ஒப்பீடுகளைத்தாண்டி வருவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஒப்பீடுகள் எப்போதுமே நியாயமானதாக இருக்காது. ஆப்பிளை ஆரஞ்சுடன் ஒப்பிடாதீர்கள் என்பார்கள். ஆனால், நம் சமூகத்துக்கு ஆப்பிளை எப்போதும் ஆரஞ்சுடன் ஒப்பிட்டுத்தான் பழக்கம். இந்தியாவின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் தோனிக்கு மாற்று யார் என்கிற பல காலத் தேடலில் சிக்கியவர்தான் ரிஷப் பன்ட். ஆனால், தோனியிடம் இருந்த வேகம் இல்லை, தோனியைப் போன்று மின்னல் ஸ்டம்பிங் செய்யவில்லை, தோனி போல் பொறுமையில்லை என ஒப்பிட்டு ஒப்பிட்டே, ஆர்வக்கோளாறாக அடையாளப்படுத்தப்பட்டு, மீம்களால் அசிங்கப்படுத்தப்பட்டு, கிட்டத்தட்ட டீமைவிட்டே ஒதுக்கி ஓரங்கட்டப்பவன்தான், இன்று இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக, பேட்டிங் மாஸ்டராக, அடுத்த தோனியாக மட்டுமல்ல அடுத்த சச்சினாக, அடுத்த கோலியாக கம்பீரமாக வந்து நிற்கிறான்.
அவமானங்களும், அவதூறுகளும்தான் ஒருவனை வெற்றியாளனாக்கும் என்பதை நிரூபிக்கும் தரமான சம்பவத்தை தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டேயிருக்கிறார் ரிஷப் பன்ட். ஆஸ்திரேலிய சீரிஸ் பன்ட்டிடம் இருக்கும் மனபலத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்துக்கு எதிரான தொடர் பன்ட், சச்சின், கோலிகளைப்போன்று புது யுகநாயகன் எனச்சொல்லவைத்திருக்கிறது.
டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் கிடையாது... தேர்ந்த விக்கெட் கீப்பர் கிடையாது... குறிப்பாக பெளலர்களுக்கு எந்த லென்த்தில் பந்துவீச வேண்டும் என ஓடிப்போய் சொல்லத்தெரியாது... ஆனால், இந்த 23 வயது இளைஞன்தான் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த 10 ஆண்டுகாலப் பயணத்தைத் தீர்மானிக்கப்போகிறவன். இந்தியாவின் அடுத்த பேட்டிங் சூப்பர்ஸ்டார் ரிஷப் பன்ட்தான்.
பவர்ஃபுல் ஹிட்டர்!
ஒரு பேட்ஸ்மேனின் ஸ்டேன்ஸ் அதாவது அவர் எந்த ஸ்டம்ப்பை நோக்கி கார்டு வைத்திருக்கிறார், அவரது பேட்டின் பேக் லிஃப்ட் என்ன பொசிஷனில் இருக்கிறது என்பதெல்லாம்தான் அவரின் ஷாட்களைத் தீர்மானிக்கும். பிட்ச்சில் திடமாக பேட்டை ஊன்றி விளையாடுவது டெஸ்ட் கிரிக்கெட் ஸ்டைல். ஆனால், டி20 போட்டிகளில் பேட்டை உயரமாகப் பிடிக்கவேண்டும். இதை ஹை பேக்லிஃப்ட் என்று சொல்வார்கள். 140 கிமீட்டர் வேகத்தில் பந்துவரும்போது உடனடியாக ரியாக்ட் செய்ய ஹைபேக் லிஃப்ட் பொசிஷன் அவசியம். அதேப்போல் பேட்டின் காக்கிங் பொசிஷன் என்பது மிக முக்கியம். அதாவது பேட்டின் பிளேட் (பந்தை அடிக்கும் பகுதி) பாயின்ட் ஃபீல்டர்களை நோக்கி இருக்கவேண்டும். அப்போதுதான் சுலபமாக ஷாட்களை ஆடமுடியும்.
இந்த ஹை பேக்லிஃப்ட் பொசிஷன்தான் ரிஷப் பன்ட்டின் பலம். அதேப்போல் கோல்ஃப் விளையாட்டில் டவுன்ஸ்விங் என்கிற பொசிஷன் உண்டு. அதாவது தரையில் இருக்கும் பந்தை கோல்ஃப் ஸ்டிக்கைக்கொண்டு சரியான உயரத்தில்வைத்து, தரையை நோக்கி வேகமாக அடிக்கவேண்டும். இதுதான் டவுன்ஸ்விங். இந்த ஹை பேக்லிஃப்ட், டவுன் ஸ்விங் இரண்டும்தான் ரிஷப் பன்ட்டின் அதிரடி ஆட்டத்துக்கு துணை நிற்கிறது.
பன்ட்'ஸ் இன்ஸ்டிங்க்ட்!
'வேட்டையாடு விளையாடு' படத்தில் கமல்ஹாசன் அடிக்கடி ராகவன்'ஸ் இன்ஸ்டிங்க்ட் என்று சொல்வார். அவர் எங்கே தோண்டச் சொல்கிறாரோ, எங்கே தேடச்சொல்கிறாரோ அங்கே ஒரு தகவல், துப்பு கிடைக்கும். உள்ளுணர்வுதான் இன்ஸ்டிங்ட். பெரும்பாலான நேரங்களில் நம்முடைய உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதைக்கேட்டாலே போதும் நாம் பல பிரச்னைகளில் இருந்து தப்பிவிடுவோம். இதே டெக்னிக்தான் கிரிக்கெட்டிலும். ரிஷப் பன்ட் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதன்படி விளையாடும் வீரன். பெரும்பாலான நேரங்களில் அவரின் உள்ளுணர்வு சரியாக இருப்பதுதான் அவர் தொடர்ந்து வெற்றியாளராக வருவதற்கானக் காரணம்.
பந்து வீச்சாளரின் மனதைப் படித்து, பெளலர் தன் கையில் இருந்து பந்தை ரிலீஸ்செய்யும்போதே அது எங்கே லேண்ட் ஆகும் எனக் கணிக்கும் திறன் பன்ட்டுக்கு அதிகமாகவே இருக்கிறது. அதற்கான சாட்சிதான் ஜேம்ஸ் ஆண்டர்சனின் பெளலிங்கை துச்சமாக மதித்து பன்ட் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடியது. அது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஷாட். அடுத்தப்பந்தை ஆண்டர்சன் இந்த லைன் அண்ட் லென்த்தில் வீசுவார் என அவரின் மனதை முன்கூட்டியே படித்ததால்தான் அந்த ரிவர்ஸ் ஸ்வீப் சாத்தியமானது. பந்து வீச்சாளரின் மனதைப்படிக்கும் திறமை இருப்பதால்தான் அவரால் 0-வில் இருக்கும்போது சிக்ஸருக்கு பேட்டைத்தூக்க முடிகிறது. 90களில் இருக்கும்போது ரிவர்ஸ் ஸ்வீப்புக்கு பேட்டைத் திருப்பமுடிகிறது.
இந்த டெக்னிக்கல் திறமைகள் எல்லாம் ரிஷப் பன்ட்டுக்கு சாதாரணமாகக் கிடைத்துவிடவில்லை. இந்த நிலைக்கு வரத்தான் அவர் நிறைய அவமானங்களையும், அவமரியாதைகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.
ரிஷப் பன்ட்டின் பின்னணி என்ன?!
உத்தராகான்ட் மாநிலத்தின் ஹரித்துவாரில் பிறந்தவர் ரிஷப் பன்ட். மகனுக்கு அதீத கிரிக்கெட் ஆர்வம் இருக்க, அவரது பெற்றோர் ராஜஸ்தானில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் கலந்துகொள்ள அவரை அங்கே அனுப்பிவைத்தனர். ஆனால், ராஜஸ்தான் ரிஷப் பன்ட்டுக்கு செட் ஆகவில்லை. வெளிமாநில வீரர் என்பது ராஜஸ்தான் அணியில் அவருக்கு ஒரு தடையாகவே தொடர டெல்லிக்கு மாற்றி, ஷேவாக், தவான், கம்பீர் ஆகியோருக்கு பயிற்சியாளராக இருந்த தாரக் சின்ஹாவின் சோனட் அகாடமியில் சேர்க்கப்பட்டார் பன்ட். அங்கிருந்து தொடங்கிய கனவுதான் இன்று உலகமே கொண்டாடும், வியந்துபார்க்கும் கிரிக்கெட் வீரனாக ரிஷப் பன்ட்டை மாற்றியிருக்கிறது.
அண்டர் 12, அண்டர் 14 போட்டிகளில் தொடர்ந்து அதிரடி காட்டியவருக்கு அண்டர் 19 அணியில் இடம்கிடைத்தது. விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் பன்ட்டின் பெருமைகள் கூடிக்கொண்டே போயின. 2016-ல் வங்கதேசத்தில் நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பைத்தொடரில் விளையாட இந்திய அணியில் இடம் கிடைத்தது. நேபாளத்துக்கு எதிரான லீக் போட்டியில்தான் ரிஷப் பன்ட் என்கிற பொடியன் ஒருவன் இருக்கிறான், வருங்காலத்தில் பல சம்பவங்கள் செய்வான் என்பதற்கான சமிக்ஞைகள் தெரிந்தது. நேபாளம் 48 ஓவர்களில் 169 ரன்கள் அடிக்க, சேஸிங்கிறகு இஷான் கிஷனுடன் ஒப்பனிங் இறங்கினார் ரிஷப் பன்ட். 18 ஓவர்களில் இந்தியாவின் சேஸிங் முடிந்தது. காரணம் ரிஷப் பன்ட்.
பவுண்டரியோடு அந்த இன்னிங்ஸைத் தொடங்கிய ரிஷப் பன்ட்டின் கையில் சிக்கி சின்னாபின்னமானார்கள் நேபாள பெளலர்கள். சிக்ஸர்களால் சுளுக்கெடுத்த ரிஷப் பன்ட், 18 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். இன்றுவரை அண்டர் 19 உலகக்கோப்பையில் அடிக்கப்பட்டிருக்கும் அதிவேக அரை சதம் இது. மொத்தம் 24 பந்துகளில் 78 ரன்கள். மற்ற அணிகள் எல்லாம் மிரள ஆரம்பித்தன.
அண்டர் 19 பர்ஃபாமென்ஸ் 18 வயதான ரிஷப் பன்ட்டை அப்படியே ரஞ்சிக்கோப்பைக்கான டெல்லி அணிக்குள் கொண்டுவந்தது. 2016 - 17 சீசனில் டெல்லி அணி குரூப் ஸ்டேஜையேத் தாண்டவில்லை. ஆனால், அதிரடி பேட்டிங்கில் மிரட்டிவிட்டார் ரிஷப் பன்ட். 12 இன்னிங்ஸ்களில் 972 ரன்கள். ரஞ்சிக்கோப்பையில் எல்லா பேட்ஸ்மேன்களின் ஸ்ட்ரைக் ரேட்டும் 50-60க்குள் இருக்க, ரிஷப் பன்ட்டின் ஸ்ட்ரைக் ரேட் 107. இந்ததொடரில் மட்டும் 4 சதம், 2 அரைசதம், 49 சிக்ஸர், 103 பவுண்டரிகள் என பன்ட்டின் ஆட்டம் பரபரக்கவைத்தது.
அந்த சீசனில் ஜார்கண்டுக்கு எதிராக இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சென்சுரி அடித்து அலறவிட்டார் ரிஷப் பன்ட். ஜார்கண்டின் இஷான் கிஷன் இந்தப்போட்டியில் 273 ரன்கள் அடிக்க, ஜார்கண்ட் 493 ரன்கள் குவித்தது. முதல் இன்னிங்ஸில் ரிஷப் பன்ட் 117 பந்துகளில் 106 ரன்கள் அடித்தாலும், டெல்லி 334 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி ஃபாலோ ஆன் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் வெறியாட்டம் ஆடினார் பன்ட். 48 பந்துகளில் 100 ரன்கள் அடித்தவர் மொத்தம் 67 பந்துகளில் 135 ரன்கள் குவித்தார். இதற்கு முன்னதாக மகாராஷ்டிராவுக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 308 ரன்கள் அடித்தார். 42 பவுண்டரி 9 சிக்ஸர். ஐபிஎல் அணிகள் ரிஷப் பன்ட்டின் மீது முழு கவனத்தையும் குவித்தன.
ஐபிஎல் அறிமுகம் - தந்தை மரணம்!
2016 ஐபிஎல் சீசனுக்கு 10 லட்சம் ரூபாய் ஆரம்பவிலைக்கு ஏலத்துக்கு வந்தவரை 1.9 கோடி ரூபாய்க்கு போட்டிப்போட்டுக்கொண்டு ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ் (அப்போதைய டெல்லி டேர்டெவில்ஸ்). ரிஷப் பன்ட் செம ஹேப்பி. ஆனால், அந்த சீசன் பன்ட்டுக்கு சரியாக அமையவில்லை.
2017- சீசனிலும் டெல்லியிலேயே தொடர்ந்தார். ஏப்ரல் 8-ம் தேதி முதல் ஐபிஎல் போட்டியில் பெங்களூருவுக்கு எதிராக விளையாட ஆயத்தமாகிக்கொண்டிருந்தவருக்கு திடீரென வந்தது அந்த செய்தி. நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த தந்தை திடீரென தூக்கத்திலேயே இறந்துவிட்டார். மகனாக எல்லா கடமைகளையும் முடித்து அணிக்குள் வந்தவர் சோர்ந்துபோகவில்லை. அவரின் துயரம், கோபம் எல்லாம் அவரது பேட்டிங்கில் தெறித்தது. 36 பந்துகளில் 57 ரன்கள். 3 பவுண்டரி 4 சிக்ஸர். தலைப்புச்செய்தியானார் பன்ட்.
2018-ல் கெளதம் கம்பீர் தலைமையில் ஐபிஎல் தொடரை சந்தித்த டெல்லி அணிக்குத் தொடர் தோல்விகள். முதல் ரவுண்ட் அதாவது 7 போட்டிகள் முடியும்போது இரண்டே போட்டிகளில் வென்று கடைசி இடத்துக்குப்போய்விட்டது டெல்லி. ப்ளேஆஃப் கனவு கிட்டத்தட்ட முடிந்துபோய், பாதியில் கெளதம் கம்பீர் கேப்டன்ஸியில் இருந்து விலகி, ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகி டெல்லி அணியே தளர்ந்ததுபோயிருந்தது. ஆனால், ரிஷப் பன்ட் தளரவில்லை.
ஒவ்வொரு போட்டியிலும் செம என்டர்டெய்னிங் இன்னிங்ஸ் ஆடினார். சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராகத்தான் ரிஷப் பன்ட்டின் முதல் அதிரடி ஆட்டம் தொடங்கியது. சென்னையில் காவேரி நீர் பிரச்னை உச்சத்தில் இருந்ததால் புனேவில் நடந்த இப்போட்டியில் முதலில் ஆடிய சூப்பர் கிங்ஸ் 211 ரன்கள் குவித்தது. 2 விக்கெட்டை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த டெல்லியின் நம்பிக்கையாய் உள்ளே வந்தார் பன்ட். வாட்சன் பெளலிங் போட சந்தித்த முதல் பாலே சிக்ஸர். 34 பந்துகளில் அரைசதம் அடித்தவர் 45 பந்துகளில் 79 ரன்கள் அடித்தார். டெல்லி தோற்றாலும் பன்ட்டின் ஆட்டம் சூப்பர் கிங்ஸை பதைபதைக்கவைத்தது.
ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் டாப்கியரில் பறந்தார் பன்ட். 36 பந்துகளில் 50 ரன்கள் அடித்தவர் அடுத்த 50 ரன்கள் அடிக்க வெறும் 20 பந்துகளே எடுத்துக்கொண்டார். 63 பந்துகளில் 128 ரன்கள் அடித்து நாட் அவுட். ஆனால், இந்தப்போட்டியிலும் டெல்லி தோற்றதால் பன்ட்டின் ஆட்டம் பயனற்று போனது.
டெல்லிதான் இந்த ஐபிஎல்-ல் கடைசி இடமான எட்டாவது இடத்தைப்பிடித்த அணி. ஆனால், லீக் ஸ்டேஜையேத் தாண்டாத டெல்லி அணியின் ரிஷப் பன்ட்தான் அந்த சீசனின் இரண்டாவது டாப் பேட்ஸ்மேன். 14 போட்டிகளில் 684 ரன்கள். 17 போட்டிகளில் விளையாடிய கேன் வில்லியம்சனைவிட 51 ரன்களே குறைவு. இந்த ஐபிஎல்-ல் பன்ட்டின் ஸ்ட்ரைக் ரேட் 170.
இந்த ஐபிஎல் பர்ஃபாமென்ஸ்தான் தோனிக்கு மாற்று வீரர் வந்துவிட்டார் என, ரிஷப் பன்ட்டை தோனியோடு ஒப்பிடவைத்து அவரது கரியரை ஆட்டம் காணவைத்தது.
இந்திய அணிக்காக சிலபல சிறப்பான இன்னிங்ஸ்கள் ஆடினாலும் நிலையான இடம் கிடைக்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்திலேயே சென்சுரி அடித்தாலும் விருத்மான் சாஹா, மீண்டும் தினேஷ் கார்த்திக் என தோனிக்கான இடத்தை வெவ்வேறு வீரர்களைக்கொண்டு நிரப்பமுடியுமா என முயற்சித்துக்கொண்டேயிருந்தது இந்திய அணி. ரிஷப் பன்ட்டுக்கு கொடுத்த வாய்ப்புகள் போதும் வெளிப்படையான விமர்சனங்கள் எழுந்து, கிட்டத்தட்ட அவரை ஒதுக்கிவைக்கும் நிலை உருவானது.
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளிலும் ரிஷப் பன்ட்டின் ஆட்டம் எடுபடவில்லை. 14 இன்னிங்ஸ்கள் ஆடி வெறும் 343 ரன்கள் மட்டுமே அடித்தார். ஒரேயொரு அரைசதம். பன்ட் இனி இந்திய அணிக்குள் வரமாட்டார் என்று எல்லோருமே கிட்டதட்ட முடிவுரை எழுதிவிட்டார்கள்.
டி20, ஒருநாள் போட்டிகளுக்கு கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக இந்திய அணியில் நிரந்தர இடம்பிடித்துவிட்டார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரிலும் கேஎல் ராகுல்தான் இந்தியாவின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன். டெஸ்ட் அணிக்கும் விருத்மான் சாஹாதான் முதல் சாய்ஸ். இந்தியா 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி சாதனைப்படைத்த அடிலெய்ட் டெஸ்ட்டிலும் விருத்மான் சாஹாதான் விளையாடினார். ரிஷப் பன்ட்டுக்கு இந்திய அணியில் கிட்டத்தட்ட இடம் இல்லை என்கிற நிலைதான்.
ஆனால், இரண்டாவது டெஸ்ட் எல்லாவற்றையும் மாற்றியது. இடது கை ஆட்டக்காரர் வேண்டும் என பன்ட் அணிக்குள் மீண்டும் கொண்டுவரப்பட்டார். மெல்போர்ன் டெஸ்ட்டில் இடம்கிடைத்தது. இந்தமுறை கிடைத்த இடத்தை சரியாகப் பிடித்துக்கொண்டார் பன்ட். மூன்றாவது டெஸ்ட்டில் தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணியை தனது 97 ரன்கள் மூலம் மீட்டு டிரா செய்தவர், நான்காவது டெஸ்ட்டில் 89 ரன்கள் அடித்து இந்தியாவை வரலாற்று வெற்றிகாண வைத்தார்.
ஆஸ்திரேலிய தொடர் தந்த உற்சாகத்தில் இப்போது இங்கிலாந்துக்கு எதிரானத் தொடரிலும் பல சம்பவங்கள் செய்துவிட்டார். டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டுகளான கோலி, புஜாரா, ரஹானேவே சென்னை, அகமதாபாத் பிட்ச்களில் பேட்டிங் ஆடத்திணற பன்ட், இந்த பிட்ச்களில் எப்படியாடவேண்டும் என ரன்மெஷின்களுக்கே பாடம் எடுத்திருக்கிறார்.
தற்போது ஃபினிஷராக இருக்கும் ரிஷப் பன்ட்டை ஓப்பனராகவும் இறக்கி இந்திய அணி சில புதிய முயற்சிகள் எடுக்கலாம். அடுத்தடுத்து இரண்டு டி20 உலகக்கோப்பைகள் நடைபெற இருக்கும் நிலையில் ஓப்பனராகவும் பன்ட் இறங்கினால் அது இந்திய அணிக்கு இன்னும் பலம் சேர்க்கும்.
இந்திய கிரிக்கெட்டில் ரிஷப் பன்ட்டின் காலம் தொடங்கியிருக்கிறது. காத்திருப்போம்... இன்னும் பல அதிரடிகளைக் காண!
source https://sports.vikatan.com/cricket/rishabh-pant-is-not-another-dhoni-he-is-competing-with-sachin-and-kohli
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக