தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் யாராக இருக்கும் என்ற விவாதம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இங்கு போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் கடந்த 5-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்து முடிந்தது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், வழக்கறிஞர் எஸ்.எஸ். ராஜ்குமார், அஞ்சும் பூபதி, சன்.ராமநாதன் உள்ளிட்ட பலர் நேர்காணலுக்கு சென்று வந்த நிலையில், இவர்களில் யாருக்கு சீட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலும் எகிறத் தொடங்கியுள்ளது.
நேர்காணலின்போது இவர்கள் ஒவ்வொருவரிடமும், தி.மு.க தலைவர் ஸ்டாலின், டி.ஆர்.பாலு, துரைமுருகன் உள்ளிட்டவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள், இவர்களது ரியாக்ஷன் என்ன என்பதை வைத்து, சுவாரஸ்யமான விவாதங்களும், யூகங்களும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில்தான் தஞ்சை தி,மு.க. தேர்தல் ஆலோசனை கூட்டம், உடன்பிறப்புகளை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி நீண்டகாலமாக தி.மு.க-வின் கோட்டையாகவே திகழ்ந்து வந்தது. 1962-ம் ஆண்டு இங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பரிசுத்த நாடாரை, கருணாநிதி தோற்கடித்தார். 1971,1977,1980 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தி.மு.க.வைச் சேர்ந்த எஸ்.நடராஜன் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றிப்பெற்றார். 1989,1996,2001,2006 ஆகிய ஆண்டுகளில் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில்களில் தி.மு.க.வை சேர்ந்த உபயதுல்லா வெற்றிப்பெற்றார். தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க-வின் அசைக்க முடியாத கோட்டை என பெயர் எடுத்திருந்த நிலையில்தான், கொஞ்சமும் எதிர்பாராத விதமாக, 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் ரங்கசாமி வெற்றிப்பெற்றார்.
இதை தஞ்சாவூர் தி.மு.க-வினர் தங்களுக்கு நேர்ந்த தன்மான பிரச்னையாகவே கருதினார்கள். 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, இங்கு தங்களது கட்சி கண்டிப்பாக வெற்றிப்பெற்று, தஞ்சையை மீண்டும் தி.மு..க-வின் கோட்டையாக்கிவிட வேண்டுமென தி.மு.க தொண்டர்கள் சபதமேற்றார்கள். தஞ்சை தி.மு.க-வில் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த, மறைந்த பூபதியின் மகளான அஞ்சுகம் பூபதிக்கு அப்போது சீட் வழங்கப்பட்டது. இவர் தஞ்சை தி,மு.க-விற்கு மிகவும் ஜூனியர் என்பதால், சீனியர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் கட்சித்தலைமை சொல்லிவிட்டதால், அந்த தேர்தலில் தீவிரமாக வேலைப் பார்ப்பதுபோல் வெளியில் காட்டிக்கொண்டு உள்ளடி வேலைகளை சிலர் அரங்கேற்றினார்கள்.
அவைகளை முறியடித்து, தன்னை தக்க வைத்துக்கொள்ளும் ஆற்றல் அப்போது அஞ்சுகம் பூபதிக்கு இல்லை. இதனால் அ.தி.மு.க. வேட்பாளர் ரங்கசாமி வெற்றிப்பெற்றார். தனது கோட்டையை மீண்டும் ஒரு முறை கோட்டைவிட்டது, தஞ்சை தி,மு.க. 2019-ம் ஆண்டு நடைபெற்ற தஞ்சை தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் தஞ்சை மாநகர தி,மு.க செயலாளர் டி.கேஜி. நீலமேகம் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். இந்நிலையில்தான், இவர் மீண்டும் வாய்ப்பு கேட்டுள்ளார். தஞ்சை தி.மு.க-வின் முக்கிய பிரமுகரும், தஞ்சை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தின் சகோதரருமான வழக்கறிஞர் ராஜ்குமார் தனக்கு சீட் கேட்டுள்ளார். தி.முக. முன்னாள் வேட்பாளர் அஞ்சுகம் பூபதி, தஞ்சை மாவட்ட தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் சன்.ராமநாதன் உள்ளிட்ட இன்னும் பலர் சீட் கேட்டுள்ளார்கள். கடந்த 5-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில்தான் நேற்று தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகர, பேரூர், கிளைக் கழக செயலாளர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள், தி,மு.க தகவல் தொழில்நுட்ப அணி, வழக்கறிஞர் அணி ஆகியோருக்கான தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில்தான் அந்த அட்ராசிட்டி அரங்கேறியது என்கிறார்கள் தஞ்சை கழக உடன்பிறப்புகள். இதில் கலந்து கொண்ட டி.கே.ஜி. நீலமேகம் தரப்பினர் மிகுந்த உற்சாகத்தோடு ‘’நம்ம அண்ணனுக்கு சீட் கன்ஃபாம் ஆயிடுச்சி. தலைமையில சொல்லிட்டாங்க. உற்சாகமாக வேலையைப் பாருங்க’’ என சொல்லியுள்ளார்கள். ’’அப்படியா’ என பலரும் ஆச்சரியத்தோடு இத்தகவலை தங்களது தெரிந்தவர்களிடம் பகிர்ந்துகொள்ள தொடங்கிய அதே நேரத்தில், அஞ்சுகம் பூபதி தரப்பினரோ ‘’நமக்கு தான் சீட். உறுதி ஆயிடுச்சி. வேலையை ஆரம்பிங்க’’என சொல்லியுள்ளார்கள். இதனால் தஞ்சை தி.மு.க-வினர் குழம்பிப் போய் நிற்கிறார்கள்.
`வேட்பாளர் யாருனு கட்சித்தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்குறதுக்கு முன்னாடி, இப்படி கூட்டத்துல சொல்றது, கட்சி கட்டுப்பாட்டுக்கு புறம்பானது. இதை கட்சித்தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்போறோம்’ என ஆதங்கத்தோடு தெரிவிக்கிறார்கள்.
source https://www.vikatan.com/news/politics/thanjavur-dmk-seat-politics-for-2021-assembly-election
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக