Ad

வெள்ளி, 26 மார்ச், 2021

சித்தன் பேர்ஸ்டோ - பென் ஸ்டோக்ஸின் சிக்ஸர் சவுக்கடிகள்... தளர்ந்து, துவண்ட கோலி அண்ட் கோ! #INDvENG

அதிரடி ஆட்டமே எங்கள் பிரதானம், அதுவே எங்கள் தாரகமந்திரம் என்னும் ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ள இங்கிலாந்து, அதைச் சரியாகப் பயன்படுத்தி இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றியையும் தன்வசமாக்கியுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் போல ஆரம்பித்த இந்திய இன்னிங்ஸ், நடுவில் ஒருநாள் கிரிக்கெட்டுக்குத்தாவி பின்னர் டி20 கிரிக்கெட்டாக டாப் கியரில் முடிந்தது. கேஎல் ராகுலின் சதம், கோலியின் அரைசதம் எல்லாமே பயமறியா பன்ட்டின் அதிவேக அரைசதத்தின் முன் காணாமல் போனது. ஆனால், இவை எல்லாவற்றையும் விழுங்கி ஏப்பம் விட்டது, இங்கிலாந்தின் டாப்ஆர்டர் பேட்ஸ்மென்களின் டாப்கிளாஸ் ஆட்டம். முடிவு 1/1 என சமநிலையை எட்டியுள்ளது தொடர்.

டாஸுக்கும் கோலிக்குமான ஏழாம் பொருத்தம், இப்போட்டியிலும் தொடர, பௌலிங்கைத் தேர்ந்தெடுத்தது இங்கிலாந்து. இங்கிலாந்தின் இந்தச் சுற்றுப்பயணத்தில், இங்கிலாந்து ஒன்பது முறை டாஸை வென்றிருக்க, இந்தியா இரண்டு முறை மட்டுமே வென்றிருக்கிறது. இங்கிலாந்தின் பக்கம் மார்கன், பில்லிங்ஸ், உட்டுக்கு பதிலாக, லிவிங்ஸ்டோன், மலான், டாப்லி சேர்க்கப்பட்டிருந்தனர். இந்தியாவோ, ஷ்ரேயாஸுக்கு பதிலாக பன்ட்டுடன் களமிறங்கியது.

உட்டுக்கு பதிலாக, இறக்கப்பட்டிருந்த டாப்லியின் பந்துகள் ஸ்விங்காக, அதனைச் சமாளிக்க மிகவும் திணறினர் இந்திய ஓப்பனர்கள். போன போட்டியில், சதத்தை சிறுநூலிழையில் தவறவிட்ட தவான், இந்த முறை சாதிப்பார் என்பதைப் பொய்யாக்கி, டாப்லியின் பந்தில் வெளியேற, ரோஹித்துக்கான அடுத்த வலையை விரித்தது இங்கிலாந்து‌‌.

மிட் விக்கெட்டில் ஃபீல்டரை நிறுத்தி, ரோஹித்தின் பேடைக்குறிவைத்தே பந்துகள் பறக்கும்தட்டாய் எறியப்பட, சாம் கரணின் பந்தில் ஃபிளிக் ஆட முயன்ற ரோஹித்தும் ஆட்டமிழந்து வெளியேறினார். பவர்ப்ளே ஓவர்களில், இரண்டு விக்கெட்டுகளை இழந்து, வெறும் 41 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது, இந்தியா. "ரோஹித்தின் இரட்டைச்சதம் லோடிங்!" என ரசிகர்கள் மிகப்பெரிய நம்பிக்கையை அவர்மீது சுமத்தியிருக்க, அதனை உதறிவிடைபெற்றார் ரோஹித்.

அடுத்ததாக, டிஃபென்சிவ் ஆட்டத்தைக் கையிலெடுக்க விரும்பிய இந்தியா, பன்ட்டுக்கு முன்னதாக ராகுலை இறக்கியது. ஒட்டுமொத்த பாரமும் கோலி - ராகுல் தோளில் விழுந்தது. இந்த இருவரும் அந்த பாரத்தை தங்கள் திறமையால் அடித்து தூளாக்கினர். கிட்டத்தட்ட 26 ஓவர்கள் அதாவது இந்திய இன்னிங்ஸின் சரிபாதி பந்துகளுக்கும் மேலேயே சந்தித்தனர் இவர்கள்.

ரன்ரேட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக ஏறுமுகம் காட்டச்செய்யும் ஒரு பார்ட்னர்ஷிப் அங்கே கட்டமைக்கப்பட்டது. முதல் பத்து ஓவரில், 4.2 ஆக இருந்த ரன்ரேட், இருபது ஓவர் முடிவில், 4.5 ஆனது, இறுதியில் முப்பது ஓவர் முடிவில், 4.7 என ஆனது. விக்கெட்டுகள் முக்கியமென்பதையும், சென்ற போட்டியில் இங்கிலாந்து சந்தித்த இரண்டாவது மோசமான பாதியைத் தாங்களும் சந்தித்துவிடக்கூடாது என்பதனாலும், கவனத்துடனே ஒவ்வொரு ஓவரையும் எதிர்கொண்டனர். ஸ்பின்னர்கள் பந்துவீச, ரன்ரேட் ஒரே சீராகச் செல்ல, அதிகமான பவுண்டரிகள் பறக்காமல் மிடில் ஓவர்களுக்கே உண்டான அத்தனை வரையறைகளோடும் தொடர்ந்து கொண்டிருந்தது போட்டி.

#INDvENG

கோலி 35 ரன்கள் இருந்தபோது, பட்லர் அவர் தந்த ஒரு கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டார். இதனைப் பயன்படுத்தி, அரைசதத்தை கோலி எட்ட, அதன்பின் ராகுலுடைய அரைசதமும் வந்து சேர்ந்தது. நன்றாக செட்டிலாகி விட்டனர், ரன்கள் இனி குவியத்தொடங்கும் என எதிர்பார்த்த தருணம், கோலியின் விக்கெட்டை ரஷித் வீழ்த்தினார். மீண்டும் ஒருமுறை சதமடிக்காமல், ரசிகர்களை ஏமாற்றிச் சென்றார் கோலி. பன்ட் உள்ளே வந்தார்.

சந்தித்த முதல் 14 பந்துகளில் வெறும் 11 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார் பன்ட். 38-வது ஓவரில், 188 ரன்கள் என்ற நிலையிலேயே இருந்த இந்தியா 300ஐ தொடுவதெல்லாம் நடக்காத காரியம் என்றே அனைவரும் நினைத்துக் கொண்டிருக்க, தான் சந்தித்த 15-வது பந்தை ஓவர் த டீப் மிட் விக்கெட்டில் சிக்ஸருக்கு அனுப்பிவிட்டு, தனது அதிரடிக்கான அச்சாரத்தைப் போட்டார் பன்ட். இதற்குப்பின், டாம் கரண் வீசிய பந்தை பன்ட் பவுண்டரிக்கு அனுப்ப, அம்பயர் எல்பிடபிள்யூ கொடுக்க, ரிவ்யூக்குப் போனார் பன்ட். அது பன்டிற்கு சாதகமாக முடிந்தாலும், ஆன் ஃபீல்ட் அம்பயர் அவுட் கொடுத்த காரணத்தால், டாட் பாலாக அறிவிக்கப்பட்டது. விதியின்படி, நான்கு ரன்களை இழந்தனர் இந்தியாவும் பன்ட்டும். இதன்பின் இன்னுமொரு ரிவ்யூவும் பன்ட்டுக்கே சாதகமாக வந்தது.

ஃபீல்டுக்குள் பூகம்பத்தைக் கொண்டு வந்தார், பன்ட். டாம் கரணாக இருந்தால் என்ன டாப்லியாக இருந்தால் என்ன என எல்லா பௌலர்களையும் பந்தாடத் தொடங்கினார் பன்ட். 1, 2 ரன்கள் என்பதற்கெல்லாம் இவருக்கு அர்த்தம் தெரியுமா, பவுண்டரி சிக்ஸர்கள் மட்டுமே இவரது பேட் பேசும் பாஷையா என்னும் அளவுக்கு, இங்கிலாந்தைக் கதற வைத்தார் பன்ட். வெறும் 28 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். மறுபுறம் 108 பந்துகளில் வந்து சேர்ந்த ராகுலின் சதம்கூட சாதாரணமாக இருட்டடிப்பு செய்யப்படுமளவு மொத்த வெளிச்சத்தையும் தன்மீது பாய்ச்சிக் கொண்டார் பன்ட். 300ஐ இந்தியா தாண்டும் என்ற நம்பிக்கையையும் அவரே கொண்டு வந்தார்.

ராகுலுடைய இன்னிங்ஸும் இளைத்ததல்ல. இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஏழு பவுண்டரிகளையும், 108 ரன்களையும் விளாசி மிகப்பொறுப்பாக ஆடி இருந்த அவர், டாம்கரணின் பந்தில், டாப்லியிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, பாண்டியா உள்ளே வந்தார். ஒரு பக்கம், பன்ட்டின் பவர்ஃபுல் ஷாட்ஸாலேயே கலங்கிக் கொண்டிருந்த இங்கிலாந்து இப்போது இருமுனைத் தாக்குதலைச் சந்தித்து அரண்டது. கரண் பிரதர்ஸ் வீசிய அந்த இரண்டே ஓவர்களில், 37 ரன்களைக் குவித்துக் கலங்க வைத்தனர் எதிரணியை. இறுதியில், டாம் கரணின் பந்துவீச்சில் முடிவுக்கு வந்தது பன்ட்டின் ஆட்டம். 40 பந்துகளில், 77 ரன்களை எடுத்திருந்த பன்ட் வெளியேற, இப்போது இணைந்தது பாண்டியா பிரதர்ஸின் கரங்கள். மூன்று ஓவர்களில், 26 ரன்களை இவர்கள் தங்கள் பங்குக்குச் சேர்த்து வலிமைசேர்க்க, 336 ரன்கள் என போன போட்டியில் சேர்த்ததைவிடவும் அதிகமான ரன்களைக் குவித்தது, இந்தியா.

337 என்பது கடின இலக்குதான், எனினும் பேட்ஸ்மேன் பேரடைசாக முகம்காட்டிக் கொண்டுள்ள புனே மைதானத்தில், எதுவும் சாத்தியம் இதுவும் சாத்தியம் எனும் முழு நம்பிக்கையோடே இறங்கியது இங்கிலாந்து‌. ராய் மற்றும் பேர்ஸ்டோவை புவனேஷ்வரின் வேகத்தோடு இந்தியா வரவேற்றது. தங்களை நிலைநிறுத்திக் கொள்ள சில பந்துகளை எடுத்துக் கொண்டனர் இங்கிலாந்து ஓப்பனர்கள்.

#INDvENG

அதன்பின், கட்டுக்கோப்பாக இந்தியா பந்துவீசினாலும் ஓவருக்கொரு பவுண்டரி எனும் கணக்கில் அடித்த இவர்கள், வாய்ப்புக்கிடைத்த போதெல்லாம் அதனை இரண்டாக்க, முதல் பவர்ப்ளேவில், 59 ரன்களைக் குவித்தது இங்கிலாந்து. 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை இவர்கள் அடைந்து வலிமையான அடித்தளத்தை அமைத்துத்தர, இங்கிலாந்தின் வெற்றிக்கான முன்னோட்டமாக அது மாற, அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது, ராயின் ரன்அவுட். இதன்பின் இணைந்தது இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணமான பேர்ஸ்டோ - ஸ்டோக்ஸ் கூட்டணி.

வெற்றியடையப் போராடுபவனிடம் இருப்பதைவிட தோல்வியைத் தவிர்க்கப் போராடுபவனிடம் வெல்ல வேண்டுமென்ற துடிப்பு, சில கிராம்கள் அதிகமாகவே காணப்படும். அத்தகைய வெறியை, நேற்று இங்கிலாந்து பேட்ஸ்மேன்களிடம் குறிப்பாக, பேர்ஸ்டோ - ஸ்டோக்ஸிடம் பார்க்க முடிந்தது. இந்த பார்ட்னர்ஷிப்பை உடைக்க கோலி செய்த எந்தத் தந்திரமும் பலிக்கவில்லை. க்ருணால், பிரசித்தை வைத்து வீழ்த்த வியூகம் வகுக்க, எதுவுமே நடக்காமல் போக, கேம் சேஞ்சர் தாக்கூரைக் கொண்டு வந்தார் கோலி. அடுத்ததாக புவனேஷ்வர், குல்தீப்பையும் தாக்கூரோடு இணைத்து மும்முனைத் தாக்குதலையும் நடத்திப் பார்க்க, குல்தீப்பின் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தார் ஸ்டோக்ஸ். அடுத்ததாக, க்ருணால் ஓவரிலும், மூன்று சிக்ஸர், ஒரு பவுண்டரியும் பறக்க, 113 பந்துகளில் நம்ப முடியாத வகையில், 175 ரன்களைக் குவித்தது இந்தக் கூட்டணி.

80 பந்துகளில், 50 ரன்களைக் எடுக்க வேண்டும் என்ற எளிய இலக்கு இங்கிலாந்தின் பயணத்தை எளியதாக்கியது. மலான் - லிவிங்ஸ்டோன் கூட்டணி, கேக் வாக்காக, இலகுவாக இலக்கை எட்ட, வெற்றிக்கோட்டைத் தொட்டது இங்கிலாந்து. ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று நான்காம் டி20-ல் இருந்து வரிசையாக மூன்று வெற்றிகளை முத்தமிட்ட இந்தியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இங்கிலாந்து.

இந்திய ஓப்பனர்கள் சொதப்பினாலும், மிடில் ஆர்டர் பின்வரிசை வீரர்கள், போட்டி போட்டு சிறப்பாக விளையாடினாலும், தேவையான விக்கெட்டுகளை சீக்கிரமாக எடுக்கத் தவறியது இந்தியாவின் வாய்ப்பைத் தட்டிப் பறித்தது.

#INDvENG

40 ஓவர்களிலேயே இலக்கை எட்டி விடுவார்களோ என்ற பயமே எழ, இறுதியில், புவனேஷ்வரின் பந்தில், 52 பந்துகளில், 99 ரன்களை எடுத்து மிரட்டிக் கொண்டிருந்த ஸ்டோக்ஸ் எதிர்பாரமாக பவுன்சர் பந்தில் விழ, அதற்கடுத்த ஓவரில், பிரசித் கிருஷ்ணா, 124 ரன்களைக் குவித்து விஸ்வரூபம் காட்டிய பேர்ஸ்டோவை வெளியேற்றினார். அடுத்து அவரே உள்ளே வந்த பட்லரை டக் அவுட்டாக்கினார்.

டி20 தொடரில் இங்கிலாந்து, லீட் எடுத்து செக் வைத்த போதெல்லாம், அதனைச் சமனாக்கி, செக்மேட் வைத்து இறுதியாக, கோப்பையையும் முத்தமிட்டது, இந்தியா. இந்தமுறை அதையே இந்தியாவுக்குத் திரும்பச் செய்திருக்கிறது இங்கிலாந்து. 1/1 என சமநிலை அடைந்திருக்கும் தொடர், ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கும் போட்டியை இறுதிப் போட்டியாக மாற்றி உள்ளது.



source https://sports.vikatan.com/cricket/johny-bairstow-and-ben-stokes-powers-england-to-level-the-series-against-india

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக