Ad

வெள்ளி, 26 மார்ச், 2021

தேர்தலுக்கு முன் - தேர்தலுக்குப் பின்... சசிகலா விவகாரத்தில் அ.தி.மு.க-வின் அடுத்த மூவ் என்ன?

‘சசிகலாவுக்கு அ.தி.மு.க-வில் 100 சதவிகிதம் வாய்ப்பில்லை’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்ன போதும், கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் ‘இனி அ.தி.மு.க-வில் சசிகலாவுக்கு இடமே இல்லை’ என்று சொன்னபோதும் எதுவும் பேசாமல் இருந்த துணை முதல்வர், அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது சசிகலாவுக்கு இணக்கமாகப் பேசி வருகிறார்.

இணக்கமாக என்று சொல்வதைவிட ஆதரவாகப் பேசி வருகிறார் என்றுதான் சொல்லவேண்டும். ‘ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. அவரது மறைவுக்குச் சசிகலாதான் காரணம்’ என்று கூறித்தான் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தமே தொடங்கினார். அதுமட்டுமல்ல ‘முதல்வர் ஆக வேண்டும் எனவும் ஒரு குடும்பத்தின் பிடிக்குள் கட்சியைக் கொண்டுசெல்ல வேண்டும் எனவும் சசிகலா முயற்சி செய்கிறார். ஜெயலலிதா மரணத்தை ஒட்டி நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று கேட்டருவரும் ஓ.பன்னீர்செல்வம்தான்.

ஓ.பி.எஸ்

ஆனால், தற்போது ‘சசிகலாமீது எனக்கு சந்தேகமும் இல்லை, வருத்தமும் இல்லை. ஜெயலலிதாவுடன் இருந்தபோது அவருக்குத் தேவையானதெல்லாம் செய்தார் என்ற நன்மதிப்புதான் உள்ளது’ என்றவர் ‘சசிகலாவை அ.தி.மு.க-வில் சேர்ப்பதற்கு வாய்ப்பில்லை என்று முதல்-அமைச்சர் சொல்லியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரையில் 4 ஆண்டு காலம் சிறையில் இருந்திருக்கிறார். மனிதாபிமான அடிப்படையில் பார்த்தால், ஜனநாயக முறைப்படி தற்போது இருக்கும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற அமைப்பை ஏற்றுக்கொண்டால் அவரைக் கட்சியில் இணைத்துக் கொள்வதைப் பற்றி பரிசீலிக்கலாம். சசிகலாவின் நலனுக்காகவே அப்போது அப்படிப் பேசினேன்” என்று பல்டி அடித்திருக்கிறார்.

Also Read: `பலருக்கு நன்றி இல்லை’ கண்ணீர் வழிய குலதெய்வக் கோயிலில் சசிகலா வழிபாடு!

தேர்தல் நேரத்தில் திடீரென சசிகலாவுக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம் பேச வேண்டிய தேவை என்ன? எதன் பொருட்டு அவர் அப்படி பேசினார் என்பது குறித்து அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்...

``சசிகலா குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு அவர் மீதான ஆதரவு மனநிலை மட்டும் காரணம் இல்லை. தொடர்ந்து சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்ததனாலும், வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கியதாலும் தென் மாவட்டங்களில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது முக்குலத்தோர் சமூகத்தினர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. அதைப் புரிந்துகொண்டுதான் ஓ.பன்னீர்செல்வம் தற்போது சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசிவருகிறார். தஞ்சாவூர் பகுதியில் இருக்கும் முக்குலத்தோரை விட தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் முக்குலத்தோர்தான் சசிகலா, தினகரன் மீது அதிக பற்றுடன் இருக்கிறார்கள். அதனால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் இப்பகுதிகளில் போட்டியிட்ட அ.ம.மு.க வேட்பாளர்கள் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வாங்கினார்கள்.

இ.பி.எஸ் - சசிகலா - ஓ.பி.எஸ்

சசிகலா, தினகரன் ஆகிய இருவருக்கும் தான் எதிரியில்லை என்பதை உணர்த்திவிட்டால் முக்குலத்தோர் வாக்குகளை எளிதாகப் பெற்றுவிடலாம் என்றும் ஓ.பி.எஸ் கணக்குப் போட்டுள்ளார். அதன் வெளிப்பாடுதான் சமீபத்தில் சசிகலா, தினகரன் மீதான அக்கறையும் ஆதரவும்” என்கின்றனர்.

``அதுமட்டுமல்ல அ.தி.மு.க-வுக்குள் முக்குலத்தோரின் செல்வாக்கு குறைந்துகொண்டே செல்கிறது என்றும் முக்குலத்தோருக்கான குரலே தற்போது அ.தி.மு.க-வில் இல்லாமல் போய்விட்டது என்ற பேச்சும் தொடர்ச்சியாக இருக்கிறது. முக்குலத்தோருக்கு ஆதரவான நிலைப்பாட்டை, தான் எடுக்காமல் விட்டதால்தான் தற்போது தம் ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது என்ற குற்ற உணர்வும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருக்கத்தான் செய்கிறது. அதைச் சரிசெய்வதற்காகத்தான் தற்போது சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஓ.பன்னீர்செல்வம் எடுத்து வருகிறார். இந்த ஆதரவு தற்போதைய தேர்தலுக்கானதா அல்லது நிரந்தரமானதா என்பது தேர்தல் முடிவுகள் வந்த பிறகுதான் தெரியும்” என்கின்றனர்.

ஓ.பி.எஸ்

தேர்தலை மையமிட்டு சசிகலாவை வைத்து ஓ.பன்னீர்செல்வம் ஒரு கணக்குப் போட்டு காய்நகர்த்திக் கொண்டிருக்கும் அதே வேளையில் தேர்தலுக்குப் பின் அவரது விவகாரத்தில் அ.தி.மு.க-வின் மூத்த தலைகள் மூவ் என்னவாக இருக்கும் என்று விசாரித்தோம்...

``தேர்தலில் வெற்றியோ தோல்வியோ எப்போதும் கட்சி தன் பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தனித்தனி ஆசை. அதற்கு சசிகலாவைத் தடுப்பது, அதன்மூலம் அ.தி.மு.க-வை கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கும் தினகரனை முடக்குவது என்று கணக்குப்போட்டுக் காய் நகர்த்தினார் எடப்பாடி பழனிசாமி. அதனால்தான் முதல்கட்டமாகத்தான் இரண்டு மாதங்களுக்கு முன்பே பா.ஜ.க தலைவர்களைச் சந்தித்து சசிகலாவைக் கட்சியில் சேர்க்க மாட்டோம் என்று உறுதியாகச் சொல்லிவிட்டு அதை டெல்லியிலேயே வைத்து ஊடகங்கள் மூலம் மற்றவர்களுக்கும் அறிவித்துவிட்டார். இதன்மூலம் சசிகலாவுக்கு நோ சொன்ன தேதியிலேயே அ.தி.மு.க-வைக் கைப்பற்றும் தினகரனின் திட்டத்திற்கும் முட்டுக்கட்டை போட்டுவிட்டார் முதல்வர் பழனிசாமி” என்றவர்கள்...``முதல் திட்டம் நினைத்தபடி நடந்ததும் அடுத்து கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றத் தடையாக இருப்பது ஓ.பன்னீர்செல்வம் தான். அவருக்கும் செக் வைத்துவிட்டால் ஆட்சியைப் பிடிக்கிறோமோ இல்லையோ, நினைத்தபடி கட்சியைக் கைக்குள் வைத்துக்கொள்ளலாம் என திட்டமிட்டார். முதல் ஆயுதமாக - சட்டப்பேரவைத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்வுசெய்து கொடுக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் வெற்றி பெற்றாலும் தனக்கு எதிராகத் திரும்ப மாட்டார்கள் என்று உறுதியாகத் தான் நம்பியவர்களை மட்டும் டிக் அடித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

பன்னீர்செல்வத்தின் லிஸ்ட்டில் இருப்பவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினரிடம் ரகசியமாக டீல் பேசி வலுவான வேட்பாளரை நிக்க வைத்துவிட்டார். அதேநேரத்தில் தன்னுடைய ஆதரவாளர்கள் குறிப்பிட்ட சிலருக்கு எதிராக டம்மியான வேட்பாளர்களை நிறுத்தவும் சேர்த்தே டீல் பேசியிருக்கிறார். பன்னீர்செல்வத்தின் பலத்தைக் கட்சியிலும் பேரவையிலும் குறைத்து, கட்சியை எளிதில் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என்ற திட்டத்தில் இருக்கிறார்” என்கின்றனர்.

``எடப்பாடி பழனிசாமியின் இந்தக் கணக்குகளை எல்லாம் மோப்பம் பிடித்துவிட்ட ஓ.பன்னீர்செல்வம் சசிகலா, டிடிவி தினகரனை ஆதரிப்பது ஒன்றுதான் தனக்கும் தன்னுடையை எதிர்கால அரசியலுக்கும் பாதுகாப்பானது என்று உணர்ந்துகொண்டு அந்த வழியில் பயணிக்கத் தொடங்கிவிட்டார். எனவேதான் சசிகலா, தினகரனுக்குத் தான் எதிரானவன் இல்லை என்பதைக் காட்டும் விதமாகச் செயல்படத்தொடங்கிவிட்டார். அப்படிச் செய்தால் தேர்தலுக்குப்பின் கட்சி சசிகலா கையில் சென்றாலும்கூட தான் அவர்களுக்கு விசுவாசமாக தற்போதும் இருந்ததற்காக துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுப்பார் என்று கணக்குப் போட்டு வைத்திருக்கிறார். அதனால்தான் நேற்று முதல்வர் பழனிசாமியுடன் நடந்த சந்திப்பின் போது கூட ``தேர்தல் நேரத்துல சசிகலா தொடர்பா எதுவும் பேச வேண்டாம். நீங்கள் அவரைப் பற்றிப் பேசுவதால் தேவையில்லாம கட்சிக்காரங்க, பொதுமக்கள் எல்லாம் குழம்புறாங்க’’ என்று முதல்வர் பழனிசாமி பேசியிருக்கிறார்.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

`சசிகலா ஆதரவு இல்லாம தென்மாவட்டத்துல நாம கரைசேர முடியாது. நீங்க எடப்பாடியில ஜெயிக்குறதுக்காக பா.ம.க-வை கூட்டணிக்குள்ள கொண்டு வந்துட்டீங்க. அதுக்காக, 10.5 சதவிகித இடஒதுக்கீட்டையும் கொடுத்துட்டீங்க. இதனால தென்மாவட்டத்துல ஏகப்பட்ட கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கு. அதை சரி செய்ய முயற்சி செய்தால் என் மீதே கோபப்படுறாங்க’ என்று ஓ.பன்னீர் செல்வம் வெடித்துத் தீர்த்துவிட்டாராம். இப்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தேர்தலுக்குப் பின்னும் சசிகலாவை வைத்து தங்களுக்கு ஆதாயம் ஏற்படும் வகையில் அரசியல் ஆட்டம் ஆடுகிறார்கள்” என்கின்றனர்.

இந்தத் தேர்தல் சூதாட்டத்தில் இன்னும் எத்தனையெத்தனை காய்கள் எந்தெந்தக் கட்டத்துக்கு நகர்த்தப்படுமோ!



source https://www.vikatan.com/government-and-politics/politics/what-is-the-next-move-against-sasikala-in-admk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக