கொரோனா தொற்று நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் குறைந்து இருந்தாலும் மகாராஷ்டிராவை மட்டும் விட்டபாடில்லை. தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் மேல் இருந்து வருகிறது. நேற்று 11,141 என்ற எண்ணிக்கையில் கொரோனா தொற்று இருந்தது. முந்தைய இரண்டு நாட்களான வெள்ளி, சனிக்கிழமைகளில் 10,216, 10,118 என்ற எண்ணிக்கையில் இருந்தது. நேற்று ஒரே நாளில் கொரோனாவிற்கு 38 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையிலும் நேற்று 1,188 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக பரவியது. கடந்த 4 நாட்களாக மும்பையில் ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் உள்ள கொரோனா எண்ணிக்கை இந்தியாவின் புதிய கொரோனா தொற்று அளவில் 59 சதவீதம் ஆகும். மாநிலத்தில் மும்பை, புனே, நாக்பூர், அமராவதி, தானே ஆகிய நகரங்களில்தான் அதிகப்படியான கொரோனா தொற்று இருக்கிறது. இது குறித்து மத்திய அரசு மிகவும் கவலை தெரிவித்துள்ளது. கொரோனா அதிகமாக இருக்கும் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மத்திய குழு ஆய்வு நடத்தி, மாநில அரசுக்கு சில ஆலோசனைகளை வழங்கி இருக்கிறது.
பொதுமக்களிடம் கொரோனா தொடர்பான பயம் இல்லாமல் இருப்பதே இந்த அளவுக்கு அதிகரிக்க காரணம் என்று அக்குழு தெரிவித்துள்ளது. அதோடு சமீபத்திய பஞ்சாயத்து தேர்தல், திருமணங்கள், பள்ளிகள் திறப்பு, பொது போக்குவரத்தில் இருக்கும் அதிகப்படியான கூட்டம் போன்றவையும் கொரோனா தொற்று அதிகரிக்க காரணமாக இருக்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிப்பதிலும், கண்காணிப்பு மற்றும் சோதனை போன்றவற்றை தீவிரப்படுத்தும் படியும் மாநில அரசை மத்திய குழு கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் பகுதியில் சோதனையை நூறு சதவீதமாக மாற்றும்படியும் 5 நாட்களுக்கு ஒரு முறை சோதனை மேற்கொள்ளும்படியும், வீட்டில் தனிமையில் இருப்பவர்களை தீவிரமாக கண்காணிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதியிலும் கொரோனா வேகமாக பரவுகிறது. எனவே எச்சரிக்கையுடன் இருக்கும்படி மத்திய குழு கேட்டுக்கொண்டுள்ளது.
மும்பை, விதர்பா, புனே மண்டலத்தில் அதிகப்படியான கொரோனா தொற்று இருப்பதால், கடந்த 10 நாட்களில் மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் மும்பையில் மீண்டும் புறநகர் ரயில்களில் பயணம் செய்ய பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது. கொரோனாவில் ஏற்கனவே ஏராளமானோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து இருக்கின்றனர். மீண்டும் கட்டுபாடுகள் கொண்டு வந்தால் மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்று அனைத்து தரப்பினரும் அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
100 வயது மூதாட்டிக்கு தடுப்பூசி!
இதற்கிடையே முதியோர்களுக்கு மகாராஷ்டிராவில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மும்பை விலே பார்லே பகுதியை சேர்ந்த 100 வயது பிரபாவதி என்ற பெண், தனது 100 வது பிறந்த நாளில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தனது மகன் மற்றும் குடும்பத்தினருடன் சென்று பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள கொரோனா சென்டரில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் இருந்து மும்பை வந்த பிரபாவதி கடந்த 74 ஆண்டில் பல இடங்களில் மாறிமாறி வசித்துவிட்டு இப்போது விலே பார்லேயில் வசித்து வருகிறார். மும்பையில் தினமும் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.
source https://www.vikatan.com/news/general-news/corona-outbreak-crosses-10000-in-maharashtra-for-third-day-in-a-row
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக