2020 ஆகஸ்ட் 7 அன்று ஒரு கிராம் ரூ.5,416 என்ற உச்ச விலைக்கு விற்பனையான 22 காரட் தங்கம் நேற்று 16% இறங்கி, ரூ.4,655-க்கு விற்பனையானது. மீண்டும் தங்கம் விலை ஏறுமா, எவ்வளவு ஏறும், இப்போது தங்கம் வாங்குவது சரிதானா, நாம் வாங்கிய பிறகு, விலை இன்னும் இறங்குமா என்பது போன்ற கேள்விகள் முதலீட்டாளர்கள் மனதில் எழுவது இயற்கை. தங்க முதலீட்டில் லாபம் பார்க்க எண்ணுபவர்கள் கூடவே வரக்கூடிய தலைவலிகளைப் பற்றியும் அறிந்திருப்பது நல்லது. இது என்ன புதுக்கதை என்று யோசிக்கிறீர்களா? வாருங்கள், தங்கத்தின் புதிய அவதாரங்களையும், அது தரக்கூடிய தலைவலிகளையும் பார்ப்போம்.
தங்கத்தின் மீதான இந்தியர்களின் மோகம் உலகறிந்தது. இவ்வுலகில் உள்ள தங்கத்தில் 20% (சுமார் 25,000 டன்) இந்தியாவின் வீடுகளிலும் கோயில்களிலும் தூங்குகிறது. இது அமெரிக்காவில் உள்ளதைப்போல் இரண்டு மடங்கு. ஆனாலும், தங்கத்தின் மீதான நம் தாகம் தீராததால் ஆண்டுதோறும் 600 டன் முதல் 1,000 டன் வரை தங்கம் இறக்குமதி செய்கிறோம். இது நம் பொருளாதாரத்தையும், ரூபாயின் வலிமையையும் பதம் பார்ப்பதால், தங்கத்தின் இறக்குமதி மீதான வரியை 12.5 சதவிகிதமாக உயர்த்தியது அரசு. ஆனால், தங்கத்தின் இறக்குமதி குறைவதற்குப் பதிலாகத் தங்கக் கடத்தல் அதிகமாகி, அரசுக்கு புதிய சவால்கள் முளைத்ததால் இந்த வரி 7.50 சதவிகிதமாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
தங்க இறக்குமதியைக் குறைக்க 2015-ல் பிரதமர் நரேந்திர மோடி அரசு சில திட்டங்களை முன்வைத்தது. அதில் ஒன்று, இன்றும் வெற்றிகரமாக நடந்தேறும் சாவரின் கோல்ட் பாண்ட். அவசரமாகத் தங்கம் தேவைப்படாதவர்கள் தங்கள் முதலீட்டை இதில் செய்யும்பட்சத்தில் அரசு வருடத்துக்கு 2.50% வட்டி தருவதோடு, எட்டு வருட இறுதியில் அன்றைய தங்க மதிப்பையும் தருகிறது. இன்று இது தங்க முதலீட்டுத் திட்டங்களில் முன்னணி வகிக்கிறது.
அடுத்த திட்டம், வீடுகளில் முடங்கியிருக்கும் தங்கத்தை வெளிக்கொணர்வது. அதிக தங்க நகைகள், தங்கக் கட்டிகள் வைத்திருப்போர் வருடத்துக்கு 500 கிராம் வீதம் அவற்றை வங்கிகளில் முதலீடாக வைத்து வட்டி வருமானம் பெறலாம்; வங்கிகள் அவற்றை நகை செய்வோரிடம் விற்றால் இறக்குமதி குறையும் என்பதே அந்தத் திட்டம். ஆனால், மக்களுக்கு தங்கள் நகைகள் மீதிருந்த அபார பிரியத்தால் அதை முழுவதுமாக இழக்க மனம் ஒப்பவில்லை; மேலும் வருமான வரி அதிகாரிகள் தொல்லை கொடுக்கலாம் என்பது போன்றும் ஏற்பட்ட ஒரு சில பயங்களால் இந்தத் திட்டம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.
இருந்தும், `இந்தியர்களிடம் குவிந்திருக்கும் அபரிமிதமான தங்கத்தை வெளிக்கொணர வேண்டும்; முறையான வரி விதிப்புகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும்' என்ற அரசின் முனைப்பு இன்னும் குறையவில்லை. 2020 ஜூலை மாதம் ``கணக்கில் வராத தங்கத்தை அதிக அளவு வைத்திருப்போர் தாங்களாக முன்வந்து அரசுக்குத் தெரியப்படுத்தி வரி, அபராதம் போன்றவற்றை செலுத்தி பொது மன்னிப்பு பெறலாம்” என்று அறிவிக்கும் யோசனை அரசுக்கு எழுந்தது. ஆனால், முறையாக வரி கட்டும் குடிமக்களுக்கு தாங்கள் வஞ்சிக்கப்படுகிறோம் என்ற எண்ணம் எழக்கூடும் என்று கூறி, உச்ச நீதிமன்றம் இந்த யோசனையை ஏற்க மறுத்துவிட்டது.
இப்படி தங்க இறக்குமதியைக் குறைக்க அரசு பலவாறாகப் போராடும் சமயத்தில், கொரோனா தொற்று, தங்கத்தின் விலையை உச்சத்துக்கு எடுத்துச் சென்றது. டாலர் மதிப்பு, வட்டி விகிதங்கள் எல்லாம் குறைந்த நிலையிலும் தங்கத்தின் மதிப்பு மட்டும் வரலாறு காணாத அளவு ஏறியது. தற்சமயம் விலை சற்று இறங்கியிருந்தாலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசு அறிவித்திருக்கும் ஊக்குவிப்புச் சலுகை பணம் மக்கள் கையில் வரும்போது மறுபடியும் மக்கள் தங்க முதலீட்டில் ஈடுபடுவார்கள்; தங்க விலை ஏறும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் கணித்துள்ளது.
பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி என்று பல வித கடினமான பொருளாதார முடிவுகளை மேற்கொண்ட அரசு கண்டிப்பாக வீடுகளில் பதுங்கியிருக்கும் தங்கத்தை வெளிக்கொணரவும் நடவடிக்கை எடுக்கும் என்பதே அரசு அதிகாரிகள் பலரும் கூறும் ரகசியம். பணமுதலைகளைக் குறிவைக்கும் இத்தகைய நடவடிக்கைகளால் மத்திய வர்க்கத்தினரும் பாதிப்படைவது கண்கூடு. ஆகவே, எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்; என்னென்ன சான்றுகள் கொடுக்க வேண்டியிருக்கும் என்று அறிந்து வைத்துக்கொள்வது நல்லது.
டிசம்பர் 1, 2016-இல் சி.பி.டி.டி (CBDT) அறிவிப்பின்படி, ஒரு இந்தியர் எவ்வளவு தங்கம் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். ஆனால், அதற்கு முறையான கணக்குகள் இருக்க வேண்டும். நம்மில் பலரிடமும் பாரம்பரியமாக வந்த நகைகள், திருமணம் மற்றும் பண்டிகை விசேஷங்களில் பெரியவர்கள் ஆசீர்வாதமாக அளித்த தங்கம் போன்றவை இருக்கும். அதற்கு கணக்கு இருக்க வாய்ப்பில்லை என்பதால், கீழ்க்கண்ட அளவு வரையிலான தங்கத்துக்கு விலக்கு உள்ளது:
திருமணமான பெண் 500 கிராம் வரையும் (சுமார் 62 சவரன்).
திருமணமாகாத பெண் 250 கிராம் வரையும் (சுமார் 31 சவரன்).
ஆண் 100 கிராம் வரையும் (சுமார் 12 சவரன்)
தங்கத்துக்கு கணக்குக் காட்டத் தேவையில்லை. அவர்களின் வருமானத்தில் இவ்வளவு தங்கம் வாங்க இயலாது என்றபோதும் இந்த அளவு தங்கத்தை அரசு பறிமுதல் செய்யாது.
இதற்குமேல் தங்கம் இருக்கும்பட்சத்தில், அதை வாங்கிய ரசீது, அந்த வருடத்தின் வருமான வரித் தாக்கல் நகல் போன்றவற்றைக் காட்ட வேண்டும். பாரம்பரியமாக வந்த தங்கம் எனில், உயில், செட்டில்மென்ட் பத்திரம், தானப் பத்திரம் போன்ற சான்றுகளைக் காட்ட வேண்டும். இவற்றை நாம் விற்கும்போது மூலதன ஆதாய வரி கட்டுவதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
ரூ.50 லட்சத்துக்கு அதிகமாக வருட வருமானம் உள்ளோர், வருமான வரித் தாக்கலின்போது தங்களிடம் இருக்கும் தங்கத்தின் அளவை குறிப்பிட வேண்டும். அதை வருமான வரித் துறை சோதனை செய்ய நேரும்பட்சத்தில், காட்டிய கணக்குக்கும், கையில் உள்ள தங்கத்தின் அளவுக்கும் வித்தியாசம் இருந்தால் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆகவே, தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் முதலில் தங்களிடம் ஏற்கெனவே இருக்கும் தங்கத்தின் அளவைக் கணக்கெடுத்து பின் செயல்படுவது நல்லது. தங்கம் வாங்கிய ரசீதுகளைப் பத்திரப்படுத்தி வைப்பது அவசியம். நாம் வாங்கும் தங்கத்தின் அளவு நம் வருமானத்துக்கு உட்பட்டதாக இருப்பதும் மிக அவசியம். இப்படி நாம் எடுக்கும் சில சிறிய நடவடிக்கைகள் தங்கத்தோடு வரும் தலைவலிகளை விலக்க உதவும்.
இனி தங்கம் மட்டும் வாங்குவோம்; தலைவலிகள் எதற்கு?
source https://www.vikatan.com/business/investment/how-much-gold-we-can-keep-at-home-know-the-gold-storage-limits
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக