Ad

சனி, 27 மார்ச், 2021

ஈகோவால் பிரிந்திருக்கும் மகன், மருமகள்... `ஒற்றைப் பிள்ளை' செல்ல வளர்ப்புதான் காரணமா? #PennDiary

எங்களுக்கு ஒரே மகன். என்பதாலேயே மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்தோம். கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுத்தோம். வீட்டுக்கு வாங்கும் டிவி முதல் கார் வரை எல்லாம் அவன் தேர்வுதான். அவனுக்குப் பிடித்ததையே செய்தோம். பிடிக்காதவற்றை தவிர்த்தோம். `பிள்ளையை ஓவியமா வளர்க்குறீங்க' என்று நண்பர்களும் உறவினர்களும் சொன்னபோது பெருமையில் பூரித்தோம்.

Family (representational image)

மகனுக்கு 24 வயதானபோது, பெண் பார்க்க ஆரம்பித்தோம். பார்த்த முதல் பெண்ணே பிடித்துப்போனது. `நான் வேலை பார்க்கிற அதே கம்பெனியில வேலை பார்க்கிறா' என்றான் சந்தோஷமாக. அந்தப் பெண்ணும் எங்கள் பையனை போலவே வீட்டுக்கு ஒரே மகள். அதே செல்லம். பெண்ணின் விருப்பப்படியே வீட்டில் எல்லாம் என்ற அதே நடைமுறை. கோலாகலமாக திருமணம் முடித்தோம்.

சென்னையில் அதுவரை ஹாஸ்டல்களில் தங்கி வேலைபார்த்து வந்த மகனும் மருமகளும், ஒரு ஃப்ளாட்டுக்குக் குடிபோய் வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். ஒரே நிறுவனத்தின் வேறு வேறு அலுவலகக் கிளைகளில் பணியாற்றிய இருவரும், ஒருவரின் பணியை மற்றொருவர் புரிந்துகொண்டார்கள்.

Marriage

எல்லாம் ஆறு மாதங்களுக்குத்தான். அதற்குப் பிறகு இருவருக்கு இடையிலும் தினம் தினம் ஈகோ பிரச்னைகள்தான். கோயம்புத்தூரில் வசிக்கும் எங்களுக்கும், சேலத்தில் வசிக்கும் சம்பந்தி வீட்டுக்கும் போனில் பஞ்சாயத்துகளை சொன்னபடியே இருந்தார்கள். அவர்கள் இருவருக்கு இடையிலும் கொஞ்சம்கூட விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாததையும், ஈகோ இருவருக்குமே அதிகம் இருந்ததையும் எங்கள் இரண்டு குடும்பமும் புரிந்துகொண்டோம். அதை அவர்களுக்கும் புரியவைத்தோம். பலனில்லை.

என் பையன் எங்கள் வீட்டில் எதற்கும், யாருக்கும் எந்தளவுக்குக் கேள்விகளற்று இருந்தானோ, அவன் சொல்வதற்கு எல்லாம் நாங்கள் எப்படி தலையாட்டினோமோ, அதையெல்லாம் அவன் எங்கள் மருமகளிடமும் எதிர்பார்த்திருக்கிறான். இன்னொரு பக்கம், தன் வீட்டில் யாராலும் அதிர்ந்துகூட ஒரு வார்த்தை சொல்லப்படாமல் வளர்க்கப்பட்ட என் மருமகள், `நீ சொல்றதுக்கு எல்லாம் நான் ஏன் அடங்கிப் போகணும்? உனக்கு நான் எந்த விதத்திலும் தாழ்ந்தவ இல்ல. நீ உங்க வீட்டுல ராஜான்னா, நான் எங்க வீட்டுல ராணி' என்பதாக இருந்திருக்கிறார். கணவன் - மனைவிக்கு இடையில் இருக்க வேண்டிய விட்டுக்கொடுத்துப் போவது, அனுசரித்துப் போவது, புரிந்துகொள்வது, மன்னிப்புக் கேட்பது, மன்னிப்பது... இவை எதுவுமே இவர்களுக்குள் இல்லை.

Couple

இதற்கு இடையில், அலுவலகத்திலும் இருவருக்கு இடையிலும் இன்ஃபீரியாரிட்டி, சுப்பீரியாரிட்டி மனநிலை உருவாகத் தொடங்கியது. என் பையனும் மருமகளும் கிட்டத்தட்ட ஒரே நிலை வேலையில், ஒரே சம்பளத்தில் இருந்தார்கள். அந்த வருட சம்பள உயர்வு, புரொமோஷன் என் மகனைவிட மருமகளுக்கு அதிகமாகக் கிடைத்தது. தாழ்வு மனப்பான்மையடைந்த என் பையன், `என்னைவிடவா நீ உழைக்கிற? டீம்ல வேண்டப்பட்டவங்களுக்குத்தான் எல்லாம் கிடைக்குது, உழைக்கிறவங்களுக்கா கிடைக்குது?' என்று வார்த்தையை விட்டிருக்கிறான்.

சரி ஏதோ வருத்தத்தில் பேசுகிறான், அவன் தாழ்வு மனப்பான்மையை இன்னும் அதிகரித்துவிடக் கூடாது என்று என் மருமகள் நினைத்து, புலம்பிவிட்டுப் போகட்டும் என்று கண்டுகொள்ளாமல் போயிருக்கலாம். ஆனால் தனது தன்மானத்தை சீண்டியவுடன், ``என்னையா அப்படி சொன்ன...' என்று அவருக்குக் கோபம் அதிகமாகிவிட்டது. அதிலிருந்து, அலுவல் அறிவில், செயல்பாடுகளில் அவன் தன்னைவிட குறைந்தவன் என்பதை வேலை குறித்த உரையாடல்களில் எல்லாம் சொல்லிக்காட்ட ஆரம்பிக்க... சண்டைகள் இன்னும் அதிகமாயின.

Pregnancy

இதற்கிடையில், என் மருமகள் திருமணமான மூன்று மாதங்களில் கருவுற்று இருந்தார். பிரசவத்துக்காக அலுவலகத்தில் விடுப்பு எடுத்து தன் அம்மா வீட்டுக்குச் சென்றார். எங்களுக்கு ஒரு பேத்தி பிறந்தாள். அவள் பிறந்த பின்னாவது இருவரும் மோதல்களை விட்டுவிட்டு அப்பா, அம்மா என்ற பொறுப்பில் இணைவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், குழந்தைக்குப் பெயர் வைப்பதில் வெடித்தது பூகம்பம்.

என் பையன், தான் சொன்ன பெயரைதான் வைக்க வேண்டும் என்று கேட்க, என் மருமகள், `பத்து மாசம் சுமந்து பெத்தவளுக்குக் குழந்தைக்குப் பெயர்வைக்கக் கூட உரிமையில்லையா, நான்தான் பெயர் வைப்பேன்' என்றார். இருவரும் சண்டை போட்டுக்கொண்டார்கள். இதற்கிடையில் என் மருமகள், பிறப்புச் சான்றிதழில் என் பேத்திக்கு அவள் ஆசைப்பட்ட பெயரையே குறிப்பிட்டு வாங்கிவிட, என் மகன் தான் ஏமாற்றப்பட்டதைபோல உணர்ந்தான். என் மருமகளிடம் பேசுவதை நிறுத்தினான். குழந்தையைக்கூட மாமியார் வீட்டுக்குச் சென்று பார்ப்பதில்லை. அந்தளவுக்கு விட்டேத்தியாக மாறத் தொடங்கினான்.

Baby

இன்னொரு பக்கம், என் மருமகளும் அதைப் பற்றி வருந்துவதாக இல்லை. `அம்மா வீட்டுல எவ்வளவு சொகுசா, நிம்மதியா இருக்கேன்? அவர் வந்தா என்ன, வரலைன்னா என்ன? நானும் என் புள்ளையுமா இருந்துக்குறோம். சொத்து இருக்கு, நான் சம்பாதிக்கிறேன், இப்போ என்ன?' என்றார்.

குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆனதும், `இப்போ நீங்க அப்பா, அம்மா... இனிமே ஒற்றுமையா இருக்கப் பழகுங்க' என்று ஆயிரம் அறிவுரைகள் கூறி, மருமகளை சென்னையில் மகன் வீட்டுக்கு அனுப்பினோம். குழந்தையை பார்த்துக்கொள்ள மருமகளுடன் அம்மாவும் சென்றார். இந்த முறை, `குழந்தைக்கான வேலை எதையுமே நீ செய்யுறதில்ல, கொஞ்சுறதுக்கு மட்டும் புள்ள வேணுமா?' என்று மருமகள் வெடிக்க ஆரம்பித்தார். குழந்தை, சந்தோஷ தருணங்கள் என்று அவர்கள் இணைவதற்கான சூழல்கள் உருவாகும் என்று எதிர்பார்த்த எங்களுக்கு, குழந்தைப் பொறுப்புகளை முன்னிட்டு சண்டைகள் வர ஆரம்பித்தது அதிர்ச்சி. இந்நிலையில், தன் அம்மாவிடம் குழந்தையை விட்டுவிட்டு மருமகள் மீண்டும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். அந்த முடிவை என் மகனை ஆலோசித்துவிட்டு எடுக்கவில்லை என்று இவன் குதித்தான்.

ஊரடங்கு

`அவ எதுக்குமே என்னை மதிக்கிறதில்ல. என்னை கேட்டு முடிவெடுக்கிறதில்ல. வீட்டுல சமைக்கிறதுலயிருந்து எல்லா வேலைக்கும் ஆள் இருக்காங்க. இவ ஒரு வேலை செய்றதில்ல' என்று குற்றச்சாட்டுகளை அடுக்குகிறான் பையன். அதையேதான் மருமகளும் சொல்கிறார். `அவர் என்னை கேட்டு என்ன முடிவு எடுக்குறார்? நான் மட்டும் ஏன் அவரை கேட்டு முடிவெடுக்கணும்? அவருக்குக் கீழ என்னை ஏன் நான் தாழ்த்திக்கணும்னு அவர் எதிர்பார்க்குறார்? நான் வேலைக்குப் போறேன், சம்பாதிக்கிறேன். வீட்டு வேலை பார்க்க ஆள் இருக்காங்க. ஆஃபீஸுக்கும் போயிட்டு வந்து வீட்டு வேலையும் நான் ஏன் பார்க்கணும்?' என்கிறார் மருமகள்.

அந்த நேரத்தில் கொரோனா ஊரடங்கு வர, மருமகள் குழந்தையோடு தன் பெற்றோர் வீட்டுக்கும், மகன் எங்கள் வீட்டுக்கும் என வந்துவிட்டனர். இருவருக்குமே இப்போதுவரை வொர்க் ஃப்ரம் ஹோம்தான்.

இப்போது இருவருக்கு இடையிலும் பேச்சு வார்த்தையே இல்லை. இந்த ஒரு வருடத்தில் தன் மனைவியை, குழந்தையை என் மகன் ஒருமுறைகூட சென்று பார்க்கவில்லை. மருமகளும், என் மகனை வரவைப்பதற்கோ, அவர் இங்கு வருவதற்கோ ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.

Couple

Also Read: என் பெண் பிள்ளைகள்... வில்லனாக்கப்படும் கொழுந்தனின் ஆண் பிள்ளை... தினமும் கொல்லும் வீடு! #PennDiary

Also Read: கணவரை பயன்படுத்திக் கொள்ளும் உறவுகள்... பறிபோகும் குடும்ப நிம்மதி! #PennDiary - 06

எங்கள் குடும்பமும் சம்பந்தியின் குடும்பமும் நொந்து போய் இருக்கிறோம். இருவருமே இருவரின் பிள்ளைகளுக்கும் சப்போர்ட் செய்யவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளுங்கள் என்றுதான் அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கிறோம். தோல்வி, ஏமாற்றம், கண்டிக்கப்படுவது, தண்டிக்கப்படுவது, விட்டுக்கொடுப்பது என இவை எதற்குமே எங்கள் பிள்ளைகளுக்கு வாய்ப்புக் கொடுக்காமல் நாங்கள் அவர்களை பொத்திப் பொத்திப் வளர்த்தோம். அதனால்தான் இப்போது இருவரும் இந்தளவுக்கு தங்களின் சுயநலத்தை பிரதானமாகக் கொண்டு இல்லற வாழ்க்கையையே கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். எங்கள் வளர்ப்புதான் தவறா என்று வேதனையில் உழன்றுகொண்டிருக்கிறோம்.

`ஒரே புள்ளைனு வளர்த்து, இப்படி ரெண்டும் ரெண்டு திசையில வாழாம இருக்குதுங்களே' என்று இரண்டு குடும்ப உறவினர்கள், நண்பர்களும் பேசப் பேச, கண்ணீரில் கரைந்துகொண்டிருக்கிறோம்.

ஆனால், என் மகனும் மருமகளும், தங்கள் வாழ்க்கையில் எதுவும் குறைந்துவிட்டதாக நினைக்கவில்லை. ஒரே வீட்டில், ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழும் வாழ்க்கையைவிட, இருவருமே தங்களின் சொகுசில் இருந்து வெளிவரத் தேவையில்லாத இந்தப் பிரிவு வாழ்க்கையையே சுதந்திரம் என நினைக்கிறார்கள். இதுவே போதும் என்று நினைக்கிறார்கள்.

இந்த ஆபத்தான மனநிலையிலிருந்து அவர்களை எப்படி மீட்பது? எவ்வாறு இணைப்பது?

வாசகியின் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் பதிவு செய்யலாமே..!
தோழிகளே... இதுபோல நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள், உறவுச் சிக்கல்களை அவள் விகடனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு Penn Diary என Subject-ல் குறிப்பிட்டு உங்கள் அனுபவங்களை அனுப்பி வையுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனுபவங்கள் விகடன் தளத்தில் வெளியாகும்.


source https://www.vikatan.com/lifestyle/women/a-mother-shares-the-ego-issues-between-her-son-and-daughter-in-law

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக