தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கும் நிலையில், ஆயிரம் விளக்குத் தொகுதி பா.ஜ.க வேட்பாளரான குஷ்புவிடம் ஒரு க்விக் பேட்டி.
``ஆயிரம் விளக்குத் தொகுதியில் சீனியரான கு.க.செல்வம் சீட் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், டெல்லி வரை போய் அந்த வாய்ப்பை நீங்கள் பறித்துவிட்டீர்கள் என்று வருகிற விமர்சனங்கள் இருக்கே..?"
``நான் டெல்லிவரை சென்று வாய்ப்பை பறிக்கக்கூடிய ஆள்னா, இப்போ ஏன் இங்க இருக்கப் போறேன். நான் இந்நேரத்துக்கு டெல்லியில இருக்க மாட்டேனா? இதுக்கான விளக்கத்தை கு.க. செல்வம் ஏற்கெனவே கொடுத்துட்டார். எனக்கு இங்க சீட் கொடுப்பாங்கனு தெரியாமதான் இருந்தேன். இதே தொகுதியில வேற யாருக்காவது சீட் கிடைச்சிருந்தா, இப்படி டெல்லி போய் வாங்கிட்டு வந்துட்டாங்கன்னு சொல்லுவாங்களா? அது என்ன குஷ்புவுக்கு மட்டும் இந்தப் பேச்சு வருது? ஏன்னா, நான் ஒரு பெண் அப்படீங்கிறதால ஈஸி டார்கெட், என்ன வேணாலும் பேசலாம்.''
``ஆயிரம் விளக்குத் தொகுதி தி.மு.கவின் வெற்றிக்கோட்டை, அங்கு பா.ஜ.கவுக்கு எந்தளவுக்கு வெற்றிவாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?"
``ஆயிரம் விளக்குத் தொகுதி மக்களுடைய இப்போதைய மனநிலை, `இதுவரை நாங்க பண்ணின தப்பு போதும்' என்ற அதிருப்தியாதான் இருக்கு. இது தி.மு.க கோட்டைன்னா, ஸ்டாலின் ஏன் ஆயிரம் விளக்கு தொகுதியை விட்டுட்டு கொளத்தூருக்குப் போகணும்? இங்க ஜெயிக்க வாய்ப்பில்லைனு தெரிஞ்சுதானே அங்க போய் போட்டியிடுறார்? அ.தி.மு.க ஆட்சியிலயும் சரி, இத்தனை வருட பா.ஜ.க ஆட்சியில பிரதமர் மோடி மேலயும் சரி... ஊழல் குற்றச்சாட்டுகள் இல்ல. இந்தக் கொரோனா நேரத்துல நிறைய மக்கள் நலத் திட்டங்களை கொண்டுட்டு வந்திருக்கோம். இதெல்லாம்தான் எங்களுக்கு வெற்றிக்கான நம்பிக்கை.''
``கமல் தி.மு.கவை கடுமையாக விமர்சிக்கற அதே நேரம் அ.தி.மு.க, பா.ஜ.கவை விமர்சிப்பதில்லை. அதேபோல கமல் பா.ஜ.கவின் பி டீம் என்று சொல்லப்படுகிறதே?"
``எங்க தப்பு நடக்குதோ அவங்களைதானே விமர்சிக்க முடியும்? கமல் சாரை பா.ஜ.கவுக்குள்ள கொண்டு வந்து நாங்க ஏ டீமாவே செயல்பட வெச்சுருப்போமே? எதுக்கு பி டீமா செயல்பட வைக்கப்போறோம்? தப்பை மறைக்கறதுக்கு ஏதாச்சும் சொல்லணுமேனு தி.மு.க இந்தக் குற்றச்சாட்டை சொல்லிட்டு இருக்காங்க.”
``நீங்கள் அடிப்படையில் பெரியாரிஸ்ட். ஆனால் பி.ஜே.பில் சேர்ந்த பிறகு வேல் யாத்திரை போராட்டங்கள் உள்பட நிறைய மாற்றங்கள். உங்கள் வீட்டில் ஆன்மிக நம்பிக்கை உண்டா?"
``மதம் அப்படீங்கிறது ஒருவரின் தனிப்பட்ட தேர்வு. பெரியாரிஸ்ட்டாக இருப்பதாலேயே ஒரு மதத்தை தாக்கணும்ங்கிறது இல்ல. அவங்க அவங்களுக்குனு ஒரு கடவுள்... அதை நாம மதிக்கறோம். உங்களுக்கு நம்பிக்கை இருக்கோ, இல்லையோ... இன்னொரு மதத்தை தாக்கி, கொச்சைப்படுத்திப் பேசக் கூடாது. இதுக்கு முன்னாடியும் நான் கோவிலுக்குப் போயிருக்கேன். எங்க வீட்டுல எப்பயும் நான் பூஜைகள் செய்யுறதும், கோவிலுக்குப் போறதும் உண்டு."
ரஜினி உங்களுக்கு ஆதரவு தந்தாரா? கமல் என்ன சொன்னார்? சுந்தர் சி-யின் கடனை அடைக்கத்தான் நீங்கள் பா.ஜ.கவில் சேர்ந்தீர்களா..? வருகிற செவ்வாய் அன்று கடைக்கு வரும் அவள் விகடன் இதழில் இன்னும் பல கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார் குஷ்பு.
- சாந்தி பிரியா
source https://www.vikatan.com/news/election/bjp-thousand-lights-candidate-khusboo-interview
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக