Ad

சனி, 27 மார்ச், 2021

இம்ரான் தாஹிர்... இந்தப் பராசக்தி எக்ஸ்பிரஸுக்கு ஓய்வே கிடையாது! #HBDImranTahir

இம்ரான் தாஹிர்... உசேன் போல்ட் ஓட்டத்தை ரசிக்காதவர்கள்கூட இவருடைய ஓட்டத்தை நிச்சயம் ரசிப்பார்கள். விக்கெட் எடுத்துவிட்டு அப்படியே கிரவுண்டுக்குள் இவர் ஓடும் ஒட்டத்தைப் பார்க்க அவ்வளவு உற்சாகமாக இருக்கும். ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஸ்பிரின்ட் ஒடுவதுபோல் ஓடிக்கொண்டு இருப்பார் மனிதர். தன்னுடைய ஓட்டத்தாலேயே சிஎஸ்கே ரசிகர்களுக்கு செல்லப்பிள்ளையும் ஆகிவிட்டார் அவர். பராசக்தி எக்ஸ்பிரஸ் என்று நாமும் இவரைக் கூப்பிட்டு, கொண்டாட ஆரம்பித்துவிட்டோம். அந்த எக்ஸ்பிரஸ் டிரெய்னுக்கு இன்று வயது 42.

கிரவுண்டில் இவர் ஆடுவதைப் பாக்கும்போது அவ்வளவு எனர்ஜெட்டிக்காக இருக்கும். சர்வதேச அரங்கில் ஓய்வு பெற்றுவிட்ட ஒரு வீரரைப் போலவே இருக்காது. ஓடிக்கொண்டே இருப்பார். சி.எஸ்.கே-வை uncle's army என்று கலாய்க்கலாம். ஆனால், அதில் இருக்கும் மிகவும் யூத்ஃபுலான ஆள் தாஹிராகத்தான் இருப்பார். ஒரு சம்பவம் சொன்னால், அது எந்த அளவுக்கு உண்மை என்று புரியும்.

இம்ரான் தாஹிர்

மே 1, 2019 - சி.எஸ்.கே - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் சேப்பாக்கத்தில் நடந்தது. அதற்கு முந்தைய மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி விளையாடவில்லை. முதுகு வலியின் காரணமாக அவர் ஓய்வெடுத்துக்கொண்டார். டெல்லி அணியுடனான போட்டியில் மீண்டும் களமிறங்கினாலும் அவர் முழு ஃபிட்னஸோடு இல்லை. சற்று களைப்பாகவே காணப்பட்டார். பேட்டிங் செய்தபோது 22 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். ஆனால், எப்போதும் வெறித்தனமாக விக்கெட்டுகளுக்கு இடையே ஓடும் எம்.எஸ் அன்று ஒரேயொரு டபுள்தான் எடுத்தார்.

அடுத்து டெல்லி பேட்டிங். தீபக் சஹார் பெவிலியன் எண்டில் இருந்தும், ஹர்பஜன் சிங் பட்டாபிராமன் கேட் எண்டில் இருந்தும் முதல் ஸ்பெல் வீசினார்கள். தீபக் சஹார் ஓவர் போடும்போது தேர்ட் மேன் பொசிஷனிலும், ஹர்பஜன் ஓவரின்போது ஃபைன் லெக் திசையிலும் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார் தாஹிர். ஃபாஸ்ட் பௌலர், ஸ்பின்னர் என்று மாறி மாறி வீசியதால், கிரவுண்ட்டில் ஹெல்மட்டையும் வைத்திருந்தார் தோனி.

ஒரு தீபக் சஹார் ஓவர் முடிந்தது. அடுத்து ஹர்பஜன் ஓவர். இப்போது எண்ட் மாறவேண்டும். தோனி பெவிலியன் எண்ட் பக்கம் போகவேண்டும். ஃபைன் லெக்கில் ஃபீல்டிங் என்பதால், இப்போது தாஹிரும் அந்தப் பக்கம் போகவேண்டும். சஹார் ஓவர் முடிந்ததும் ஓடத் தொடங்கியவர், தோனியைத் தாண்டி ஸ்டம்ப் அருகில் போயிருந்தார். திடீரென்று என்னவோ யோசித்தவர், திரும்பி பின்னால் ஓடி வந்தார். ஹர்பஜன் ஓவர் என்பதால் ஹெல்மட் எடுக்க மெதுவாக நடந்து போய்க்கொண்டு இருந்தார் தோனி.

அவருக்கு ஏற்கெனவே முதுகு வலி. இதில் குனிந்து வேறு ஹெல்மெட் எடுக்கவேண்டுமே. அதற்கு அவர் சிரமப்படாமல் இருப்பதற்காக, ஹெல்மெட் எடுத்துக்கொடுக்கத்தான் திரும்ப ஓடி வந்திருக்கிறார் அவர். தோனி 4 அடி வைப்பதற்குள் திரும்ப ஓடிவந்து ஹெல்மெட்டை எடுத்து அவர் கையில் கொடுத்துவிட்டு, தோனியின் முகத்தைக்கூடப் பார்க்காமல் ஃபைன் லெக் திசை நோக்கி ஓடினார் தாஹிர்.

Tahir with Dhoni

இதுதான் தாஹிர்... தோனியைவிட அவருக்கு 2 வயது அதிகம். ஆனால், ஏதோ ஒரு சின்னப் பையன் போல் வந்து ஹெல்மெட் எடுத்துக் கொடுத்துவிட்டுப் போனார். இந்த ஒரு விஷயம் போதும் மனதளவில் அவர் எவ்ளோ யூத்ஃபுல்லாக இருக்கிறார் என்பதைக் காட்ட. சி.எஸ்.கே-வின் யூத்ஃபுல் ஸ்பின்னருக்கு இன்று பிறந்தநாள். ஹேப்பி பர்த்டே பராசக்தி எக்ஸ்பிரஸ்!



source https://sports.vikatan.com/ipl/imran-tahir-is-the-most-youthful-player-in-the-csk-camp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக