Ad

சனி, 27 மார்ச், 2021

பாகுபலியாய் மிரட்டும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்... கோலியின் வியூகங்களால் வெற்றி கிடைக்குமா? #INDvENG

மீண்டும் ஓர் இறுதிப்போட்டிக்கான யுத்தத்தில் இன்று களமிறங்குகின்றன இந்தியா - இங்கிலாந்து அணிகள். ஒருநாள் தொடரை எளிதாக வென்றுவிடலாம் என்கிற இந்தியாவின் எண்ணத்தை அடித்துநொறுக்கிவிட்டது இங்கிலாந்து. முதல் ஒருநாள் போட்டியிலேயே இங்கிலாந்து பயம்காட்டி பின்னர் தங்களின் தவறுகளால் தோல்வியடைந்தது. ஆனால், இரண்டாவது போட்டியில் இந்திய அணிக்கு ஒரு சதவிகிதம்கூட வெற்றிவாய்ப்பைத் தந்துவிடக்கூடாது என பேர்ஸ்டோவும் - பென் ஸ்டோக்ஸும் ஆடிய ஆட்டம் தொடரை 1-1 என்ற சமநிலையில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. இன்றையப் போட்டியில் வெற்றிக்கான சாத்தியங்கள் யாருக்கு அதிகம் இருக்கிறது... கோலியின் வியூகங்கள் என்னவாக இருக்கும்?!

ஓப்பனிங் ஓட்டம் எடுக்குமா?!

இந்த இங்கிலாந்து பயணம் முழுவதும் ஓப்பனிங் - இந்தியாவைப் பொறுத்தவரை, மிகப்பெரிய குறைபாடு. தற்போது நடந்து முடிந்துள்ள இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டிகளில், இந்தியாவின் முதல் விக்கெட் விழுவதின் ஆவரேஜ் 20. அதுவே டி20 போட்டிகளில் 24.8, ஒருநாள் தொடரிலோ, அது 36.5 ஆக இருக்கிறது. இங்கிலாந்துக்கு இது, முறையே, 12.75, 26.2, 122.5. இதில் டெஸ்ட்டைத்தவிர மற்ற அனைத்திலும் இங்கிலாந்தின் கை ஓங்கியே இருக்கிறது. சரி அதனாலென்ன, கோப்பைகளை இந்தியாதானே வென்றது என்று கருதினால், அது மற்ற காரணிகள் கைகொடுத்ததால் சாத்தியமானது. இது ஒரு சரிவுக்கான சின்னத் தொடக்கம், சரி செய்யப்படாவிடின், ஓப்பனிங்கில் விழுந்த ஓட்டையால், கப்பல் மொத்தமும் மூழ்கிப் போகலாம். இந்தியாவுக்கு தற்போதைக்கு, ஓப்பனிங் ஓவர்களிலேயே, எதிரணிக்குத் தன் அதிரடியால், முடிந்தளவு சேதாரத்தை ஏற்படுத்தும் ஷேவாக் போன்ற பேட்ஸ்மேன்களே அவசரத் தேவையாக இருக்கிறார்கள்.

சரி ஓப்பனிங்தானே இந்த நிலைமையில் இருக்கிறது, அடுத்து வரும் வீரர்கள் அடித்து ரன் சேர்க்கிறார்களே என்று யோசித்தால், பவர்ப்ளே ஓவர்களின் நிலைமை இன்னும் பரிதாபம்! டி20-ல் இந்திய பேட்ஸ்மேன்கள் பவர்ப்ளேவில் சேர்த்திருந்த ரன்களின் சராசரி 40.2. இங்கிலாந்துக்கோ அது 52.8. நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில், முதல் பத்து ஓவர்களில், இந்தியா எடுத்துள்ள ரன்களின் சராசரி 40. இங்கிலாந்துக்கோ இது 74. இந்த எண்களும் எடுத்துச் சொல்வது, இங்கிலாந்தின் முன்வரிசை வீரர்கள், தங்கள் பேட்டுக்கு 'அதிரடி ஆட்டம்' எனும் ஸ்டிக்கரை ஒட்டியே களமிறங்குகிறார்கள் என்று. கடைசி டி20-ல் ஓப்பனராகக் களமிறங்கிய கோலியும், தான் ஓப்பனராகக் களமிறங்குவதற்கான காரணமாக, சூசகமாக ஓப்பனிங்கின் பலமின்மையைத்தான் குறிப்பிட்டிருந்தார்.

#INDvENG

அடுத்து என்ன?!

இந்திய ஓப்பனர்கள் அதிரடியாக ஆடாததன் காரணமாக, பின்வரிசை வீரர்களின் மீது ஏற்றப்படும் சுமை அதிகமாகிறது. அவர்கள் என்னதான் அதற்குப்பின் குட்டிக்கரணம் போட்டாலும், ஒரு ஓவருக்கு ஆறு பந்துகள், ஒரு பந்துக்கு அதிகபட்சமான ரன்கள் ஆறு என்பதில் மாற்றம் கொண்டுவர முடியாது. எனினும் ஃபினிஷர்களாக, இவர்கள் அதிரடி ஆட்டம் ஆடுவதால் மட்டுமே, இந்தியாவால் பெரிய ஸ்கோர்களை எட்ட முடிகிறது. முதல் போட்டியில், இந்தியா அடித்த 317 ரன்களில், 41 சதவிகிதம் ரன்கள் கடைசி 15 ஓவர்களில் வந்தவையே. கடந்த போட்டியில், இது 46 சதவிகிதமாக உச்சம் தொட்டது. இதை மகிழ்ச்சியாகக் கொண்டாடலாம் என்றாலும், ஒருவேளை, மிடில் ஓவர்களில், விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்து விட்டால், தற்காத்துக் கொள்ளும் மோடுக்குள் அணி, சுருங்க வேண்டிய கட்டாயம் வரும். எனவே ஓவர் ஒன்றிலிருந்து ஓப்பனர்களின் பேட் பேச வேண்டும், மௌனம் காக்காமல், ரன்ரேட் ராக்கெட் ஏற வேண்டும்.

விழுமா விக்கெட்டுகள்!

ஆஸ்திரேலியா தொடரின்போது, முக்கிய வீரர்களுக்குக் காயம் ஏற்பட ஏற்பட, புதுப்புது பௌலர்களை இறக்கி, அசத்திக் கொண்டே இருந்த இந்தியா, தன்னுடைய பென்ச் ஸ்ட்ரெங்க்த்தை நிரூபித்தது. ஆனால், ஆழமாகப் பார்த்தால், இதிலும் பிரச்னைகள் தென்படுகின்றன. 2020-க்குப்பின் நடந்துள்ள போட்டிகளில், முதல் பத்து ஓவர்களில் விழுந்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை, மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவுக்கு மிகக் குறைவாகிக் கொண்டே வருகிறது. போட்டியின் முதல் பந்திலேயே பேட்ஸ்மேனை எல்பிடபிள்யூ ஆக்கி அனுப்பும், ஜாகீர் கான் போன்ற வீரர்களைப் பார்த்துப்பழகிய ரசிகர்களுக்கு, இந்தியாவின் இந்த (ஏ)மாற்றம், தெளிவாகவே தெரிய ஆரம்பித்துள்ளது.

ஆஸ்திரேலியத் தொடரில், இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் நடந்ததைப்போல, பேட்ஸ்மேனைச் சுற்றி வளைத்து, ஃபீல்டிங் வியூகங்களாலும், பௌலிங் வேரியஷன்களாலும் குழப்பி, விக்கெட்டை விலையாகக் கொடுக்க வைக்கும் வேலையை இந்தியத்தரப்பு செய்யத் தவறுகிறது. விளைவு, எதிரணி ரன்களைக் குவித்து வலிமையான அடித்தளத்தை அமைத்து விடுகிறது.

உதிரிகள் நம் எதிரிகள்!

இந்திய பௌலிங்கில் உள்ள இன்னொரு குறைபாடு, கட்டுக்கோப்பான பௌலிங் இல்லாதது. இங்கிலாந்தின் இந்தச் சுற்றுப்பயணத்தில், இதுவரை நடந்து முடிந்துள்ள ஒயிட்பால் கிரிக்கெட் போட்டிகளில், இந்திய பௌலர்கள் கொடுத்துள்ள உதிரி ரன்கள் 82. ஆனால், இங்கிலாந்தின் பக்கமோ, அது வெறும் 49 தான். இதுவும் இந்தியா கவனம் செலுத்த வேண்டிய இன்னொரு டேஞ்சர் ஸோன்.

#INDvENG

ஆறாவது பௌலர் எங்கே?!

புனே போன்ற ஒரு ஃபிளாட் பிட்சில், அதுவும் அசைக்க முடியாத பலம்பொருந்திய இங்கிலாந்தின் பேட்டிங் லைன் அப்பை, வெறும் ஐந்து பௌலர்கள் சூத்திரத்தோடே கையாள்கிறது இந்தியா. இது தொடர்ந்து, இந்தியா பாதிப்பைச் சந்திக்கக் காரணமாக இருக்கிறது. சிறந்த பேட்ஸ்மேனாகவே இருந்தாலும், ஹர்திக் அணிக்குள் தவிர்க்க முடியாத வீரராக இருப்பதற்குக் காரணம், அவருடைய ஆல் ரவுண்டிங் ஸ்கில்தான். ஆனால், டி20-ல் நான்கு ஓவர்களை வீசிய ஹர்திக், ஒருநாள் போட்டிகளில் பந்துவீசவில்லை. இந்தியாவுக்கு இப்போது இன்ஸ்டன்ட் தேவை, ஆறு பௌலர் ஃபார்முலா.

ஸ்பின் சோதனைகள்!

நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில், இந்தியா, இங்கிலாந்தைச் சுருட்டியதே சுழலினால்தான். ஆனால், டி20-லும் ஒருநாள் தொடரிலும், அதற்கு மாறான விஷயமே நடந்து வருகிறது. சஹால் சரியில்லையென குல்தீப்பைக் கொண்டு வந்தார் கோலி. ஆனால், கேப்டன் எதிர்பார்த்ததை குல்தீப்பால் செய்ய முடியாமல்போக, ஒருநாள் தொடரில், இவரது எக்கானமி 8. மேலும், ஒரு விக்கெட்டைக் கூட அவரால் எடுக்க முடியவில்லை. இதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை. தொடர்ச்சியாக பல போட்டிகளில், 'அணிக்குள் இடம்... ஆனால் ப்ளேயிங் லெவனில் வாய்ப்பில்லை!' என்பது குல்தீப்பின் ஃபார்ம் போவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. கே எல் ராகுலும் இதே போன்றதொரு நிலையைக் கடந்துதான், மீண்டு வந்துள்ளார். குல்தீப்புக்கும் அப்படியொரு வாய்ப்புத் தேவையெனினும், இறுதிச் சுற்றில், அதற்கு நேரமில்லை என்பதால், குல்தீப்புக்கு பதிலாக மறுபடியும் சஹாலே தொடர்வார். எனினும், ஏன் அஷ்வினை பழையபடி லிமிடெட் ஓவர் ஃபார்மேட்டிலும் இறக்கிப்பார்க்கக் கூடாது என்ற கோரிக்கைகள், இப்பொழுது வலுப்பெற்றுள்ளன. இந்த ஆண்டு டி20-கான உலகக் கோப்பையை இந்தியாவிலேயே சந்திக்க இருக்கும் இந்தியா, தனக்கான சுழல்பந்து வீச்சாளர் யார் என்பதை இறுதியாக உறுதி செய்ய வேண்டும்.

ஜடேஜா ஜாலம் மிஸ்ஸிங்!

உலகின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராகக் கருதப்படும் ஜடேஜா, காயத்தினால் வெளியே இருப்பது இந்தியாவுக்கு விக்கெட் வீழ்த்துவதற்கான வாய்ப்பைக் குறைத்து விடுகிறது. "கேமியோ ஆட வேண்டுமா நானிருக்கிறேன், பார்ட்னர்ஷிப்களை உடைக்க வேண்டுமா நானிருக்கிறேன், குறைந்த ரன்களோடு டிஃபெண்ட் செய்ய வேண்டுமா நான் பார்த்துக் கொள்கிறேன்!" என இப்படி யாதுமாகி நின்ற ஜடேஜா இல்லாதது, இந்தியாவுக்கான பின்னடைவாகவே அமைகிறது . இந்தத் தொடரில் அவரது பங்கு இல்லாமல் போவது ஒருபக்கம் என்றால், அவருக்கு இணையான ஒரு பேக்அப் வீரரைக் கண்டறிவதுதான், இந்தியா முன் இப்போது வைக்கப்பட்டுள்ள சவால்‌.

#INDvENG

மாற்றங்கள் நிகழுமா?!

இங்கிலாந்தைப் பொறுத்தவரை, சாம் பில்லிங்ஸும் உட்டும் காயத்திலிருந்து மீண்டு வருவதைப் பொறுத்தே, மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அது கடைசி நொடியில் தெரிய வரும் செய்தியாகவே பெரும்பாலும் இருக்கும். இந்தியா தரப்பிலோ, குல்தீப்புக்கு பதிலாக, சஹாலோ அல்லது சுந்தரோ இறக்கப்படலாம்.

பழிதீர்ப்பாரா கோலி!

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் ஒரு பழைய கணக்கு மீதம் இருக்கிறது. 2011-ம் ஆண்டு சாம்பியன்ஸ் பேட்ஜ் குத்திக் கொண்டு இறுமாப்போடு சுற்றி வந்த இந்தியாவை, டெஸ்ட், டி20, ஒருநாள் தொடர் என மூன்றிலும் தோற்கடித்தது இங்கிலாந்து. அந்தக் கணக்கை நேர்செய்வது போல், சாம்பியன்ஸ் என்னும் பெருமையுடன் இருக்கும் இங்கிலாந்தை, இரண்டு ஃபார்மேட்டிலும் செய்ததைப் போல் வீழ்த்தி, ஒருநாள் தொடரையும் கைப்பற்றி, கோலி அண்ட் கோ பழிதீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தகவமைத்துக் கொள்வதே இங்கே தற்காத்துக் கொள்ளும். அதுவே தகுதிக்குரியதுமாகும். இந்தியா தனது தவறுகளைக் களைந்தெறிந்து வெற்றி பெற வேண்டுமென்ற முனைப்போடு மோதினால், நிச்சயமாய் வெல்லலாம். இறுதிச் சுற்றில் நாக் அவுட் ஆகப் போவது இந்தியாவா இங்கிலாந்தா என்பது இன்று இரவு தெரிந்து விடும்.



source https://sports.vikatan.com/cricket/india-vs-england-tour-final-odi-preview

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக