சர்வதேச வர்த்தகத்தில் முக்கியமான ஒரு நீர்வழிப் பாதையாக கருதப்படும் சூயஸ் கால்வாயை அடைத்துக்கொண்டு `ராட்சத கப்பல்` ஒன்று தரைத்தட்டி நிற்கிறது. கால்வாய் மார்க்கத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதால், கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பல லட்சம் மதிப்புள்ள சரக்குகள் தேங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
தைவானின் `எவர் கிரீன் மரைன்` நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் 400 மீட்டர் நீளமும் இரண்டு லட்சம் டன் எடையும்கொண்ட `எவர் கிவன்` என்ற பெயர்கொண்ட கப்பல் சூயஸ் கால்வாயின் பாதையை அடைத்தபடி தரைதட்டி நிற்கிறது. எதிர்பாராத பலத்த காற்றால் கப்பல் தரைதட்டியதாகக் கூறப்படுகிறது.
சூயஸ் கால்வாய் எங்குள்ளது?
எகிப்திலுள்ள இந்தக் கால்வாய், செங்கடலிலுள்ள எகிப்தின் சூயஸ் நகரின் ஊடாக மத்திய தரைக்கடலையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்கிறது.
இந்தப் பாதையில்தான் ஐரோப்பாவிலிருந்து ஆசியாவுக்கு சரக்குகள் நேரடியாகச் செல்கின்றன. இந்தப் பாதையைத் தவிர்த்தால் ஆப்ரிக்காவிலுள்ள `குட் ஹோப்’ முனையை சுற்றிச் செல்ல வேண்டும் அதற்குப் பல நாள்களோ அல்லது வாரங்களோ ஆகும்.
இந்தக் கால்வாய் யாரால் கட்டப்பட்டது?
இந்தக் கால்வாய்க்கான கட்டுமானப் பணி 1859-ம் ஆண்டு தொடங்கியது. கிட்டதட்ட 10 வருடங்களாக இந்தக் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 15 லட்சம் பேர் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட பலர் அடிமைப் பணியாளர்களாக இருந்தனர். இதற்காக பணியாற்றும்போதே காலரா மற்றும் பிற காரணங்களால் பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
மேலும் இந்தக் கால்வாய் கட்டப்படும் சமயத்தில் எகிப்து நாடு, பிரிட்டன் மற்றும் பிரான்ஸால் ஆளப்பட்டுக்கொண்டிருந்தது. எனவே, காலனித்துவ ஆட்சிக்கு எதிராகப் பல எதிர்ப்புகள் இருந்தன. அது, கட்டுமானத்தை வெகுவாக பாதித்தது.
இதனால் அந்தச் சமயத்தில் இருந்த நவீன தொழில்நுட்பம் எதையும் கட்டுமானப் பணியில் பயன்படுத்த முடியவில்லை. மேலும், திட்டமிடப்பட்டதைக் காட்டிலும் இதன் கட்டுமானச் செலவு இரட்டிப்பானது.
Also Read: கடலில் டிராஃபிக் ஜாம்... சூயஸ் கால்வாயில் சிக்கிய ராட்சத Ever Given கப்பல்... எண்ணெய் விலை உயருமா?!
சூயஸ் கால்வாய் அதிகாரபூர்வமாக 186-ம் ஆண்டு, நவம்பர் மாதம் திறக்கப்பட்டது. தற்போது உலகின் அதிக அளவிலான சரக்குக் கப்பல் செல்லும் ஒரு பாதையாக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான சரக்குக் கப்பல்கள் இந்தப் பாதையைக் கடந்து செல்கின்றன.
2015-ம் ஆண்டு, சூயஸ் கால்வாயின் விரிவாக்கத்தை மேற்கொண்டது எகிப்து. முக்கியக் கடல்வழியை ஒட்டி 35 கி.மீ நீளத்தில் மற்றொரு பாதையையும் கட்டமைத்தது எகிப்து. இதனால் இருவழிப் போக்குவரத்து சாத்தியமானது. அதுமட்டுமல்லாமல் பெரிய சரக்குக் கப்பல்கள் செல்லவும் ஏதுவாக அமைந்தது.
தற்போது இந்தக் கால்வாயை `சூயஸ் கெனால் அத்தாரிட்டி` என்ற எகிப்து அரசுக்குச் சொந்தமான நிறுவனம் நிர்வகிக்கிறது.
சூயஸ் கால்வாய் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?
தினந்தோறும் சராசரியாக 50 கப்பல்கள், 300 மில்லியன் டன்னுக்கும் அதிகமான சரக்குகளைச் சுமந்துகொண்டு சூயஸ் கால்வாயைக் கடந்து செல்கின்றன.
ஐரோப்பாவிலிருந்து சூயஸ் கால்வாய் வழியாக கப்பல்கள் செல்வதால் பல ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணம் குறைகிறது. தெற்கு அட்லாண்டிக் மற்றும் தெற்கு இந்தியப் பெருங்கடல் பாதையில் செல்வதோடு இந்தப் பாதையை ஒப்பிட்டால் சுமார் 7,000 கிலோமீட்டர் பயணம் மிச்சமாகிறது.
சூயஸ் கால்வாய் நெருக்கடி
சூயஸ் கால்வாயைச் சூழ்ந்திருந்த ஒரு முக்கிய அரசியல் நெருக்கடி 1956-ம் ஆண்டு தொடங்கியது. அப்போது எகிப்தின் அதிபராக இருந்த கமால் அப்தெல் நாசீர், சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கி டீரான் நீரிணையை மூடினார்.
இதனால் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் எகிப்தின் மீது படையெடுத்தன. ஐ.நா-வின் தலையீட்டுக்குப் பிறகு மூன்று நாட்டு படைகளும் விலகிக்கொண்டன. கால்வாய் வர்த்தகக் கப்பலுக்கான பாதையைக் கொடுத்தது.
இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கு இடையே நடைபெற்ற ஆறு நாள் போரால் எகிப்திய அதிகாரிகளால் சூயஸ் கால்வாய் 1967-ம் ஆண்டு மூடப்பட்டது.
சூயஸ் கால்வாய் எந்த நாட்டின் கட்டுப்பாடில் உள்ளது?
இரண்டு உலகப் போர்களின்போதும் பிரிட்டன், சூயஸ் கால்வாயைக் காட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அதன் பின் எகிப்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு 1956-ம் ஆண்டு படைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. அதன் பிறகு எகிப்தின் அதிபர் கமால் அப்தெல் நாசீரிடம் அதிகாரம் வந்தது.
தற்போது என்ன நடக்கிறது?
தற்போது கால்வாய்க்கு இடையில் சிக்கியுள்ள இந்த `ராட்சதக் கப்பலை` மீட்கப் பல வாரங்கள் ஆகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தக் கால்வாயின் வழியாக ஓவ்வொரு மணி நேரமும் 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சரக்குப் போக்குவரத்து நடைபெறுகிறது.
சர்வதேச வர்த்தகத்தில் 12 சதவிகித வர்த்தகம் இந்தப் பாதை வழியாகத்தான் நடக்கிறது. இந்தப் பாதை வழியாக எண்ணெயைத் தவிர உடைகள், கார் உதிரி பாகங்கள், பல உற்பத்தி பொருள்களும் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்தப் பாதை அடைப்பட்டுள்ளதால் பல சரக்குக் கப்பல்கள் காத்து நிற்கின்றன. கப்பலை மீட்கும் முயற்சிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. இருப்பினும், அதற்குச் சில தினங்களோ வாரங்களோ ஆகலாம். இதனால் கச்சா எண்ணெயின் விலை ஏற்றம் கண்டது.
இந்தியாவின் பெரும்பாலான கச்சா எண்ணெய் இந்த வழியாகத்தான் இறக்குமதி ஆகிறது. எனவே, சூயஸ் கால்வாய் பிரச்னை தீர்க்கப்படவில்லையென்றால் அது இந்தியாவையும் பெரிய அளவில் பாதிக்கும்.
இந்தக் கால்வாய் நீண்ட நாள்களுக்கு அடைபட்டுக்கொண்டிருந்தால், அதன் வழியாகச் செல்ல காத்திருக்கும் கப்பல்களின் உரிமையாளர்களுக்குப் பெரும் இழப்பு நேரிடும். எனவே, ஏற்கெனவே சில கப்பல் உரிமையாளர்கள் தங்களது கப்பல்களை ஆப்பிரிக்காவின் ’குட் ஹோப்’ பாதை வழியாகக் கொண்டு செல்ல முடிவெடுத்துவிட்டனர்.
- திலகவதி
source https://www.vikatan.com/news/general-news/suez-canal-history
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக