் அனைத்தும் உறங்கும் காலம். பகலெல்லாம் வேலை செய்த நாம், இரவில் தூங்குகிறோம். அவ்வாறு உறங்கி எழுந்தால்தான், உடலுக்கு ஆரோக்கியமும் சுறுசுறுப்பும் ஏற்படுகின்றன. உறக்கம் இல்லாவிட்டால், உடலும் புத்தியும் சுறுசுறுப்பாக வேலை செய்வதில்லை.
பகலெல்லாம் அலைந்து திரிந்த நம் உடலும் இந்திரியங்களும் சக்தியை இழந்து ஓய்வு பெறுகின்றன. அப்போது நம் இதயத்தில் உள்ள ஈஸ்வரன், நம் ஜீவனை அணைத்துத் தன்னருகில் அமா்த்துகிறாா். அப்போது கண்கள் காண்பதில்லை; காதுகள் கேட்பதில்லை; புத்தி எதையும் நினைப்பதில்லை.
தூங்கி எழுந்ததும், `சுகமாகத் தூங்கினேன்' என்கிறோம். அப்போது, நாம் இழந்த சக்தியை பகவான் நமக்குத் தந்து அனுப்புகிறாா். ஒருவகையில் சா்வேஸ்வரன் நமக்குத் தந்த வரமே, தூக்கமாகும். அதேநேரம் அளவு கடந்தும் தூங்கக்கூடாது.
அதேபோல, இந்த மண்ணுலகும் விண்ணுலகும் ஒரு தருணத்தில், வேலையை விட்டு இறைவனிடம் ஒடுங்குகின்றன. இந்த நிகழ்வே ‘மகாப் பிரளயம்’ எனப்படுகிறது. நாம் தினந்தோறும் தூங்குவது, ‘தைநந்தினப் பிரளயம்’ எனப்படும்.
நாம் பகலெல்லாம் வேலை செய்து களைப்படைவதைப்போல, ஸ்திதி (காத்தல்) காலத்தில் உலகெல்லாம் வேலை செய்து களைப்படைகின்றன.
அந்தப் பிரபஞ்சத்துக்கு, இழந்த சக்தியை அளிப்பதற்காக சிவன், தனக்குள் அதை லயப்படுத்துகிறாா். அவ்வாறு உலகம் சிவனிடம் ஒடுங்கிய நாளே ‘சிவ ராத்திரி.’
அன்று சிவனைத்தவிர, வேறெதுவும் இல்லை. ஆனால் சிவனை விட்டு என்றுமே எப்போதுமே பிரியாதவளான உமையவள், அன்றைய இரவு நேரத்தில், நான்கு ஜாமங்களிலும் சிவனாரை ஆகம முறைப்படி பூஜித்தாள்.
பொழுது விடிந்தது. சிவனாரை வணங்கிய அம்பிகை, ‘‘ஸ்வாமி! தங்களை நான் பூஜித்த இந்த இரவு, சிவராத்திரி என உங்கள் பெயரால் அழைக்கப்பட வேண்டும். அத்துடன் சிவராத்திரி அன்று சூரிய அஸ்தமனம் முதல், மறு நாள் காலை சூரிய உதயம்வரை தேவர்கள் உட்பட எல்லோரும் உங்களை பூஜிக்க வேண்டும். அப்படி பூஜிப்பவர்களுக்கு சர்வ மங்கலங்களுடன் முடிவில் முக்தியையும் தாங்கள் அருள வேண்டும்!’’ என வேண்டி வரம் பெற்றாள்.
அவ்வாறு அம்பிகை பூஜை செய்த மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி தினமே மகா சிவராத்திரி என அழைக்கப்படுகிறது.
பிரமாண்ட சிவராத்திரி தரிசனம்
சிவராத்திரியின் வகைகள்
சிவராத்திரி ஐந்து வகையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவை மாக சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி.
மாக சிவராத்திரி: மாக சிவராத்திரியே ‘மகா சிவராத்திரி’ என அழைக்கப்படுகிறது. மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி நாளே மகா சிவராத்திரியாகும். இந்த சிவராத்திரிக்கு ‘வருஷ சிவ ராத்திரி’ என்ற பெயரும் உண்டு.
யோக சிவராத்திரி: யோக சிவ ராத்திரியில் நான்கு வகை உண்டு.
திங்கள்கிழமையன்று சூரிய உதயம் முதல் இரவு முழுவதும். அதாவது பகல் - இரவு சேர்ந்த அறுபது நாழிகையும் (24 மணி நேரம்) அமாவாசை இருந்தால் அன்று யோக சிவராத்திரி.
திங்களன்று சூரிய அஸ்தமனம் முதல் அன்று இரவு 4 ஜாமமும் (12 மணி நேரம்) தேய்பிறை சதுர்த்தசி இருந்தாலும் அதுவும் யோக சிவராத்திரி.
திங்கள்கிழமையன்று இரவின் நான்காம் ஜாமத்தில் (இரவு 3 மணியிலிருந்து 6 மணி வரை உள்ள நேரத்தில்), அமாவாசை அரை நாழிகை (12 நிமிடங்கள்) இருந்தாலும் அன்று யோக சிவராத்திரிதான்.
திங்கள்கிழமையன்று இரவின் நான்காம் ஜாமத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதி அரை நாழிகை (12 நிமிடங்கள்) இருந்தால் அன்றும் யோக சிவராத்திரி.
இந்த நான்கு ‘யோக’ சிவராத்திரிகளில், ஏதாவது ஒரு யோக சிவராத்திரி தினத்தில் விரதம் இருந்தாலும், அதற்கு ‘மூன்று கோடி சிவராத்திரி’ விரதம் கடைப்பிடித்த பலன் கிடைக்கும்.
மார்கழி மாத வளர்பிறை சதுர்த்தசி, திருவாதிரை நட்சத்திரத்துடன் வந்தாலும், மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி, செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் வந்தாலும், அந்தச் சிவராத்திரியும் மூன்று கோடி சிவராத்திரிக்குச் சமம் என்பார்கள்.
நித்திய சிவராத்திரி: வருடத்தின் பன்னிரண்டு மாதங்களிலும் வரும் தேய்பிறை-வளர்பிறைகளின் சதுர்த்தசி திதி இடம்பெறும் 24 நாள்களும் நித்திய சிவராத்திரி.
பட்ச சிவராத்திரி: தை மாதத் தேய்பிறை பிரதமை அன்று தொடங்கி, பதின்மூன்று நாள்கள் தினந்தோறும் முறைப்படி ஒரு வேளை உணவு உண்டு,
14-ம் நாளான சதுர்த்தசி அன்று முறைப்படி விரதம் இருப்பது பட்ச சிவராத்திரி எனப்படும்.
மாத சிவராத்திரி: பெரும்பாலான சிவராத்திரிகள், அமாவாசை அல்லது சதுர்த்தசியை அனுசரித்து வரும். ஆனால் இந்த `மாத சிவராத்திரி’ என்பது, மாதத்தின் மற்ற திதி நாள்களிலும் வரும்.
மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி, பங்குனி மாத வளர்பிறை திருதியை, சித்திரை மாதத் தேய்பிறை அஷ்டமி, வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி, ஆனி மாத வளர்பிறை சதுர்த்தசி, ஆடி மாதத் தேய்பிறைப் பஞ்சமி, ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி, புரட்டாசி மாத வளர்பிறை திரயோதசி, ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி, கார்த்திகை மாத வளர்பிறை சப்தமி, தேய்பிறை அஷ்டமி, மார்கழி மாத வளர்பிறை சதுர்த்தசி - தேய்பிறை சதுர்த்தசி, தை மாத வளர்பிறை திருதியை ஆகிய இந்தப் பதினான்கு நாள்களும் மாத சிவராத்திரி எனப்படும்.
மகாபெரியவரின் மகா சிவராத்திரி குறித்த விளக்கம்!
"உருவும் பெயரும் இல்லாதவனான ஈசன், பக்தா்களை உய்விக்கும் பொருட்டு கருணை மிகுதியால் பல நாமங்களுடனும் ரூபங்களுடனும் காட்சி அளிக்கிறாா்.
குழந்தைகள் பாலுக்குத் தாயினிடம் அழுவது போல், அஞ்ஞானத்திலும் காம குரோதமாகிய சுழல்களிலும் சிக்கியுள்ள ஜீவாத்மாக்கள் ஞானப்பாலுக்காக, ஜகத்துக்கெல்லாம் தாயும் தந்தையுமான பரமேசுவரனிடம் அழ வேண்டும். பரமேசுவரன் நமக்கு உடல்வளா்ச்சிக்காக உணவு அளிப்பதுடன், நம் ஆசாபாசங்களைக் கொய்து ஞானப்பசியையும் தீா்த்துவைப்பாா். இவ்விதம் சமஸ்த ஜீவராசிகளுக்கும் அடைக்கலமாக இருக்கும் ஈசனுடைய திருநாளே மகாசிவராத்திரி.
உருவமற்ற முழுமுதற் கடவுள் பக்தா்களின் பிராா்த்தனைக்கு இணங்க, அரூபத்துக்கும் ஸ்வரூபத்துக்கும் இடையேயுள்ள ஜோதிா் லிங்கமாகக் காட்சியளித்தாா். அப்படி, அவர் லிங்கோத்பவராகத் திருவுருவம் எடுத்த நன்னாளே, இந்த மகாசிவராத்திரி.
மகாசிவராத்திரியும் குல தெய்வ வழிபாடும்
ஆதியும் அந்தமும் இல்லாத பராபரவஸ்து, ஜோதி ஸ்வரூபத்திலிருந்து லிங்கமாக வெளிவந்து, பின்னா் லாவண்ய ஸ்வரூபத்தை அடைந்த இந்தப் புனிதமான தினம் பிராா்த்தனைக்கும் தியானத்துக்கும் சிறந்த நாள்.
நம்மை போஷித்து முடிவில் நம்மை ஆட்கொள்ளும் அந்தக் கருணாமூா்த்தியின் நினைவாக, இந்நாள் முழுவதும் உபவாசம் இருந்து, நித்திரை இல்லாமல் நடுநிசியில் அவரை வழிபட வேண்டும். பிறப்பில்லாத பரமசிவன் பக்தா்களின் அன்புக்குச் செவி சாய்த்துப் பிறக்கும் அவ்வேளையில், அவரை நினைத்து அவருடைய திருநாமங்களை ஜபித்து, அவரது கருணைக்குப் பாத்திரமாக வேண்டும்.
சிந்தனா சக்தியையும் அறிவையும் மற்ற இந்திரிய கலாபங்களையும் அளித்த அவரை, மகா சிவராத்திரி தினத்தில் நினைத்து, அவரது அருளுக்குப் பாத்திரமாக வேண்டும்.
ஜீவனுக்குத் தனிச் சொரூபம் உண்டு என்ற மமகாரத்தை விட்டொழிக்க வேண்டும். ஆத்மா பரமசிவனுக்கு அா்ப்பணம் செய்ய வேண்டிய பொருள் என்று, தெளிந்த முடிவுடன் அவரை ஆராதித்து, அவரது அருள் விலாசத்தை அடைய வேண்டும்" என்று விளக்குவார் காஞ்சி மாமுனி மகா பெரியவர்.
source https://www.vikatan.com/spiritual/gods/the-glory-and-spiritual-benefits-of-maha-shivratri-celebrations
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக