அ.தி.மு.க ஆட்சியில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர். 2013-ம் ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற கூட்டத்தொடர் ஒன்றில் பேசக் கிடைத்த வாய்ப்பை, கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டு ஒருநாள் சட்டமன்ற உரையினாலேயே அமைச்சர் பதவியை கைப்பற்றியவர். `காலத்தின் கட்டாயம்’ கருதி, அன்று அவர் சட்டமன்றத்தில் பேசியதையும், சில தினங்களுக்கு முன்பு விராலிமலை தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதையும் ஒப்பிட வேண்டியுள்ளது.
காரணம், எதைப் பேசி ஜெயலலிதாவிடம் அமைச்சர் பதவியை வாங்கினாரோ, அதே காரணத்தை முன் வைத்தே இப்போதும் மக்களிடம் வாக்குகளையும் வாங்க நினைக்கிறார்!
அன்று!
29-3-13 தேதி தமிழக சட்டமன்றத்தில் நடந்த துணைநிலை நிதி மசோதா மீதான விவாதத்தில் அன்றைக்கு விராலிமலை சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே இருந்த விஜயபாஸ்கருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் ஆற்றிய உரையில்...
``மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே ஆந்திர மாநிலம்
புத்தூரில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளைப் போராடி வெற்றி கண்ட இன்ஸ்பெக்டர் இலட்சுமணனை மருத்துவமனைக்கே
சென்று ஆறுதல் சொல்லி, 15 இலட்சம் ரூபாயை
ரொக்கப் பரிசாக அளித்த அம்மா அவர்கள் காவலர்களுக்கெல்லாம் காவலராக விளங்குகிறார்கள். இதைக் கண்டு பொறுக்காத ஒரு 'தள்ளு வண்டி', எனக்கு உடன்பாடில்லை என்று கட்டுரை எழுதுகிறது. காக்கிச் சட்டைகளுக்கு உயர்வு அளித்தால் களவாணிகளுக்கு எரிச்சல்தானே வரும்” என்று பேசினார். அப்போது முதல்வராக அவையில் அமர்ந்திருந்த ஜெயலலிதா உட்பட ஆளும் தரப்பினர் அனைவரும் மேஜையைத் தட்டி விஜயபாஸ்கரின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தனர். முதுமையின் காரணமாக உடல்நலிவுற்றதால் அன்றைக்கு கருணாநிதி வீல் சேரில் பயணிப்பதையே நக்கலாக தள்ளுவண்டி என்று விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.
ஒரு மூத்த அரசியல் தலைவரை, இப்படித் தரம் தாழ்ந்து விமர்சித்ததை அன்று அ.தி.மு.கவில் யாரும் தடுக்கவில்லை. ஆனால்,விஜயபாஸ்கர் பேச்சுக்கு தி.மு.கவினர் எதிர்ப்பு தெரிவித்தபோது,``விஜயபாஸ்கர் யார் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை, பொதுவாகத்தான் சொன்னார்” என்று பதில் அளித்தார் அன்றைக்கு அவை முன்னவராக இருந்த ஓ.பன்னீர் செல்வம்.
அதே பேச்சின் தொடர்ச்சியாக விஜயபாஸ்கர், பட்டாசுக் கடை கதை என்று ஒரு கதையை சொன்னார். அதில் ``கோயம்பேடு ஃபயர் ஒர்க்ஸ் என்று ஒரு கடை உள்ளது. இந்தக் கடையை மச்சான்கிட்ட விட்டுவிட்டு, முதலாளி ரவுண்டுக்கு போய்விட்டார். மச்சான்கிட்ட வெடி வாங்கி பற்ற வைத்தாலும் சத்தமாக வெடிக்க வேண்டிய வெடி மொத்தமாக வெடிக்கவில்லை. வெடி எப்பொழுதும் தண்ணீரிலேயே இருந்ததனால் முழுவதும் நமத்துப் போய்விட்டன” என்று விஜயகாந்த்தை குறிப்பிட்டு கிண்டலாக பேசினார். இவரின் பேச்சை கேட்ட ஜெயலலிதா குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.
மறு நாள் 30-ம் தேதி ஆளுநர் மாளிகையிலிிருந்து செய்திக் குறிப்பு ஒன்று வெளியானது. சுகாதாரத் துறை அமைச்சராக டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பதவியேற்க உள்ளார் என்பதுதான் அந்தக் குறிப்பு. அமைச்சர் பதவி கொடுத்ததன் காரணம் தள்ளுவண்டி என்று கருணாநிதியை குறிப்பிட்டதற்கும், தண்ணீரில் நமத்துப் போன வெடி என்று விஜயகாந்தைக் விமர்சித்தற்கும்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
இன்று!
22-3-21 அன்று விராலிமலை அருகே உள்ள ராசநாயக்கன்பட்டி மாதா கோயில் தெருவில் பிரசாரத்தில் பேசிய விஜயபாஸ்கர் ``கொரானா நேரத்தில் துாங்காமல் நான் பணியாற்றினேன். எனக்கும் சுகர் இருக்கு, பி.பி இருக்கு. எனக்கும் உடம்பில் கோளாறு இருக்கு. அதுக்கு மாத்திரை போட்டுகிட்டிருக்கேன். நானும் பத்து மணிக்குத் துாங்கி ஐந்து மணிக்கு எழுந்து, வாக்கிங் போகலாம். மதியம் ஒரு மணிநேரம் தூங்கி உடம்பைக் கவனித்துக்கொள்ளலாம். ஆனாலும் மனதில் வெறி இருக்கிறது. எடுத்துக்கொண்ட பொறுப்பை ஒழுங்காக செய்யவேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது.
ஏசு நாதர் சிலுவையைச் சுமந்தது போல, நான் விராலிமலை தொகுதியைச் சுமந்துக்கொண்டு இருக்கிறேன்” என்று தனது உடல் உபாதையை வெளிப்படையாக சொல்லி உருக்கமாக வாக்குகளை கேட்டார்.
உங்களுக்கு வந்தா ரத்தம்.. மத்தவங்களுக்குன்னா தக்காளி சட்னியா விஜயபாஸ்கர் அவர்களே?
source https://www.vikatan.com/government-and-politics/policies/vijayabaskar-sympathy-speech-in-campaign
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக