Ad

வெள்ளி, 26 மார்ச், 2021

பன்னீரிடம் 75,000 கோடி பணம் இருக்கு! - போட்டுத் தாக்கும் தங்க தமிழ்ச்செல்வன்

பரபரப்புக்கும் கலகலப்புக்கும் பஞ்சமில்லாத தேர்தல் பிரசாரக் களத்தில், தங்க தமிழ்ச்செல்வனும் தன் பங்குக்கு ரவுண்டு கட்டிவருகிறார். இவரின் ஆஸ்தான கோட்டை ஆண்டிப்பட்டிதான். ஆனால், ‘பன்னீர்செல்வத்தை நீங்கள்தான் வீழ்த்த வேண்டும்!’ எனச் சொல்லி ஸ்டாலின் போடி தொகுதியைக் கைகாட்ட, ஸ்டீயரிங்கைத் திருப்பிவிட்டார் தங்க தமிழ்ச்செல்வன். அவருடன் நாமும்…

போடி தொகுதிக்குச் சொந்தக்காரராக இல்லாவிட்டாலும் தொகுதிவாசிகள் இவரை நன்றாகவே அறிந்துவைத்திருக்கிறார்கள். “என்ன அப்பத்தா, என்னைய தெரியுதா?” என எதிர்ப்படுகிற பாட்டியிடம் இவர் கேட்க, “ஏம்ப்பூ, ஒன்னயத் தான் எல்லா டி.வி-யிலயும் பார்த்திருக்கேனே… படபடன்னு பனைமட்டையில மழை பேஞ்ச மாதிரி பேசுவியே…” எனப் பாட்டி சொல்ல, மொத்தக் கூட்டமும் சிரிக்கிறது. “அத்தாச்சி, அண்ணன்கிட்ட சொல்லி ஆளும் பேருமா நமக்கு வேலையப் பாருங்க…” என ஒரு வீட்டு வாசலில் நின்றபடி தங்க தமிழ்ச் செல்வன் சொல்ல, “அவசியம் சொல்றேன் கொழுந்தனாரே…” என பதில் பாசம் காட்டுகிறார் அந்தப் பெண்மணி.

“உங்களோட பிரசார ஸ்டைலே இப்படித்தானா?” எனக் கேட்டோம். “சார், எதுகை மோனையில, அடுக்கு மொழியில எனக்குப் பேசத் தெரியாது. தொகுதிக்குள்ள எல்லாருமே எனக்கு உறவுமுறைதான். அங்காளி பங்காளின்னுதான் பேசுவேன். ‘அண்ணே’னு வந்து பேசுற பிள்ளைகள்கிட்ட அவங்களோட நல்லது கெட்டதுகளைத்தான் விசாரிப்பேனே தவிர, எனக்கு ஓட்டு போடுங்கன்னு கேட்க மாட்டேன். தொகுதி மக்கள் எல்லாரையும் பார்த்துப் பேசி, அவங்களோட தேவைகளைத் தெரிஞ்சுக்குவேன். அதனால அதைச் செய்வேன் இதைச் செய்வேன்னு சொல்லி எல்லார் மாதிரியும் ஓட்டுக் கேட்க வேண்டிய அவசியம் எனக்கில்லை” எனச் சிரிக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்.

கிராமங்களின் முக்கியப் பிரமுகர்களை வீடு தேடிப்போய்ச் சந்திப்பது, கோயில்களில் பெரிய வர்களை அழைத்துப் பேசுவது, தேநீர்க் கடைகளில் பேசிச் சிரிப்பது என அலுப்புத் தெரியாத அளவுக்கு நடந்தே பரப்புரை செய்கிறார். கூட்டம் திரண்டிருக்கும் பகுதிகளில் வேனில் ஏறிப் பேசுகிறார்.

“குழம்புவைக்க வெண்டைக்காய் வாங்குறப்ப ஒடிச்சுப் பார்த்து வாங்குறீங்க. முருங்கைக்காயை முறுக்கிப் பார்த்து வாங்குறீங்க. ஒரு வேளை குழம்புக்கே தரம் பார்த்து காய்கறி வாங்குற நீங்க, அஞ்சு வருசம் ஆளப்போற ஆளை அசால்ட்டா தேர்ந்தெடுக்கலாமா... யார் வந்தா நல்லது பண்ணு வாங்க, யார் வந்தா மோசம் பண்ணுவாங்கன்னு யோசிக்கணுமா இல்லையா? இத்தனை வருஷமா பன்னீர்செல்வத்துக்கு ஓட்டுப் போட்டீங்களே… அவரால யாருக்காச்சும் நல்லது பண்ண முடிஞ்சுதா? அவரால அவர் புள்ளைகளுக்கு மட்டும்தான் நல்லது நடந்துச்சு. ஒண்ணு ரெண்டு காசில்ல... 75,000 கோடி ரூபா பணத்தை பன்னீரு இப்போ சம்பாரிச்சுவெச்சிருக்கார். இல்லைன்னு அவரால சொல்ல முடியுமா? ஏம்மேல கேஸ் போடச் சொல்லுங்க பார்ப்போம். இவ்வளவு பணத்தை வெச்சுக்கிட்டு என்ன பண்ணப் போறாங்க? பணத்தைக் கொடுத்தாலும், காசைக் கொடுத்தாலும் நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு உங்களுக்கு நல்லாத் தெரியும். தெரியுமா, தெரியாதா?” எனக் கேட்க, கூடியிருக்கும் மக்கள் ‘`தெரியும் தெரியும்’’ என்கிறார்கள்.

அரண்மனைப்புதூர் தொடங்கி 14 பாயின்ட்டுகளுக்கு நீண்ட பயணத்தில் ஆரத்தி, பொன்னாடை என வரவேற்புக்குக் குறைவில்லை. நாகலாபுரத்தில் ஆரத்தி எடுத்த பெண்களில் ஒருவர், “எங்களுக்கு யார் நல்லவங்கனு தெரியும். நாங்க சரியான ஆளுக்குத் தான் ஓட்டுப் போடுவோம். ஆனா, நீங்க ஓட்டுப்போடுற மெஷினைக் காப்பாத்துங்க. ஓட்டுப் போட்டு ஒரு மாசம் கழிச்சு எண்றாய்ங்கன்னா அதுல ஏதோ தில்லுமுல்லு பண்ணப் பார்க் குறாய்ங்கன்னுதானே அர்த்தம்” என்றார்கள் தடாலடியாக. “அப்படி பண்ணாத மாதிரி பாதுகாப்பா நின்னுடுவோம்” எனத் தமிழ்ச்செல்வன் சொல்ல, “போன எம்.பி தேர்தல்ல, நம்ம தேனி தொகுதியில பண்ணுன தில்லுமுல்லு தெரியும்ல. இந்தத் தடவையாச்சும் சூதானமா இருந்துக்கோங்க!” என அறிவுரையும் சொல்லி அனுப்புகிறார்கள்.

“வரவேற்பு, செல்வாக்கு எல்லாம் சரி… முதல்ல அ.தி.மு.க; அப்புறம் அ.ம.மு.க; இப்போ தி.மு.க. இதை மக்கள் தவறா பார்க்க மாட்டாங்களா?” எனக் கேட்டோம்.

“சார், நான் என் மனசுக்குச் சரின்னு பட்டதை மட்டுமே செய்யிறவன். பதவிக்கோ பணத்துக்கோ ஆசைப்பட்டு கட்சி மாறலை. சின்ன வயசுல தவழ்ந்தோம்; அப்புறம் நடந்தோம்; இப்போ விமானத்துல பறக்கவே செய்யிறோம். மாற்றம் நல்லதா இருந்தா ஏத்துக்க வேண்டியதுதானே... ‘அன்னிக்கு தவழ்ந்தீங்க, இப்போ நடக்கலாமா’ன்னு கேட்டா, அது சரியா இருக்குமா? தலைவர் ஸ்டாலின் மட்டும்தான் நாளைய நம்பிக்கைனு நினைக்கிறேன். அதனால அவர் பின்னால நிக்கிறேன்!”

“துணை முதல்வரின் தொகுதி. ஜெயிச்சிட முடியும்னு நம்புறீங்களா?”

“அவரை எதிர்த்து நிக்கிறது நான் இல்லை. எங்க தலைவர். 234 தொகுதியிலயும் ஸ்டாலின்தான் நிக்கிறார். பன்னீர்செல்வமெல்லாம் அவர் பக்கத்துலகூட நிக்க முடியாது!” என்கிறார் நிதானமாக.



source https://www.vikatan.com/government-and-politics/politics/thanga-tamil-selvan-campaign-in-bodi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக